அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்
வழக்கம் போல அன்று காலையும் பரபரப்பாக தொடங்கியது பத்மினிக்கு.
அதிகாலை நான்கு மணியென்பது எப்படித் தெரியுமோ என்னவோ அலாரம் வைத்தது
போல எழுந்து விடுவாள்.
25 வருட காலமாக அதேநேரம் எழும்பி பழக்கப்பட்டவளுக்கு வேறயாக அலாரம்
என்றுமே தேவைப்பட்டது இல்லை.
எவ்வளவு நேரத்தோடு எழும்பினாலும் தன்னை தானே கவனிக்க நேரமில்லாத
ஏழை குடும்பத்தலைவி தான் இந்த பத்மினி.
அதிகாலை எழுவாள் வீடு முற்றம் பெருக்கி வாசல் தெளித்து கோலம் போடுவாள்.
கணவரோ அசைவம் சாப்பிட மாட்டார், மகன் குமாரோ சோறே சாப்பிட மாட்டான்.
இருவருக்கும் வெவ்வேறாக சமையல் செய்வாள், அந்த ரெண்டு சமையலில்
எதைச் சாப்பிட தோன்றுகின்றதோ அதில் கொஞ்சம் தனக்கும் சேர்த்துச் சமைப்பாள்.
சமைத்துக்கொண்டே துணியும் துவைப்பாள், பின் அவள் குளித்து ரெடியாகி இரு கைகளுமற்ற
கணவனுக்கு ஊட்டிவிட்டு, மகனையும் சாப்பிடவைத்து மத்திய
உணவை குமாருக்கு பொதிசெய்து அவனை வழியனுப்பிவிட்டு, மிச்சமிருக்கும்
கணவரின் வேலைகளை முடித்துவிட்டு கடைக்கு ஓடுவாள்.
அங்கேயும் அவள் கடமைகளை குறைவில்லாமல் செய்யும் பத்தமினி,
மத்திய சாப்பாட்டுக்கு அவளுக்கு கொடுக்கும் ஒருமணி நேர இடைவெளியில்
வீட்டிற்கு ஓடிச்சென்று கணவனின் தேவைகளை செய்து சாப்பாட்டையும் ஊட்டிவிட்டு,
மீண்டும் கடைக்கு ஓடுவாள்.மீண்டும் இரவு ஏழு மணிக்கே வீடுதிரும்புவாள்.
ஐந்து மணிக்கே வீட்டுக்கு வரும் குமார் தேனீர் ஊற்றி அப்பாவிற்கும் கொடுத்து,
அம்மாவிற்கும் வைப்பான்.
தேனீர் குடிக்கும் நேரம் மட்டுமே கணவனோடும் பிள்ளையோடும் சந்தோசமாக
சிரித்துப்பேச பத்மினிக்கு கிடைக்கும் சந்தர்ப்பம்.
அதன்பின் இரவு சாப்பாட்டை சமைத்து பரிமாறிவிட்டு,
அவளும் சாப்பிட்டு படுக்க இரவு பதினோன்று ஆகிவிடும்.
மீண்டும் அடுத்த நாள் நான்குமணி என அவளின் வாழ்க்கை
சுழன்று கொண்டே இருக்கும்.
இப்படி உழைத்தவளோ கஷ்டப்பட்டவளோ இல்லை இவள்.
பத்மினிக்கு வேலை செய்ய இருவரை வைத்திருந்தவன் தான் அவளது கணவன்.
அன்பிற்கும் உயிர்கொடுத்து மனைவியை பார்த்துக்கொண்டவன்,
ஒரு விபத்தில் கைகள் இரண்டும் பறிபோக மெஷின் போல் ஆகிப்போனாள் பத்தமினி.
கணவனையும் ஒரு குறையில்லாமல் பார்த்துக்கொண்டு,
மகனையும் பட்டப்படிப்பு படிக்கவைத்துக்கொண்டும்,
வீட்டுவேலைகளை செய்துகொண்டும் பம்பரம் போல வலம்வருகிறாள்.
வழமை போல அன்றும் மத்தியசாப்பாட்டை ஊட்டிவிட வீடு வந்த பத்தமினி,
ஓ என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.
கண்களில் இருந்து நீர்வடிய பேசமுடியாமல் திணறும் கணவனைக்கண்டு அதிர்ந்தாள்.
அழுதுகொண்டே முதலுதவிகளைச் செய்தாள்.
எதோ பேசமுற்பட்டவரை இப்போதைக்கு பேச வேண்டாம் என்று தடுத்தவளின்
கைகளையும் தள்ளி விட்டு,
"என்ன மன்னிச்சுடுமா உன்ன நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைச்சன்
எல்லாமே தலைகீழாச்சு''
என்று அழுத கணவனின் கடைசி வார்த்தைகள் அவைகள்தான்.
டாக்டரிடம் அழைத்துச்சென்றாள்.
போகும் போது கையை அழுத்தியவன் தான்,
கணவனின் கையழுத்தம் அவளால் தங்க முடியாதளவு வலித்தது.
அந்த வலியும் வலியாய் தெரியவில்லை பத்மினிக்கு
அதுவே தான் அவனின் இறுதியுமானது .
