சிறு துகள்
சிறு துகள் தான்
துணிந்து கடக்க இயலாது
ஒரு பிரபஞ்ச வெடிப்பிற்காக
காத்துக் கிடக்கிறேன்
இதற்கெல்லாம் இவ்வளவு யோசனையா?
மடையா போ வேலையை பார் எனும்
கேளி வார்த்தைகளுக்கு மத்தியில்
ஏன் எனக்கு
ஒரு படைப்பின் நோக்கம்
அத்துகளில் தோன்றுகிறதென
கூர்ந்து நோக்குகிறேன்
தினம் வந்து பழகி விட்டதால்
நிலவின் விசித்திரத்தை கூட
ஆராய மறந்து போன நமக்கு
இத்துகள்கள் ஆச்சரியம் தராது
மாபெரும் ரகசியங்களை
கிசுகிசுத்துக் கொண்டிருப்பவை
இச்சிறு சிறு துகள்கள் என
ஏனோ என்னுள் ஒரு அசரீரி உரக்க கூறுவதை
மறுதலித்து போக
மனம் ஒப்பவில்லை
அமைதியாய் வீற்றிருக்கும் இதனுள்
ஒரு ஆர்பாட்ட ஓசை
அடங்காமல் இருப்பதன்
அதிர்வுகளை
நடுங்கும் விரல்களில்
மெளனமாய் உணர்கிறேன்
இன்னும் சூடடங்காத அதனுள்
ஒரு எரிமலை சீற்றத்தை
விழி மூடி
கண்டு கொண்டிருக்கிறேன்
ஒட்டு மொத்த பிரபஞ்சமும்
ஒரு சிறு துகளுக்குள் நுழையும்
சாத்தியக் கூறுகளை
அலசிக் கொண்டிருக்கிறேன்
அது இதுவாகி இருக்கிறது
நிச்சயம்
இதுவும் அதுவாகவே இருக்கும் என
மன ஏடுகளில் ஒரு
விஞ்ஞான குறிப்பெழுதுகிறேன்
இத்துகள்
நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிளாகவும்
பரிணமிக்கலாம்
காத்திருங்கள்
பெருவெடிப்பின் பின் பொழுதுகளை
அதனிடம் கேட்டு வருகிறேன்
- கி.கவியரசன்