சொந்த ஊர்
...............................................................................................................................................
...........................................சொந்த ஊர்..
“ ஒரு வழியா உன்னோட வேண்டுதல் நிறைவேறிடுச்சு ??? ” சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே வந்தார் நாராயணன். போலிஸ் உடுப்பு கசங்காமல் நண்பன் கிரிதருக்கு எதிரில் அமர்ந்தார். “ நீ உன் சொந்த ஊருக்கு மாற்றலாகிப் போகப்போற.. அங்கதான் உன்னோட ரிடையர்மெண்ட்.. “
“ ஆங்.. ஆர்டர் வாங்கிட்டேன்” இன்ஸ்பெக்டர் கிரிதரும் சந்தோஷமாகச் சொன்னார்..
“ ஊருக்கேதும் போனியா ??? ”
“ எங்க? ரொம்ப வருசம் முன்னாடி செய்யூர் போனதுதான்.. அதுவும் ராத்திரி தூங்கி வழிஞ்சிகிட்டே போய் ஃபைலைக் கொடுத்துட்டு விடிகாலை புறப்பட்டு வந்தது... ”
“ ஹூம்..! சென்னைக்கு வந்தாலும் வந்தோம்.. சொந்த ஊர், சொந்த பந்தமெல்லாம் தூரமாச்சு.... ”
நாராயணன் கிரிதருடன் கைகுலுக்கி விடை பெற்றார்.
கிரிதர் சற்றுத் தாமதமாகத்தான் பணியில் சேர்ந்தார்.. இளமை தீரும் வயதில் சாதாரண அடிநிலை ஊழியராக வேலையில் சேர்ந்து, இன்ஸ்பெக்டர் நிலை வரை உயர்ந்து, ஒரு வருடத்துக்குப் பிறகு ஓய்வு பெற இருக்கும் கிரிதருக்கு, தன் சொந்த ஊரான வானாபுரத்தில் அந்த வைபவம் நிகழவேண்டும் என்பது ஆசை.
வானாபுரத்தில் இரண்டு வயதுக் குழந்தை கிரிதர் இன்ஸ்பெக்டர் அப்பாவின் கையைப் பிடித்தபடி அவரோடுதான் சுற்றி வருவாராம்.. அப்பா, பில்லி, சூனியம் சம்பந்தப்பட்ட அமானுஷ்யமான கேஸ்களை எடுத்து தீர்வு கண்டிருக்கிறாராம். அந்த விசாரணைகளின் போது சில சமயம் குழந்தை கிரிதரும் பக்கத்தில் இருப்பானாம்.. பாட்டி சொல்லியிருக்கிறாள். பாட்டி நன்றாகக் கதை சொல்வார்.. வர்ணனை, காட்சிகளை கண்முன் நிறுத்தும்.. ! !
அப்பாவைப் போன்றே கிரிதருக்கும் அமானுஷ்ய கேஸ்களை எடுத்துச் செய்ய ஒரு ஆவல்தான்.. ஆனால் அவர் தொழில் அமைதியாகத்தான் போனது.. அதிலும் மிக்க அமைதியாய்..! பேராசைப்படாத கிரிதர், மேலே இருப்போரையும், கீழே இருப்போரையும் நன்கு அனுசரித்துச் செல்வார்..
வானாபுரத்துக்கென்று தனியாக காவல் நிலையம் இதுவரை இல்லை.. மக்கள்தொகை கூட அந்தளவு அதிகமாகவில்லை. இருந்தாலும் சில அரசியல்வாதிகளின் காய் நகர்த்தலால் இப்போதுதான் தாலுக்காவாக வளர்ந்திருக்கிறது.. முதல் போலிஸ் ஸ்டேஷனுக்கு முதல் இன்ஸ்பெக்டர் அவர்.. ! ! !
தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு வந்தார் கிரிதர். வானாபுரம் காவல் நிலையத்திலிருந்து யாராவது உதவியாள் எந்நேரமும் வரக்கூடும்..
இதோ வந்தாச்சே..
“ சார், இந்தப் பாதையில போங்க.. இங்க இறங்கிடுங்க.. ” உதவியாள் சொல்லச் சொல்ல காரோட்டி வந்த கிரிதர் இறங்கினார்.
அப்பா..! ! ! வழியில் அகலமான ஆறு..! நீல மடிப்பு வைத்த வெண்ணிறப் புடவையை விரித்துப் போட்டற்போல் நீரோட்டம்..! கரை நெடுக ஒற்றைக்கால் கொக்குகள்..
“ இது.. ”
“ தொண்டியாறு.. ” என்றார் உதவியாள்..
“ தமிழ்நாடு முழுக்கத் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கறப்ப இது எப்படி? ”
“ ஊர்க் கட்டுப்பாடுதான் சார்.. இங்க இருக்கறவங்க சாதாரண பழைய ஆளுங்கதானே..! !
“ நா..நா.. தமிழ்நாட்டுலதான் இருக்கேனா? ”
தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்..
“ சார்.. தண்ணி முழங்கால் அளவுதான் வரும். அப்படியே நடந்து போய் இடப்பக்கம் திரும்புனா போலிஸ் ஸ்டேஷன்..! சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. சாப்பிட்டு முடிச்சிடுங்க.. நான் பாலம் வழியா காரை எடுத்துட்டு வந்திடறேன்.. மூணு ஊரு சுத்திப் போனாதான் பாலம் வரும்..! நான் வரதுக்கு முக்கால் மணி நேரமாகும்.. நீங்க போங்க..! ”
கிரிதர் மேலே பார்த்தார்.. பௌணர்மி நிலவு..! இன்றைக்கா பௌணர்மி ???