கணவரின் உயிரற்ற உடலை தான் மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்தாள்.
காரியம் முடிந்தது சொந்தமென்று மூன்று நான்கு பேர் வந்திருப்பார்கள் அவ்வளவே.
கணவரிடம் பணமிருக்கும் போது வந்து குமிந்த சொந்தங்களை
குமரப்பாவின் விபத்தின் போது கண்டது தான், அதுவும் இறப்புக்காக வந்திருந்தார்கள்.
வந்ததே ஆச்சரியம் தான். நன்றி கேட்ட உலகம்.
கணவனின் ஞாபகம் அவளை அணு அணுவாக கொன்றது.
தனியான பத்மினிக்கு அழுவதை தவிர வேறென்ன செய்யவேண்டும் என்பது கூட புரியவில்லை.
நேற்றிருந்த அன்புக் கணவன் இன்றில்லை. எவ்வளவு கஷ்டமிருந்தாலும் கணவன் மனைவிக்கிடையில்
அன்பு மட்டும் நிறைந்தே இருந்தது.
அன்பான பேச்சுக்கும் சிரிப்பிற்கும் பஞ்சமே இருந்ததில்லை.
அன்பிற்கு இலக்கணம் அவன் ஆதலால் தான் இதனை வருட கஷ்டமான வாழ்வும்
எளிதாக கடந்து போனது. அனால் இன்று எதுவுமே இன்றி வெறிச்சோடி கிடந்தது வீடு.
நாளையில் இருந்து ஒருசாப்பாடு சமைத்தால் போதும் மதியம் அவசர அவசரமாக மதியம்
ஓடிவரவோ தேவையிருக்காது எண்ணும் போதே இன்னும் அதிகமாக வலித்தது.
அப்பாவை இரண்டு வயதிலேயே இழந்தவள் பத்மினி.
தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவள்.
பத்மினியின் பதினைந்து வயதிலேயே அம்மாக்கு சுகயீனம் அடைந்து
படுத்த படுக்கையாக இருக்கும் போதே அவசரமாக மாப்பிள்ளை தேடி
மணமுடித்து வைத்தாள் தாய்.
பயந்துகொண்டு கழுத்தை நீட்டியவளுக்கு வரப்பிரசாதமாகவே கணவன்அமைந்தான்.
மகன் போல் பத்மினியின் தாயையும் பார்த்துக்கொண்டு,
பத்மினியையும் பெற்றோரைப் போல அரவணைத்தான்.
அவன் இறக்கும் கடைசி நொடிவரையில் அப்படித் தானே நடந்துகொண்டான்.
எல்லா நினைவுகளையும் மீட்டிப்பார்த்தவளுக்கு தாங்க முடியாது போனது,
அவளுக்கும் இறந்து விடவே தோன்றியது. இனி என்ன செய்வேன் என்று
அழுதழுது மாய்ந்தவளை குமார் சமாதப்படுத்தினான்.
அதன் பின் மகனுக்காக மட்டுமே உழைத்தாள்.
வருடங்கள் ஓடியது மகனின் இன்ஜினியர் படிப்பும் முடிந்தது.
நல்ல வேலைக்கும் சென்றான்.
போதுமம்மா நீ வேலைசெய்தது என்று வேலையிலிருந்து நிப்பாட்டினான்.
இருந்த வீட்டை உடைத்து பெரிய வீடும் கட்டினான்.
கைநிறைய சம்பாதித்து தாயிடம் கொடுத்தான்.
கணவன் இல்லை என்ற தவிப்பைத்தவிர குறையேதுமில்லை பத்மினிக்கு.
குமாருக்கும் கல்யாண வரன் வர ஆரம்பித்தது.
இதோ இப்ப தான் பிறந்தான் போல இருக்கு அதுக்குள்ள
அவனுக்கு கல்யாண வயதும் வந்துட்டு...அவன் நல்லா இருக்கணும்.
கடவுளே அது போதும் எனக்கு என்று வேண்டிக்கொண்டே வெளியே வந்தவள்,
மகனருகே போய் அமர்ந்தாள் .
மெதுவாக தலையை வருடிவிட்டாள் ''அம்மா என் செல்ல அம்மா'' எனக் கட்டிக் கொண்டான் குமார்.
இது தான் சந்தர்ப்பம் என மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் பத்மினி.
"இங்க பாரு கண்ணா எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா உடம்புக்கு அசதியா இருக்குது.
முன்ன மாதிரி எதுவுமே முடியுறதில்லப்பா" என்றது தான் தாமதம்,
"ஐயோ அம்மா என்னாச்சும்மா உனக்கு.. வா டாக்டர்ட போலாம்" என்றெழுந்தவனை,
"கொஞ்சமிரு அவசரப்படாதே'' என்று அருகிலமர்த்தி செல்லமாக தலையில் கொட்டினாள்.
"சொல்ல வாரதை முழுசா கேளுப்பா உனக்கு நல்ல வரன் வந்திருக்கு''
என்று ஆரம்பிக்கும் போதே,
''அம்மா உங்ககிட்ட சொல்லனுமென்று தான் இருந்தன் என்று ஆரம்பிக்க,
"யாரையாச்சும் லவ் பண்ணுறியாப்பா" எனக்கேட்டாள் தாய்
ஆமென்று தலையாட்டி வைத்தான் குமார்.
