வாடலாமோ வண்ணப் பூச் செண்டு
என்ன மாயம் ஏனிந்த சோகம்
காலை உதயம் கண்டால்
மாந்தர் மகிழ்வார் நெஞ்சம்
உந்தன் உதயம் கண்டேன்
அதனால் மகிழ்ந்தேன் நெஞ்சம்
என்னில் இணைந்து
இதயம் கலந்த இனிய உறவே
நீ எந்தன் பாகம்
கலங்கலாமோ உந்தன் தேகம்
உன் கரு வண்டு விழிகளில்
கலந்தன கண்ணீர்த் துளிகள்
சோகத்தால் என் இதயம்
முழுவதும் சிந்திய
செந்நீர்த் துளிகள்
மனது தொலைத்தது
உன் விழியின் மொழிகள்
மகிழ்வு தொலைத்தது
எனது இரண்டு விழிகள்
வண்ணம் கலையலாமோ
என் அழகிய பூச் செண்டு
வடிவை இழக்கலாமோ
செதுக்கி வைத்த
உன் பூச் சொண்டு
ஏங்கித் தவிக்குது இங்கே உன்
எண்ணம் நிறைத்த சில்வண்டு
அன்பே வா அருகில் வா
துன்பம் துறப்போம் வா
இன்பம் நிறைப்போம் வா
மகிழ்வு வேண்டும் வா
மனதில் வேண்டும் வா
வசந்தம் வேண்டும் வா
வாழ்வில் வேண்டும் வா வா
ஆக்கம்
அஷ்ரப் அலி