தப்புத் தாளம்
.........................................................................................................................................
................................................................தப்புத் தாளம்
தமிழ் ஒரு இனிமையான மொழி. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. அதே சமயம் அபாயகரமான
மொழியும் கூட. ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் துறை சம்பந்தப்பட்ட கூட்டங்கள் மற்றும் கடிதப்
போக்குவரத்து எப்போதும் அள்ளித் தெளித்த அவசர கோலத்தில்தான் நடக்கும்.. நின்று நிதானித்து
திட்டமிட்டு நடத்தினால் பூகம்பம் வந்து விடும் என்கிற சென்டிமெண்ட் பயம் கூட எங்களுக்குள் உண்டு
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! ! அப்படி நடத்தும்போது சுவரொட்டி,கடிதம் போன்றவற்றை
சரியாக கவனித்திருக்க மாட்டோம்..! ! எழுத்துப் பிழையால் அர்த்தம் மாறி அனர்த்தமான
கதைகள் நிறைய உண்டு ....! !
கலெக்டரை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த ஒரு அறிவிப்புப் பலகை இப்படி இருந்தது...
“ மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத் திறப்பு விழா :
மாவாட்ட ஆட்சித் தலைவரே, வருக ! ! ”
பாவம்...! மாவட்ட ஆட்சித் தலைவரை மாவாட்ட விட்டால் அவருடைய பெற்றோர் வருத்தப்பட
மாட்டார்களா?
பால்வினை நோய்கள் விழிப்புணர்வு வாரம் என்ற நிகழ்ச்சியை சுகாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
அதற்கான கையேட்டில் இப்படி எழுதியிருந்தது
பால்வினை நோய்கள் விழிப்புணர்வு வாரம் - நிகழ்ச்சி ஏற்பாடு- தமிழ்நாடு சுகதாரம் மற்றும் நோய்
தடுப்புத் துறை....
ஹூம்.. தாரம் சுகமாக இருக்க வேண்டுமானால் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்ச்சி வேண்டும்தானே?
தாய்சேய் நலம் பேண என்று எழுத வேண்டிய இடத்தில் தாய்சேய் நலம் பேனா என்று எழுதியிருப்பார்கள்.. அப்படியானால் எது பென்சில் ????
சௌபாக்கிய சுண்டி லேகியம் என்கிற ஒன்று குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இலவசமாகக் கொடுக்க
வேண்டிய பொருள்களுள் ஒன்று.. ஒரு குறும்புக்காரர் அந்த லேபிளில் சு’ வின் காலை இழுத்து பாவாடை
போல் சுற்றி விட்டார்..
பல்துறை கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர் ரகுவுக்கு “கால் போட்டு” பார்வைக்கு: ராகு என்று மாற்றி, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களை பயமுறுத்திய நோட்டீசும் உண்டு.
யாரைப் பகைத்தாலும் எழுத்தர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு மருத்துவர் தம்முடைய
குடியிருப்பை விரிவாக்க அரசிடம் அனுமதி வேண்டினார். அதற்காக அவர் கொடுத்த விண்ணப்ப தாளில்
இப்படி எழுதியிருந்தார்..
என் குடியிருப்பின் ஒரு பகுதியான “ சின்ன வீட்டின்” மராமத்துப் பணிக்காக ரூபாய் இரண்டு லட்சம் என்
சேமநல நிதித் தொகுப்பிலிருந்து பெற்றுத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்..
இக்கடிதத்தில் எழுத்துப் பிழை ஏதுமில்லைதான். தேவையற்ற நிறுத்தற் குறியை சாக்காக
வைத்துக்கொண்டு, முன் பகை காரணமாக அந்த எழுத்தர் இப்படி குறிப்பு எழுதி, திருப்பி அனுப்பினார்..
1. “சின்ன வீட்டின்” மராமத்துப் பணிக்கு மருத்துவச் சான்றிதழ் இணைக்கவும்..
2. அரசு ஊழியராய் இருந்துகொண்டு மனைவி இருக்க, “சின்ன வீடு” வைப்பது அரசு நன்னடத்தை விதிகளின்படி குற்றம். இதற்கு இரண்டு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும்..!
இன்னொரு பெண் அதிகாரி குடும்பத்துடன் வெளியூர்ப் பயணம் செல்வதற்கு அனுமதி கோரினார். “ நான்
என் கணவர் மற்றும் உறவினர்களுடன் கோவா செல்லவிருப்பதால் அனுமதியும் முன்பணத்தொகை
ரூபாய் இருபதாயிரமும் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று போட்டிருந்தார்.
உறவினர்களின் பட்டியலில் அவருடைய தங்கை குடும்பமும் இருந்தது. தங்கை குடும்பத்தை எல்லாம்
ஒரு அரசு ஊழியரைச் சார்ந்திருப்பவர்களாகக் கொண்டு பணப் பயன் கொடுக்க முடியாதென்பதால்
தலைமைக் கண்காணிப்பாளர், “மற்றும் உறவினர்” என்ற வார்த்தைகளை அடித்து, பட்டியலையும்
நிராகரித்தார்..
அந்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட கடிதம்
திருமதி மஞ்சு அவர்கள், கணவர்களுடன் கோவா செல்லவிருப்பதால் அனுமதியும், முன் பணத்தொகை
ரூபாய் இருபதாயிரமும் கொடுக்கப்படுகிறது.. ! ! ! !
கமலாம்பிகா காபிக்கடை என்ற பெயரை போர்டில் எழுதும்போது கமலாம்பி வரை ஒரு வரியாகவும்
மீதமுள்ள எழுத்துக்களை அடுத்த வரியிலும் எழுதினான் ஒருவன்..! ! இப்போது படித்துப் பாருங்கள்...!
நான் புலம்பியதைக் கேட்ட ஒருவர், “ ரொம்ப அலுத்துக்காதீங்க.. இங்கிலீஷ் மட்டும் என்ன வாழுதாம்”
என்று கேட்டு விட்டு இதைக் கூறினார்...
“ சுய உதவிக் குழுக்கள் தங்கள் குழுவின் பெயரை ஆங்கிலத்திலும் பதிவு பண்ணும்..!
அந்தப் பெயரை அட்டையில் எழுதி டிஸ்ப்ளே வைக்கும்போது அட்டையின் நுனி மடங்கி
விடும். GRAPE SELF-HELP GROUP என்பது ஒரு குழுவின் பெயர். அதில் முதல் எழுத்து மடங்கி விட்டது..! ”