"யாருப்பா அது" என்று தொடங்கவே இரும்மா வாறனென்றவன்
உள்ளே சென்று போனை எடுத்துவந்து அவளது போட்டோவை காட்டி
இவதான்மா கௌஷி என்கூட வேல பார்க்கிறா ரொம்ப நல்ல டைப் மா"
என்றவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே
''வாழப்போறவன் நீ நல்லா இருந்தா போதும்.
சரி அவளோட குடும்பத்தாரை நல்ல நாளா பார்த்து வரச்சொல்லுப்பா'' என்றாள்.
இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணமும் விமர்சையாகவே நடந்தது.
கௌஷியும் நல்ல விதமாகவே நடந்துகொண்டாள். காலங்களும் ஓடியது.
எவ்வளவு தான் எல்லா வசதிகளும் இருந்தாலும்,
கணவன் தன்னோடு இல்லையென்ற குறை மட்டும் இருந்துகொண்டே தான் இருந்தது பத்மினிக்கு.
மகனோ குடும்பத்தோடு கௌஷியின் வீட்டில் தங்க ஆரம்பித்தான்.
இப்போதெல்லாம் சம்பளப்பணத்தை மனைவியிடமே கொடுத்தான் குமார்.
"உனக்கு வேணுன்னா அவட்ட எடுத்துக்கோம்மா "என்று வேறு சொல்லிவிட்டான்.
மருமகளிடம் கேட்க கூச்சப்பட்டுக்கொண்டே பத்மினி பணம் கேட்பதில்லை.
வீட்டிலிருந்தவாறே சட்டை, துணிகளுக்கெல்லாம் எம்ரோய்ட்ரி பண்ணிக் கொடுத்து
அதில் வரும் பணத்தையே செலவு செய்தாள்.
மகனுக்கோ இப்போதெல்லாம் மனைவி வீட்டிலேயே காலம் போனது.
பத்மினிக்கு அடிக்கடி சுகமில்லாமல் போனது. அதை குமாரிடம் சொல்லக்கூட முடிவதில்லை.
அன்றைய தினம் நெஞ்சு வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அன்றே தான் குமாரும் மனைவியும் வெளியூர் செல்வதாக இருந்தது.
அதை குழப்பிறக் கூடாதே என்று பொறுத்துப் பார்த்தாள், குறைந்த பாடில்லை.
குமாரிடம் "நெஞ்சு வலிக்குதப்பா "என்று சொல்லவே அவசரமாக டாக்டரிடம் கூட்டிப் போனான்.
செக்கப் எல்லாம் செய்துவிட்டு
"மைனர் அட்டாக் தான் வந்திருக்கு பட் இப்போதைக்கு பயப்பட தேவையில்லை
ஆனால் இனி இப்படி வராமல் இருப்பதுவே நல்லதென்று'' சொல்லி,
சில மருத்துவ ஆலோசனைகளை கடைபிடிக்கும் படி கூறி அனுப்பி வைத்தார் டாக்டர்.
டாக்டர் சொன்ன ஆலோசனைப்படி குமார் நடக்க ஆரம்பிக்க கௌஷிக்கோ
ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
கௌஷி வீட்டில் இவர்கள் தங்குவதும் குறைந்தது.
பயணம் எங்காவது போகவேணுமென்றால் அதை பத்மினியின் ஆரோக்கியமே
தீர்மானிக்கும் எனும் போது கௌஷியால் அதை ஜீரணிக்க முடியாமல் போனது.
அதன் விளைவு கௌஷி மாற ஆரம்பித்தாள்.
குமார் வீட்டிலிருக்கும் வரைதான் பத்மினிக்கு மதிப்பு மரியாதையெல்லாம்.
குமார் இல்லாத சமயம் கௌஷியின் அதிகாரமே தூள் பறக்கும்.
குமார் கேட் திறக்கும் சத்தம் கேட்டால் போதும் கௌஷியை வைத்து
பத்மினி வேலைவாங்குவது போல் ஏதாவதொன்றை சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நிறையவே புத்திசாலித்தனமான பொய்யையும் பேசத் தொடங்கினாள்.
ஆனாலும் அவன் எதையுமே தாயிடம் கேட்காததே பெரிய ஆறுதல் அந்த தாய்க்கு.
அப்படியே மாதம் ஐந்து ஓடியது கௌஷி கர்பமுற்றாள்.
பத்மிக்கும் குமார் தம்பதிக்கும் அளவில்லா மகிழ்ச்சி.
கௌஷியை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி தாயிடம் கூறினான் .
"இதெல்லாம் நீ சொல்லணுமப்பா'' என்று தலையை வருடினாள் குமாரின் தாய்.
இத்தனை வருடமாக செய்தது தானே இப்போ இன்னும் மனநிறைவோடு
செய்யபோகிறாள் அவ்வளவு தான்.
