நம்முடைய சொத்து எது

இமயமலையில் கோண்டில்யர் என்ற ஒரு ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கீழே இறங்கி வந்து காண்டீப நாட்டு ராஜ்யத்தை அடைந்தார்.

ரிஷியை வரவேற்று உபசரித்து, "என் நாட்டுக்கு நீங்கள் வந்தது, நான் செய்த பெரிய பாக்யம்…’ என்றான் அந்த நாட்டு ராஜா.
உடன் ரிஷி, "அது சரி… இது உன் ராஜ்யம் என்கிறாயே… இதற்கு முன் இது யாருடைய ராஜ்யமாக இருந்தது?’ என்று கேட்டார்.

"இந்த ராஜ்யம், என் தகப்பனாரிடமிருந்து எனக்கு வந்தது…’ என்றான் ராஜா!

"அதற்கு முன் இது யாரிடம் இருந்தது?’ என்று கேட்டார் ரிஷி.
"இந்த ராஜ்யம் வேறு நாட்டைச் சேர்ந்த அரசனிடம் இருந்தது.

போர் செய்து அந்த அரசனிடமிருந்து இந்த நாட்டை ஜெயித்தார் என் பாட்டனார். அந்த ராஜ்யம், இப்போது என்னிடம் உள்ளது…’ என்றான் ராஜா!

அதற்கு, "இது, உன் பாட்டனாரின் சொத்து. அதை, என்னுடையது என்று நீ சொல்வது எப்படி சரியாகும்…’ என்றார் ரிஷி;
விழித்தான் ராஜா.

அதே போல, இப்போது நாம் அனுபவிப்பதெல்லாம் கடவுள் கொடுத்தது;

அதை நாம் அனுபவிக்கிறோம். பகவான், எவ்வளவு காலம் நாம் அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாரோ, அவ்வளவு காலம் மட்டுமே நாம் அதை அனுபவிக்க முடியும்.

அதன் பின், அது நம் கையை விட்டுப் போய் விடும் அல்லது நாம் அதை விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கும்.

அதனால், எதுவும் நிலை யானதல்ல. இன்று நம்மிடம் இருக்கும் பொருள், வேறு ஒருவருக்கு நாளை சொந்தமாகலாம்.

அதனால், "இது என்னுடையது’ என்று உரிமை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. பகவான் கொடுத்ததை நாம் அனுபவிக்கிறோம். அனுபவ காலம் முடிந்ததும், அது நம்மை விட்டுப் போய் விடுகிறது.

இப்படி எந்தப் பொருளையும் நம்முடை யது, என்னுடையது என்று சொல்வது சரியில்லை.

நாம் செய்யும் பாவ, புண்ணியம் தான் நம்முடையது. இதை, வேறு யாரும் களவாட முடியாது; சொந்தம் கொண்டாட முடியாது.

அதனால், சொத்து, பணம் இவற்றை சேர்த்து வைப்பதை விட, புண்ணியத்தை சேர்த்து வைக்க வேண்டும். அது தான் பரலோகத்தில் நமக்கு உதவும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Apr-17, 11:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 547

சிறந்த கட்டுரைகள்

மேலே