அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

செல்லுமிட மெல்லாம் சிறப்பென்றக் கூற்றுணர்த்தும்
கல்விதனைக் கற்கக் கருந்திநீ – சொல்பொருள்
சூட்சுமம் தேடிச் துவைத்திடில் முன்னேற்றம்
காட்சியாய் தோன்றும் கனிந்து.

முயற்சியே இல்லாமல் முன்னேற்றம் வந்து
வியப்புற வைக்குமோ வாழ்வில்? – தயக்கம்
களைந்து புறப்படு காண்பாய் உழைப்பால்
விளைந்திடும் வெற்றிக் கனி.

எப்போதும் சந்தோசம் இல்லையெனப் பாடுகின்ற
ஒப்பாரி பாட்டுக்கு உன்பாட்டில் - தப்பான
தாளத்தைப் போடாதே! தன்னிலை தானுணர்ந்து
நீளமாகு நேசம் நிறைத்து.

குற்றங்கள் இன்றி குவலயத்தில் மாந்தரில்லை.
சுற்றங்கள் கூடச் சுடுமுன்னை. – வெற்றிக்காய்
கற்கின்றப் பாடம் கசப்பான தென்றாலும்
உட்கொள்ள வேண்டும் உணர்ந்து.

வழியில்லை என்றே வருத்தங்கொள் ளாதே!
வழியின்றி நிற்கின்றோர் வாழ்வின் – வழிக்கு
வலிசுமந்து நீயே விழியாகிப் பாரு
புலியொதுங்கும் உன்னுயர்வு பார்த்து.

தூங்குகின்ற கண்ணைத் துடைத்தெழுந்து பாரிங்கே
ஏங்குகின்றோர் ஏராள முன்போலே – தாங்கிவிடு.
அச்சாணி இன்றேல் அழகானத் தேர்கூட
முச்சாணு மோடா துணர்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Mar-17, 9:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 359

மேலே