குமாரின் அம்மா என்னோவோ கடமையை கடமைக்காக அல்லாமல் அழகாகவே செய்தாள்.
கௌஷியோ குமாரிடம் குறைக்கு மேல் குறையாகவே சொல்லிக்கொண்டிருந்தாள்.
''ஏன்மா இப்படி செய்கிறீங்க''
என்று கேட்கும் அளவுக்கு அவளின் குறை சொல்லும் முறை யதார்த்தமாக இருந்தது.
பத்மினியால் கௌஷியை பார்ப்பது கடினம் போலவே காட்டிக்கொண்டு
கௌஷி அவளது சித்தியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டாள்.
வந்தவளுக்கு வசித்தவளின் அறை.
அதில் வசித்த தாய்க்கோ விருந்தினர் அறை என்று மாற்றப்பட்டது.
அந்த இருவருக்குமாக சேர்த்து பத்மினியே வேலைசெய்தாள்.
அதுமட்டும் என்னவோ குமாரின் கண்களுக்கு விளங்கவே இல்லை.
குமாருக்கு மகனும் பிறந்தான் அளவற்ற மகிழ்ச்சி அனைவருக்குமே.
வருடங்கள் இரண்டானது பத்மினிக்கு பேரன் தான் எல்லாமே என்றானான்.
நாற்கள் ஓட ஓட பத்மினியின் உடல் நிலையிலும் நிறைய மாற்றங்கள்.
அடிக்கடி சுகமில்லாமல் போனது.
குமாரோ தாயை பார்த்து என்ன என்று கூட கேட்டானில்லை .
அவனது உலகம் மகனும்,மனைவியும் மட்டும் தான் பத்மினி தனியாக்கப்பட்டாள்.
தாயிடம் சுகம் விசாரிக்க கூட நேரமில்லாமல் போனது.
தாயோ மனமுடைந்து போனாள். கணவனை நினைத்து நித்தம் அழுதாள்.
தனிமை வாட்டியது.
இதனிடையே பேரனையும் கௌஷி வீட்டிலேயே விட்டார்கள்.
இருந்த சிறு ஆறுதலும் இல்லாமல் போக கோபம் கோபமாக வந்தது.
பொறுமையை கைக்கொண்டாள் பத்மினி.
நாற்களின் வேகத்துக்கு பத்மினியால் ஈடு கொடுக்க முடியவில்லை.
பழைய நினைவுகளின் கவலையே இன்னும் அவளை பலவீனமாக்கியது.
காலங்கள் ஆக ஆக கௌஷியின் குடும்பத்துக்கே மதிப்பும் அதிகமானது.
மாமி மாமியாருக்கு விதவிதமாக சமைக்கச்சொல்லி கட்டளையிடும் மகனுக்கு,
தாயின் அரைநேர பட்டினி தெரியாமலே போனது.
சாப்பாடு ஒன்றும் இல்லாமலில்லை.சுவீனம் சாப்பிட இடம்கொடுப்பதில்லை.
அதுகூட அறியாத மகன் மாமி,மாமாவின் இருமல் சத்தத்திற்கும் பார்மஸிக்கு ஓடுவான்.
கவலையில் தோய்ந்தாள் பத்மினி.
பேரனுக்காகவே வாழும் தாயை கண்டுகொள்ளாமல்,
கோஷியின் வீட்டிலே பிள்ளையை விட்டுவிட்டு வருவான் குமார்.
தாய் கேட்டால் ''அங்கே சந்தோசமாக ஓடியாடிக்கொண்டு இருப்பான் விடு''
என்பனே தவிர இவளின் எதிர்பார்ப்பை உணரமாட்டான்.
கௌஷி குடும்பதில் யாருக்காவது ஏதாவது தேவையென்னறால்,
நடுஜாமம் என்று கூட பார்க்காமல் ஓடுபவன்
தாயிடம் உனக்கேதும் வேண்டுமா எனக்கேட்டு எத்தனை வருடங்கள்?
கௌஷி குடும்பத்தோடு சிரித்து கலகலப்பாக இருப்பவன்,
தாயை பார்த்து சிரித்த நாள் அவள் நினைவிலேயே இல்லை.
சுற்றுலா போவார்கள் காவலாளி பத்மினி தான் ''வர்றியா''
என்றொரு வார்த்தை கேட்க மாட்டான்.
குமாரை கௌஷி வீட்டில் தூக்கிக் கொண்டாடினார்கள் அதில் பத்மினிக்கு மற்றற்ற
மகிழ்ச்சி. அந்த கனிவு பணிவை கௌஷியின் தாய் தந்தை பத்தமினிக்கு
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். உண்மையில் அவர்கள் நல்ல மனிதர்கள் தான்.
குமாரோ,கௌஷியோ பத்மினிக்கு செய்வது அவர்களுக்கு தெரியாது என்றே சொல்ல வேண்டும்.
குமார் நல்ல இருக்க வேண்டுமென்பது தானே பத்மினியின் ஆசையும்
அந்த ஆசை என்னவோ நிறைவேறியது. அதை நினைத்து திருப்திப் பட்டுக்கொண்டாள்.
மகனுக்காக ஏங்க ஆரம்பித்தாள் பத்மினி.
