இதற்கொரு வழிதேடுங்கள்

சுருக்கெழுத்து வடிவமாய்
சுட்டெரித்த முகங்களாய்
சுருங்கிட்ட இதயங்களாய்
சுறுசுறுப்பிலா அரசுகளால்
சுடுகாடானது விளைநிலம்
சுயநலக் கொள்கைகளால் !
உணர்வுகளை மதிக்காமல்
உள்ளங்களை மிதிக்கிறது !
வியர்வைசிந்த உழைக்கும்
விவசாயப் பெருமக்களை !
தலைசாயும் நிலையிலின்று
தலைநகரச் சாலையிலின்று !
செவிடான சூழ்நிலையில்
செழிப்புடன் மத்தியஅரசு !
பதவிவெறி பணத்துடன்
அலைகிறது அரசுமிங்கு !
உண்மைக்குக் காலமில்லை
உழவர்க்கோ வாழ்வில்லை !
போராடுகிறான் விவிசாயி
போர்க்களத்தில் தனியாக !
அமர்கின்றனர் அரைமணி
ஆதரவென அரசியல்வாதி !
பயனென்ன சிந்தியுங்கள்
பலனொன்றும் இல்லாமல் !
நிர்வாணக் கோலத்திலும்
நிவாரணமின்றி நிற்கிறான் !
வறுமையான காரணத்தால்
பொறுமையும் காக்கின்றான் !
தன்மானத் தமிழனின்றோ
தன்மானம் இழக்கின்றான் !
முடிவிலாத் தொடர்கதையாய்
முடிவிலாத் துயர்நிலையானது !
இதிலாவது ஒன்றிடுங்கள்
இதற்கொரு வழிதேடுங்கள் !
விவசாயி வாழ்ந்தால்தான்
விடிந்திடும் வாழ்பவர்க்கு !
கட்சிகளுக்கு வேண்டுகோள்
காட்சிகள் வேண்டாம்இனி !
இணைந்து செயல்படுங்கள்
இனிவரும் தலைமுறைகள்
இன்பமுடன் வாழ்ந்திடவே !
பழனி குமார்