இலக்கியத்தின் இன்றைய தேவை

இலக்கியங்கள் மனித வாழ்வின் இணை பிரியாத இரு விழிகள் .மானுடகுலத்தின் காதல் , அன்பு , வீரம், போர்திறம்,ஆட்சிதிறம் என அனைத்து நிலைகளிலும் அது முத்திரை பதிக்கிறது.சங்க காலம் தொட்டு இன்றைய ஒரு வரி கவிதை வரை அனைத்தும் நம் நடைமுறை வாழ்வின் தாத்பரியங்களை நமக்கு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் தளிர் நடை, மலரினும் மென்மையான பெண்ணின் விழியசைவு , தலைவன் தலைவியின் மீது கொள்ளும் காதலன்பு,ஆண் மகனின் வீரத்தை விவரிக்கும் போர்திறம் என விரிந்து படர்கிறது இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் .
ஒரு தாய் மகவை பிரசிவப்பது போல் படைப்பாளி இலக்கியதை பெற்று எடுக்கின்றான்.படைப்பாளி தான் கண்ட நடை முறை வாழ்வின் நுணுக்கங்களை , அனுபவ சுவடுகளை, அதன் ஆழத்தை, அதன் அகலத்தை , விளைவுகளை ,விளைவுகளின் வீச்சை கருப்பொருளாகி ஏட்டில் எழுதுகின்றான்.
நீறுபூத்த நெருப்பாய் இன்றளவும் நம் நாட்டு மக்களின் மனதில் இலக்கிய வேட்கை உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .காரணம், நம் சமூக கட்டமைப்பு . அதுமட்டுமல்ல, தமிழ் மொழியின் இலக்கண மற்றும் மொழிச்செழுமை இலக்கியதின் பால் மக்களின் ஈர்ப்பை இயல்பிலேயே கூட்டுகின்றன. தமிழில் இலக்கியம் என்பது தங்கக்குடத்திற்கு குங்கும பொட்டுயிட்டாற்போல பொலிவோடு திகழ்கிறது என்பது நாமறிந்த சேதி.
நிதர்சன வாழ்வில் மனிதன் பச்சோந்தியாய் நிறம் மாறுவது நம்மை மிகுந்த மனவருத்தத்திற்குள்ளாக்குகிறது .ஆனால்,இலக்கியத்தளத்திலோ பேனா அந்தந்த தலங்களுக்கு ஏற்றவாறு தன்னை தானேகடமைத்துக்கொள்கிறது .கொடுமைகள் கண்டு பேனா தீ பொறி கக்கும் தீ பந்தமாய் எரிகிறது ,காதல் பேசும் நோ்ரத்திலோ பேனா மயில் இறகினும் மெல்லிய மலராய் மாறி காதலை பொழிகிறது .வீரம் பேசும் நோ்ரத்திலோ பேனா வேலாய் , ஈட்டி முனையாய் மாறி பகையை வெல்கிறது ,கொடுமை கண்டு எரிமலையாய் பொங்குகிறது .
இலக்கியத்தின் இலக்கு எது தெரியுமா? மனிதனை மனித இயல்புகளுக்குள்ளாகவே வழிநடத்துவதுதான் .அதில் தர்மம் உண்டு , வாழ்வின் உயரிய விழுமியங்கள் உண்டு , அறிவீலிகளுக்கு ஆசானாய் நின்று ''இதோ இதுதான் அறம்'' என்று அறிவூட்டும் பங்குண்டு ,நன் மதியாளர்களுக்கு வாழ்வில் ஏற்படும் சிலபல சறுக்கல்கள் சர்வசாதாரணமானது மேற்கொண்டு கைக்கொண்ட அறநெறியை எச்சோதனையிலும் கைநெகிழாது தொடர்ந்து பயணி என மருந்தூட்டி புத்துணர்வோடு வழிநடத்தும் பண்புண்டு.
அறம் கூறும் வள்ளுவம் , நெறிகாட்டும் ஆத்திச்சூடி , நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னும் புராணம் இதிகாசங்கள் ,பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட கேட்போர் கண்களும் ,மனமும் ஒருமித்து கசிந்துருக வைக்கும் சைவசித்தாந்த பாடல்களும் , நடக்கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் , காதருந்த ஊசியும் வராது கான் கடைவழிக்கே எனும் சித்தர் பாடல்களும் , அன்பை ,மானுட மாண்பை ,மானத்தை,களம் காணும் வீரத்தை என மனித உயிர் தொடங்க அடிப்படையாய் அமையும் காதல் முதல் கல்லறை சேரும் பொழுது மட்டும் வாழ்க்கையின் அனைத்து அத்தியாயங்களுக்கும் இலக்கியம் இடம் தருகிறது .
கொஞ்சம் எண்ணெய் அதிகம் ,நெற்றி வகிடு சற்று கோணல் ,பொட்டு கொஞ்சம் இறக்கம் ,மை சற்று பட்டை என ஒப்பனையில் நம்மை நாமே சரி செய்து கொள்ள கண்ணாடி அவசியம். எதை வைத்து மனித மனத்தை திருத்துவது ? கண்ணாடி பார்த்தா?ஆனால்,பாவம் மனம் கண்ணாடியில் தெரியாது .
வைரத்தை வைரம் அறுக்கும் ,நஞ்சு நஞ்சை முறிக்கும் ,முள் முள்ளை எடுக்கும் .மனம் இலக்கியம் பார்த்து திருந்தும். ஆம்,இலக்கியம் ஓர் கண்ணாடி அதை பார்த்து மனித மனம் திருந்தும்.அந்த இலக்கிய கண்ணாடியை வடித்தவன் ஓர் அனுபவ மிக்க படைப்பாளி .
காலம் கருதி செய்த உதவி கண்ணுக்குத்தெரியாத திணை அளவு இருப்பினும் அதை மலை அளவு கொள்ளசெய்வது இலக்கியம் .எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது , எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க விருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என முக்காலத்திற்கும் தருமத்தை சொல்லியது இலக்கியம் .
மனித மனங்களில் புரையோடியிருக்கும் மூர்க்கத்தை,அகங்காரத்தை ,மமதையை , நீதி நெறிகளுக்கு
புறம்பான போக்கை சட்டங்களால் சரி செய்ய முடியாது .ஏனெனில் , சட்டத்தால் மனித இதயத்தை தொட முடியாது . குற்றங்கள் சமய சதர்ப்பங்கள் பார்த்து காத்திருக்கும் மனதில் இருந்துதான் பிறக்கின்றன . இதயத்தை இலக்கியங்களால் மட்டும் தான் தொட முடியும் .சட்டங்களால் அல்ல.சட்டதிருத்தங்களை விட இலக்கியங்கள் தான் இன்றயை தலையாய தேவை.


Close (X)

0 (0)
  

சிறந்த கட்டுரைகள்

மேலே