பெற்ற மனம் பித்து தானே இன்றும் அன்றுபோல் மகனின் தலைகோத ஏங்கினாள்,
மகனின் கை தடவ ஏங்கினாள், மகனை முத்தமிட ஏங்கினாள்,
அவனின் மடியில் தலைவைத்துறங்க ஏங்கினாள்.
ஏன் அவன் தன்னைப் பார்த்து அன்பாய் சிரிக்கும் அந்த சிரிப்பிற்காக ஏங்கினாள்.
இப்படி ஏக்கப்பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
மகனை கொஞ்சம் வாவென்றழைத்தால் ''இரு வாறன் '' என்றவன்,
அடிக்கடி அழைத்தாலும் மூன்று வருடங்களாய் வந்தபாடில்லை .
ஏக்கங்கள் எல்லாமே தேங்கிக் கிடந்தது, ஆசைகள் நிராசையை மட்டுமே தந்தது அவளுக்கு.
கணவனின் புகைப்படம் மட்டுமே பத்மினியின் பேச்சுத்துணை.
நடப்பவை அனைத்தையும் அந்த புகைப்படத்திடமே முறைப்படுவாள்.
அன்றென்னவோ பேரன் வரவே எதுவுமே விளங்காத அவனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
வித்தியாசமாக எதுவுமே சொல்லவில்லை.
பிள்ளைகள் வளர்ந்தவுடன் எப்படியெல்லாம் பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும்
என்பதை தான் சொல்லிக்கொடுத்தாள்.
அவள் சொன்னதென்னவோ யதார்த்தமானவை தான்.
வாழ்க்கை ஒரு வட்டம் தானே இன்று ஒருவருக்கு செய்பவை தான்
நாளை இன்னொருவரால் செய்பருக்கு செய்விக்கப்படும் அது தானே நிதர்சனமும்,
அதை தான் அந்த அம்மாள் பக்குவமாக சொல்லிக்கொடுத்தாள்..
தனது மகன் வயோதிபமடைந்தாலும் சந்தோசமாக
இருக்க வேண்டும் என்ற ஒரேஒரு நோக்கத்திற்காக.
பேரனும் பத்மினியின் மகன் போலவே கெட்டிக்காரன்.
தந்தை வரும் வரை பொறுத்திருந்து வந்தவுடன் கேட்டான்
"அப்பா நா பெருசானதும் எப்படியெல்லாம் உங்கள பார்த்துக்கணும்?
அதற்கு குமாரோ "அன்ப என் கைகோர்த்தபடி''
என்று ஆரம்பித்து ஏராளமாக சொல்லிக்கொண்டே போனான்.
"அப்போ ஏன்ப்பா பாட்டி நாங்க போற இடங்களுக்கு வர்ரதில்ல
ஏன் ரூம்க்குள்ளேயே இருக்காங்க" எனக்கேற்க திக்குமுக்காடிப்போனான்
குமார். பாட்டி என்கூட ரொம்ப பாசம்பா உங்களோடயும் தான் உங்களையும்,
அம்மாவையும் அன்பா பார்த்துக்கணும் என்று சொன்னாங்கப்பா" என்றதும்,
பழைய தாயின் நினைவுவரை கண்கள் பணிந்தான்.
மனைவி வந்ததும் அவளிடம் அனைத்தையும் கூறி
"கௌசி நான் தவறு செய்கிறேனோ எனத் தோன்றுகிறது"
என்று சொன்னது தான் தாமதம் திடீரென கத்த ஆரம்பித்து விட்டாள் கௌஷி.
மனைவியிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தவன் தடுமாற ஆரம்பித்தான்.
கொடுமை செய்வதாகவும், குமரைக்கண்டதும் அப்பாவி போல நடிப்பதாகவும்,
இன்னும் எவ்வளவோ பத்மினி செய்யாததையெல்லாம் செய்ததாக அபாண்டமாக பலி சுமத்தினாள்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பத்மினியோ வாயடைத்துப் போனாள்.
முடியாவிட்டாலும் எல்லா வேலைகளையும் செய்து அனைத்தையும்
பார்த்துக்கொண்டவளுக்கு இப்படியுமா பலிப்போட முடியுமென்று விக்கித்து நின்றாள்.
மனைவியின் மயக்கண்ணீர் குமாரின் அறிவை மழுங்கடித்தது என்றே சொல்ல வேண்டும்.
அம்மாவை கண்டபடி பேசினான் குமார்.தாயின் அழுகை அவனை ஒன்றுமேசெய்யவில்லை.
"ப்ளீஸ்மா எங்கள நிம்மதியா விட்டுட்டு போயேன்"
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
தலைகுனிந்து அழுதுகொண்டிருந்த தாயை பாவம் பார்க்க வேண்டாம்
பரிதாபமாவது பார்த்திருக்கலாமோ என்னவோ குமார் அதை கூட பார்த்தானில்லை.
தாங்க முடியாமல் தவித்தாள் பத்மினி.
இரவெல்லாம் அழுதாள் கணவர் இருந்திருந்தால் இதையெல்லாம் தங்கியிருப்பாள்
போலும் "நீங்க இப்ப எனக்கு துணையா நிக்கணும்" என்று வேண்டிக்கொண்டே இருந்தாள்.
