காலை பிறக்கிறது

காலை பிறக்கிறது ! - அட
நானும் தான்

அலையில் லாதோர் அழகிய நதியென்
. அகத்தில் பாய்கிறது ! - மனம்
. அழிந்து மாய்கிறது ! - பெரு
மலைபோ லெழுந்த சூரியக் கிரணம்
. மண்ணை ஒளிர்ப்பதுபோல் - என்
. மதியை ஒளிர்க்கிறது !

நிலையில் லாமல் ஓடிடும் காலம்
. நீதி யுரைக்கிறது ! - உயிர்
. நீளம் கரைக்கிறது ! - உயர்
கலையா மிந்தக் கவிதைகள் பட்டுக்
. கண்கள் திறக்கிறது ! - அதிலே
. கவலை பறக்கிறது !

எவனோ ஒருவன் தீட்டிடும் கணக்கில்
. எல்லாம் நடக்கிறது ! - உடல்
. ஏங்கிக் கடக்கிறது ! - அது
அவனோ ? அவளோ ? அறிவின் இயலோ ?
. ஆழ்மதி கேட்கிறது ! - மெய்யை
. ஆட்கொளப் பார்க்கிறது !

திவலை போலே வயதும் கசியத்
. தினமும் உதிக்கிறது ! - உடல்
. திமிரிக் குதிக்கிறது ! - ஒரு
கவணின் கல்லாம் கவிதைகள் பட்டுக்
. கண்கள் திறக்கிறது - அதிலே
. கவலை பறக்கிறது !

நான்யார் நீயார் நடுவே இவர்யார்
. ஞானம் கேட்கிறது - சில
. நாளில் தோற்கிறது ! - சுடர்
வான்கொள் ஒளியை மண்ணின் துகள்கள்
. வாழ்த்திப் பூக்கிறது ! - அதன்
. வாழ்த்தைக் கேட்கிறது !

மான்போல் மீன்போல் மருளும் சிந்தனை
. மாற்றி அடிக்கிறது - உரு
. மாறித் துடிக்கிறது - சுவைத்
தேன்போல் கவிதைத் திரள்கள் பட்டுத்
. தேகம் பறக்கிறது - அதிலென்
. காலை பிறக்கிறது !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Apr-17, 11:55 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : kaalai pirakirathu
பார்வை : 68

மேலே