பக்தியும் எதிர்பார்ப்பும்

மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவருடன் சிறிது நேரம் பேசியதிலேயே, முனிவரிடம் மிகவும் அன்பும் மரியாதையும் மன்னனுக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே, முனிவரிடம், ''முனிவர் பெருமானே, தாங்கள் என்னிடம் இருந்து ஏதாவது பெற்றுக்கொள்ளவேண்டும்'' என்று வேண்டினான்.

அதற்கு அந்த முனிவர், ''எனக்கு எதுவும் வேண்டாம். இப்போது நான் திருப்தியாகவே உள்ளேன். இந்த மரங்கள், நான் உண்பதற்குப் போதிய பழங்களைத் தருகின்றன. இந்த அழகிய நீரோடை எனக்கு வேண்டிய நீரைத் தருகிறது. இந்தக் குகைகளில் நான் நிம்மதியாக உறங்குகிறேன். நீ மாபெரும் சக்கரவர்த்தியாக இருந்தாலும், நீ தருவதை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.

மன்னன் விடவில்லை. ''என்னை திருப்திபடுத்தவாவது தாங்கள் என்னிடம் இருந்து ஏதேனும் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்று வற்புறுத்தினான்.

மன்னனின் வற்புறுத்தல் தாங்கமாட்டாமல் முனிவர் மன்னனின் அரண்மனைக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். உடனே மன்னன் தன்னுடைய பணியாளர்களை நகரத்துக்குச் சென்று முனிவரை வரவேற்பதற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டான்.

நகரத்தில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்ததும், முனிவரை அழைத்துக்கொண்டு படை பரிவாரங்களுடன் நகரப் பிரவேசம் செய்தான்.
மன்னனுடன் வந்த முனிவருக்கு கோலாகலமான முறையில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு உபசாரங்கள் நடைபெற்றன. நகர மக்களின் வரவேற்பு உபசாரங்களை எல்லாம் ஒருவழியாக முடித்துக்கொண்டு, முனிவரை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றான் மன்னன்.

அரண்மனையில் முனிவருக்கு பாதபூஜை போன்ற வைபவங்களை கிரமப்படி செய்து வணங்கிய மன்னன், முனிவரை அழைத்துக்கொண்டு பூஜையறைக்குச் சென்றான். பூஜையறையில் மன்னன் இறைவனிடம், தனக்கு இன்னும் நாடும், பொன்னும்,பொருளும் தருமாறு வேண்டிக்கொண்டான். அனைத்து வசதிகளும் நிரம்பப் பெற்றிருந்த மன்னன் இறைவனிடம் இப்படி பிரார்த்தனை செய்ததைக் கண்ட முனிவர் எழுந்து வெளியில் செல்லத் தொடங்கினார்.

முனிவர் வெளியில் செல்வதைக் கண்ட மன்னன் திகைப்புற்றவனாக, ''சுவாமி, நில்லுங்கள். என்னுடைய உபசாரத்தையும் நன்கொடையையும் ஏற்றுக்கொள்ளாமல் செல்கிறீர்களே? தயவு செய்து என்னிடம் இருந்து எதையாவது பெற்றுச் செல்லுங்கள்'' என்று மன்றாடினான்.

அந்த முனிவரோ, ''மன்னா, நான் பிச்சைக்காரர்களிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை. உன்னால் எனக்கு என்ன கொடுக்கமுடியும்? நீயே எப்போது பார்த்தாலும் இறைவனிடம் பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறாய். இந்த நிலையில் நீ எனக்கு எதுவும் தரவேண்டியதில்லை. இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத பக்தியை மட்டுமே செலுத்து'' என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.

எனவே நாம் இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், மனத்தூய்மையுடன் பக்தி செலுத்தப் பழகிக் கொள்வோம்.

நமக்கு என்ன தேவையோ, நமக்கு எது நன்மை செய்யுமோ அதை இறைவன் நமக்கு அருள்புரியவே செய்வான்.

நம்மிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு நம்முடைய பக்தி இருக்கவேண்டுமே தவிர,

இறைவனிடம் இருந்து எதுவும் எதிர்பார்ப்பதாக நம்முடைய பக்தி இருக்கக்கூடாது

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Mar-17, 11:10 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 507

மேலே