மனது இன்னும் அதிகமாகவே கனத்தது.
அன்றும் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பியவள், வீட்டு வேலைகளை முடித்து,
காலையில் தோசை வார்த்துக் கொடுத்துவிட்டு மகனை பார்த்தாள்.
நடந்தது நடந்து விட்டது மகனின் கோபம் குறைந்தாலே போதுமென்றிருந்தது
அந்த தாய்க்கு. வந்து தன்னிடம் பேசுவான் என்ற எதிர்பார்ப்பும் வழமை போல தோல்வி தான்.
அவள் குமாரை பார்த்து பேச போகும் போது எங்கோ போக தயாரானான்
வரட்டும் பேசலாம் என்று நினைத்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள்
"நான் பெற்றவனிடம் பேச நான் ஏன் தயங்க வேண்டும்? இன்று என்னை வெளியில்
எங்காவது கூட்டிப்போகச் சொல்லி மனம்விட்டு பேசவேண்டும்.
எல்லாம் சீக்கிரமே சரியாகிடும் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டவள்.
அவசரமாக மத்திய சாப்பாட்டை சமைத்து பரிமாறினாள்.
தனக்கும் கொஞ்சம் உணவை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் சென்று இரண்டு வாய் சாப்பிட்டிருப்பாள்.
"அம்மா" என்று அறைக்குள் வந்த குமாரை வாரி அணைத்துக்கொண்டாள் . "அம்மா அது வந்து...
நீ சாப்பிட்டுட்டு உன் துணிகளை இந்த பேக்ல எடுத்து வைச்சுட்டு ரெடியா இரு வந்து குடிப்போறன்" என்றவன்,
தாய் " எங்கப்பா " என்று கேட்டதை கூட காதில் வாங்காது போய்விட்டான்.
எல்லாமே புரிந்தது பத்மினிக்கு மனம் வெறுத்து விம்மி அழுத்தவள்,
சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு கை கழுவி தயாராகி மகனிடம் போய் நின்றாள்.
மருகளிடம் ஒரு சங்கிலியையும்,அவள் போட்டிருந்த இருவளையல்களையும் கொடுத்தாள்,
வாங்காது பின் சென்றவளை ''எடுத்துக்கமா" என்று கையில் திணித்தாள்,
அவள் போட்டிருந்த சங்கிலியைக் கழற்றி குமாருக்கு போட்டுவிட்டாள்.
கௌஷியிடம் "உனக்கு ஏதாச்சும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுமா" என்றாள்.
என்ன புரிந்ததோ பேரனுக்கு... கட்டிப்பிடித்து அழுதான் அவன்.
"பாட்டிக்கு உடம்பு சரி இல்லல்லடா கண்ணா அது தான் டாக்டர்ட போறன்
நாளைக்கு வந்துருவன் ராசா,
அழக்கூடாது, நல்லபடிக்கணும், சொல்பேச்சு கேக்கணும் ,
அம்மா அப்பாவ நல்லா பார்த்துக்கடா தங்கமே"
என்று முத்தமிட்டவள் இருபணக்கட்டை பேரனிடம் கொடுத்தாள்.
பத்மினியின் கண்கள் கலங்க கணவன் உயிர்பிரிந்த பழைய கட்டில் இருந்த இடத்தின்
அருகே ஒருசில நிமிடங்கள் கண் மூடி நின்றாள்.
எதையோ வேண்டுகிறாள் என்பது மட்டும் புரிந்தது. வீட்டை விட்டு புறப்பட்டாள்.
போகும் வழியெல்லாம் குமார் அமைதியாகவே இருந்தான்
"ஏன்ப்பா உனக்கேதாவது நான் குறை வைச்சேனா?
எனக்கேட்டு இருவருக்குமான அமைதியை கலைத்தாள் பத்மினி.
வாயடைத்துப் போனான் குமார்.
தாய்ப்பட்ட கஷ்டங்கள் கொஞ்சநெஞ்சமல்லவே எப்படி மறப்பான்?
அவனது பதில் வரும் முன்னமே முதியோர் இல்லமும் வந்தது.
மனதில் பாரத்தோடு இறங்கினாள் தாய், மகனும் தான்.
அலுவலகத்தில் அணைத்து பார்மாலிட்டிஸும் முடிந்தது.
பத்மினியை அழைத்துச்செல்ல நாற்பது வயது மதிக்கத்தக்க
ஒரு பெண் வந்தார்.
"ஒரு நிமிடம்" என்று அந்தப்பெண்ணிடம் சொல்லிவிட்டு
"குமார்" என்றழைத்த குரலில் நடுக்கம் தெரிந்து.
"அம்மா" என்றவனிடம்,
"எனக்கொரு உதவி செய்வியாப்பா? எனக்கேட்டாள்.
"சொல்லுங்கம்மா என்ன செய்யணும்"
"இதுல கொஞ்சம் பணமிருக்கு இத பத்திரமா வைச்சுக்கப்பா
இதுல இருந்து மட்டும் தான் என் இறுதிச்சடங்கை முடிக்கணும்''
"அம்மா" என்று தயங்கியவனிடம்,
"புடிப்பா" என்று கட்டாயப்படுத்தி கொடுத்தாள்.
