கண்கள்

=======
உல்லாசக் கைவீசி நடக்கும்
சாலை நடுவே நீள்கின்ற
வறுமையின் கரங்கள் பாராமல்
முகம்திருப்பும் கண்களின் வழியே
ஒப்பனை களைந்த இதயத்தின் முகம்
மிகத்தெளிவாக தெரிகிறது .

இராமனைக் கணவனாய் அடைந்த
பெருமிதம் அணிந்த சீதையின்
கைப்பிடித்து நடக்கையில் எதிர்படும்
சுந்தரகாண்டத்தை மேய்கின்ற கண்கள்
பாவத்தைச் சேமித்துவைக்க்கும்
நரகத்தின் வங்கியாகவும்
மாறிவிடுகிறது

இயற்கையின் எழில்கண்டு
மெய்மறந்து போகின்றத் தன்மைக்கு
வாசற்கதவாய் இருக்கின்ற கண்கள்
நாத்திகனின் இதயத்தின் கோயிலிலும்
கடவுளை கொளுவேற்றுகின்றன.


நிகழ்கின்ற சம்பவங்களுக்கு
சாட்சியாவதிலிருந்து தப்பித்துக்
கொள்கின்ற கண்களின் வழியே
சட்டத்தைக் குருடாக்கும் கண்கள்
நிரபராதிக்கு தூக்கும்
குற்றவாளிக்கு விடுதலையும்
வாங்கிக் கொடுக்கத் துணை செய்கின்றது

விழித்துக்கொண்டிருக்க
திருடிச்செல்லும் கண்களில் ஒன்று
வாழ்க்கையின் துணையெனத்
தூண்டில் இடுகையில் சிக்கிக்கொள்ளும்
இதயத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது
சொர்க்கம் நரகம்

குரூரங்களை படம்பிடித்து
பீதியை வாழவைக்கின்ற கண்கள்
நினைவுகளின் சுவரில்
வடுக்களை வரைந்துவிடும்
தூரிகையாகிக் கொள்கின்றன

நிஜங்களின் சுயரூபம் தெரியாத
குருடனின் கண்கள் தாம்
அதிர்ஷ்டம் வாய்க்கப்பெற்றவை
என்றாலும் உலகத்தைக்
காணமுடியவில்லையே என்னும்
ஏக்கத்தில் அழுதுகொள்கின்றன.

காணக்கிடைத்த கண்களால்
காணக் கூடாததை காணும்
காட்சிகளை விரித்துவைத்தும்
காணமுடியாத கண்களால்
காணமுடியவில்லையே என்னும்
கவலையை பதுக்கிவைத்தும்
கண்டு கொண்டிருக்கும்
கடவுளின் மூன்றாம் கண்ணால்
தீர்மானிக்கப்படுகின்றது
கண்கள் கண்களாகும் வரம்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Mar-17, 10:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kangal
பார்வை : 113

மேலே