உலகமும் உறவும் மாற யார் காரணம்
உலகம் மாறுகிறது
யார் காரணம்?
உறவுகள் விலகுகிறது
யார் காரணம்?
சமைக்கும் உணவைக் கூட
ஒட்டாத பாத்திரத்தில் சமைத்து
உறவுகளையும் நம்மோடு
ஒட்டாது ஆக்கிவிட்டோம்!
உண்ணும் முறையை மறந்தோம் - தினம்
நோயாளிகளாய் பிறந்தோம்!
துரித உணவுகளையே உண்டோம் - இதனால்
துரிதமாய் மாண்டோம்!
இயற்கை வாழ்வை மாற்றி
இயந்திர வாழ்க்கைக்கு மாறினோம்!
ஆபத்து என உணர்ந்தும்
அதையே தினம் செயத் துணிந்தோம்!
நாகரீகம் என்னும் பெயரால்
நம்மை நாமே கூறுபோட்டோம்!
காலம் மாறியது என்றெண்ணி
காலாவதி ஆகிப் போனோம்!
விஞ்ஞானத்தில் காட்டும் அக்கறையை - நம்
மெஞ்ஞானத்தில் காட்ட மறந்தோம்!
நிலவில் தண்ணீர் தொடும் நாமோ - தண்ணீருக்காய்
பூமியில் தினம் கண்ணீர் விட்டோம்!
காக்க வேண்டியதையெல்லாம் மறந்து
காக்கையாய் பறந்து கொண்டிருக்கிறோம்!
காட்டை அழித்து வீட்டை கட்டி
நாட்டை நாமோ கோட்டை விட்டோம்!
செய்வதையெல்லாம் தெரிந்தே செய்தொம்!
நல்லதை மட்டும் செய்ய மறந்தோம்!
எல்லாவற்றையும் நாமே செய்தொம்!
பழியை மட்டும் ஏற்க மறுத்தோம்!
உலகம் மாறுகிறது என்று
உடுக்கை போல் உளறல் கொண்டோம்!
உறவுகள் பிரிகிறது என்பதை
உணர்ந்தும் ஒதுங்கி கொண்டோம்!
ஒவ்வொரு செயலுக்கும்
நாமே பொறுப்பேற்க வேண்டும்!
பொறுப்பை உணர்ந்து
பொறுமையாய் செயல்பட வேண்டும்!
உலகம் மாறவில்லை
மாறுவது நீயே!
உறவுகள் விலகவில்லை
விலகுவது நீயே!
உண்மையை உணர்ந்தால்
உலகமும் நம்மோடு!
உணர்வுகளை மதித்தால்
உறவுகளும் கைக்கூடும்!......