"தம்பி நான் ஒருவேளை செத்துட்டான்னா உங்க அப்பாவ எந்த
இடத்தில வைச்சிருந்ததோ அதே இடத்தில ரெண்டு நிமிஷமாச்சும்
என்னையும் வைச்சுடுப்பா செய்வல்ல?'' எனக்கேட்டாள்
''அம்மா'' என்றவன் குரல் தழுதழுத்தது.
"எந்த சந்தர்பத்திலயும் கௌசியோட சண்டைபிடிக்காத,
உன்ன நம்பி வந்தவள் அவள பார்த்துக்கோ.
என் பேரன் ரொம்ப நல்லவன்பா அவனை கவனமா வளர்த்திடு.
நீ பத்திரம்பா டைம்க்கு சாப்பிடு, பாஸ்டா வண்டி ஒட்டாத'' என்று பாசமாக தடவி
"நா ஏதாச்சும் உனக்கு கஷ்டத்தை தந்திருந்தா மன்னிச்சுடுப்பா" என்று முத்தமிட்டாள்.
தலையை பாசமாக தடவி ''போயிட்டு வா" என்று வழியனுப்பி வைத்தாள்.
குமாருக்கோ நெஞ்செல்லாம் வலித்தது , அழுகை முட்டிக்கொண்டு வந்தது,
தாயின் அன்பான முத்தத்தின் அழுத்தம் இத்தனை வருட பிரிவின் வலியை
அவனுக்குணர்த்தியது .
வீடு வந்தவன்,தாயின் அறைக்குச்சென்றான் சின்ன அறை.
ஒரு மெத்தை, ஒரு தலையணை, சிறிய கண்ணாடி, உடுப்பு ரெக்,
பத்மினி சாப்பிட்டுவைத்த மீதி சாப்பாடு அவ்வளவே அவலறையில் இருந்தது.
இதனை வருடம் என் கண்களுக்கு ஏன் இது படவே இல்லை.
பணமிருந்தும் கஷ்டப்பட்டு வளர்த்தவளுக்கான கடமையை ஏன் செய்யவில்லை?
எவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பாடு தந்திருப்பாள்,
அவளை சாப்பிட விடாம துரத்திட்டனே என அழுத்தவாறே தாயின் மெத்தையில் சரிந்தான்.
அனைத்தையும் மெல்ல மெல்ல அசைபோட்டான்.
கஷ்டப்பட்டு என்னை ஆளாகியவளை... ஐயோ.. தவறு செய்துவிட்டேனே அம்மா என்று கதறினான் .
அவன் ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
இத்தனை வருடம் வீட்டில் நடமாடிய தாயின் நடமாட்டம் இல்லாமல்,
வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
அம்மாக்கு எப்படி எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இருந்தேன்?
கௌஷியை நினைக்க கோபம் வந்தது.
எவ்வளவு பெரிய பிழை செய்துவிட்டேன் என்று கலங்கினான் .
திடீரென ஓடிவந்த சிறுவன் கதவருகே நின்று வெளியில் எட்டிப்பார்துக்கொண்டு
"இந்தாங்க பாட்டி உங்க மருந்து என ஒரு டியூபை நீட்டினான் பக்கத்து வீட்டு சிறுவன் .
என்னப்பா இது ? என்று குமாரின் குரலுக்கு திரும்பியவன்
"பாட்டி இல்லையா அங்கிள் ? என்று கேட்டான்.
"வெளியில போய்யிருக்காங்கடா ஏன் ?
இதென்ன டியூப் பா?
"பாட்டி கால் வலிக்கு பூசுரத்தங்கள்" என்றான் அவன்.
குமாரோ என்னப்பா சொல்லுற ஏதாச்சும் தேவைன்னா என்கிட்டே தானே கேப்பாங்க என்றவனுக்கு
அப்போது தான் தாயிடம் என்ன வேண்டும் என்று கூட தான் கேட்டதில்லை என்பது நினைவில் வர
உள்ளமுடைந்து போனான்.
"இல்ல அங்கிள் பாட்டிக்கு கால் வலி வந்துச்சுன்னா நடக்க முடியுறதில்லல அதனால
தான் என்கிட்ட பணம் தந்து வாங்கி வர சொல்லுவாங்க இந்தாங்க பட்டிட்ட குடுத்துருங்க"
என்றவனை அணைத்து கொண்டான் குமார்.
நான் செய்யவேண்டியதை சிறுவன் செய்திருக்கின்றான்.
"சரிப்பா நான் பாட்டிட குடுத்துறன்" என்றவன் டியூபை பார்த்தான்.
அப்பா கால்வலிக்கு தேய்க்கும் அதேமருந்து.
அம்மாவை நினைத்து கதறி அழுதான் அழும் சத்தம் கேட்டு,
ஓடி வந்த கௌசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குமாரின் முகமோ வீங்கி இருந்தது.
"எனக்கு அம்மாவ பார்க்கணும் என்றழுதான்.
என் அம்மா என்கூட இருக்கணும் நான் எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கன் எனக்கு..ஐயோ "
என்று சிறுகுழந்தையை போல அழுதான்.
கௌஷியும் இதை உணராமல் இல்லை "பத்மினி எப்பவுமே கௌஷியிடம் அது வேணுமா இது வேணுமா,
உனக்கு இது புடிக்கும்ல அதல இத செய்தேன் என்று அவளை சுற்றிக்கொண்டே இருப்பாள்
இந்த கொஞ்ச நேரத்துள்ளலேயே பத்மினியை பார்க்காமல்,
அவளின் அன்பான பேச்சை கேட்காமல் எதோ போல் இருந்தது.
"குமார் இங்க பாருங்க விடிச்சதும் அம்மாவ கூட்டிட்டு வரலாம்,
சந்தோசமா வைச்சுக்கலாம்,
அவங்க விருப்பப்பட்டதையெல்லாம் செய்து கொடுக்கவேண்டியது என் பொறுப்பு நம்புங்க.
அத்தைய கூட்டிவர நாளைக்கு உங்களோட நானும் வாறன்"
இப்ப தூங்குங்க என்று தூங்க வைத்தாள்.
அடுத்த நாள் பொழுதில் அவர்களை எழுப்பி விட பத்தமினி இல்லையே,
மணி எட்டாகியும் தூங்கிக்கொண்டே இருந்தார்கள்.
போன் வரும் சத்தத்திலேயே எழுந்தார்கள்
"ஹலோ "
"வணக்கம் தம்பி நாங்க ஹோம் ல இருந்து பேசுரம்" என்றதும்
"ஆஹ் வரத்தான் இருக்கிறன் அம்மாவை ரெடியா இருக்க சொல்லுங்க,
நான் அவங்கக்கல வீட்டுக்கே அழைச்சுட்டு வரப்போறன் இதோ வாறன்"
என்று கட் பண்ணியவன்,
அடுத்த நாற்பத்தைந்தாவது நிமிடத்தில் அங்கே நின்றார்கள்
"அம்மாவ வரச்சொல்லுங்கோ என்றான் குமார் "
"குமார் உங்கம்மா பாவம் நைட் எல்லாம் அழுதுட்டே இருந்தாங்க
உங்களுக்கு போன் பண்ணி பேசுறிங்களான்னு கேட்டம்
உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம் என்று சொல்லிட்டாங்க "
"இப்போ தான் நான் வந்துட்டேன்ல அம்மாவ வர சொல்லுங்க'' என்றான் .
"அது வந்து ... என்று இழுத்த பெண் என்னோட வாங்க என்று
ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றாள்.
பத்மினியோ அங்கே கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள்
"அம்மா" என்று ஓடிச்சென்றவனிடம்
"நைட் எல்லாம் நாங்க எவ்வளவோ சொல்லியும் அழுதுட்டே இருந்தாங்க.
காலைல உங்கம்மாவை எழுப்பினோம் எழும்பல்ல டாக்டர் வர வைச்சு பார்த்தம்.
அவங்க இறந்து இரண்டுமணிநேரம் ஆகிட்டுன்னு சொன்னாங்க
உங்கம்மாவிற்கு அட்டேக் வந்திருக்கு என்று டாக்டர் சொன்னாரு"
என்றதும் அப்படியே ஸ்தம்பித்து விட்டான் குமார்.
அம்மாவின் உடலில் விழுந்து கதறி அழுதான். கௌசிக்கோ தாங்க முடியவில்லை
என்னால் தானே இவ்வளவும் என்று அழுதாள்.
இனி மீதம் பத்மினியின் கடைசி ஆசை மாத்திரமே.
காலா காலத்துக்கும் கஷ்டப்பட்ட தாயை கவனிக்க வேண்டிய காலங்களில்
கவனிக்காமல் விட்டு விட்டு இறுதி ஆசையை நிறைவேற்றுவதிலும்,
இறுதி சடங்கை பெரிதாக செய்வதிலும் என்ன பயன் இருக்கிறது?
வயதான தாய் பிள்ளையிடம் மிஞ்சி மிஞ்சி போனால் கொஞ்சநேரம் தன்னோடு இருந்து
அன்பாக பேச வேண்டும் என்பதையும்,
மகனின் அன்பான முத்தத்தையும் மட்டுமே எதிர் பார்க்கின்றாள்.
இதை இப்போது புரிந்து கொண்டு பயனென்ன?
அவளின் முத்தம் கிடைக்க போவதில்லை இனி.
இவன் கொடுக்கும் முத்தமும் இன்னும் சில மணித்தியாலங்கள் மாத்திரமே.
அவளது இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பு இனி நான் என்ன செய்வேன் என்று கதறினான் .
அனால் ஒன்று மட்டும் இந்த வினாடியிலும் நிஜம்,
இப்போதும் இறந்த நிலையிலும் இவன் அழுவதை அந்த தாயுள்ளம் தாங்காது.
அவள் தான் தாய். இறைவன் மனிதனுக்கு வழங்கிய மகா உன்னதமான வரப்பிரசாதம்..
அஸ்தீர் ..