பெரிய நிலவுதான்.. ! நிலவுக்குள் உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கோடாலிக் கொண்டை” கூட தெளிவாகத் தெரிகிறதே ?? ஓடும் நீரலை உருக்கி வார்த்த வெள்ளியாய், நிலவை உடைத்து கம்பி கம்பியாகத் திரித்து அடித்துக்கொண்டு போனது..! !
நிலவு மேகத்திற்குள் மறைந்தது.. இருள் கவிந்த அந்த நேரத்துக்கு இதமான வெப்பத்துடன் இருந்தது நதி.. முழங்காலைச் சுற்றி “மொய் மொய்” எனச் சில மீன்கள் கொஞ்சின.. காலைத் தழுவி கூடவே வரும் பிள்ளையை நாசுக்காக விலக்கி விட்டு நடப்பதைப் போல நதியின் நீரலைகளைக் காலால் விலக்கி நடந்தார் கிரிதர்..
ஆழ்ந்த பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது..
ஒரு பத்துப் பனிரெண்டு வருடங்களுக்கு முன் இவர் இந்தப் பிரதேசத்துக்கு வந்திருக்கிறார். வானாபுரத்துக்கு வந்ததில்லை.. செய்யூர் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். ஜி 2 செய்யூர் காவல் நிலையம் என்கிற சிவப்பெழுத்து வளைவிருக்கும்.. “காவல் நிலையத்திலுள்ள ”லை” சற்றுச் சிறியதாக இருக்கும்.. உள்ளே வலப்பக்கம் மேஜை, நாற்காலி இத்யாதிகள்.. இடப்பக்கம் புத்தம் புதிய கணிணி; பின்புறம் செங்கல், மணல், பலகை என்று கட்டட சாமான்கள் கொட்டிக் கிடக்கும்..! !
வானாபுரம் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.
இங்கேயும் சிவப்பெழுத்து வளைவு. ”லை” சின்னதாக இருந்தது.. கிடைத்த வெளிச்சத்திற்கு ஊர் பேர் புலப்படவில்லை.
காவல் நிலையத்தில் அவர் நுழைந்தவுடனேயே கேஸ்..! !
வலப்பக்கமுள்ள தனது இடத்தில் அமர்ந்தார். இடப்பக்கம் புத்தம் புதிய கணிணி; ஆனால் பின்புறம் பெருத்த பழைய மாடல்..
நதியில் படகோட்டுகிற செம்புலிங்கத்தை யாரோ கொன்று விட்டார்கள். கிரிதர் மணி பார்த்தார்.. இரவு ஒன்பது பத்து..!
சடலத்தை ஆராய்ந்து, செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு செய்யூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.. சவப் பரிசோதனைக்காக..
தூக்கம் கண்ணைச் சுற்றியது..
பக்கத்திலிருந்த குவார்ட்டர்ஸூக்கு நடந்தபோது காவல் நிலையத்துக்கு பின்புறமிருந்த செங்கல், மணல், பலகை போன்ற கட்டடச் சாமான்கள் கண்ணில் பட்டது..
கீற்றாய் பிறை நிலவு..!
ஒரு தூக்கம் தூங்கி எழுந்தபின் திடீரென உடல் குலுங்கியது.. ஏதோ மின்சார அதிர்ச்சி கொடுத்த மாதிரி..! !
என்ன இது ??
பத்து வருடங்களுக்கு முன் அவர் போனது செய்யூர் காவல் நிலையம்.. அப்போது வானாபுரத்துக்கு காவல் நிலையமே கிடையாதே..! புது காவல் நிலையம், முன்னர் பார்த்த காவல் நிலையத்தைப் போலவே தோற்றமளிப்பது எப்படி? அன்றைக்குப் பார்த்த அதே புத்தம் புது கம்யூட்டர்..! ! அந்தக் காலத்துக்கு அது புதிய மாடல்.. இன்றைக்கு இருந்தால் அது பழசாகியிருக்கும்..! ! ஆனால் பழசாகாத பழைய மாடல் பத்து வருடத்திற்குப் பிறகு எப்படி ????
நதிக்கு இந்தப் பக்கம் பி.... பி றை....
பட்டென்று அறுந்தது சிந்தனை.
உடனே எழுந்து விட்டார்...
என்ன நடக்கிறது இங்கே ???
வெளியில் வந்தார்... புலர்ந்தும் புலராத அதிகாலை.. ஒரு சிறுவன் வணக்கம் வைத்தான்.. “ சார்.. நான்தான் தங்கதொர.. நேத்து ராத்திரி பத்து மணிக்கு பக்கத்து சந்தையிலேர்ந்து ஒரு கோழியையும் ஒரு சேவலையும் கக்கத்துல இடுக்கிட்டு படகுலதான் ஊருக்கு வந்தேன்.. செம்புலிங்கம் அண்ணாதான் படகு வலிச்சார்.. ”
பக்கத்து ஊரிலிருந்து சந்தை வருகிறவர்கள் நீரோடு ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.. அல்லது கரையில் நடக்க வேண்டும்.. நதியில் படகு வைத்து நிம்மதியாகவும் வந்து சேரலாம்....
“ எத்தனை மணிக்குடா வந்தே? ”
“ பத்து மணிக்கு.. ”
“ ம்..! உன் செம்புலிங்கம் அண்ணா ஒம்போது மணிக்கே சவமாயாச்சே.. அப்புறம் யாரு உனக்குப் படகோட்டுனது? ”
கிரிதர் விசாரித்தார்..
“ கிடையவே கிடையாது.. செம்புலிங்கம் அண்ணாதான் படகு வலிச்சார்.. பாட்டெல்லாம் பாடினார்.. ”
உறுதியாகச் சொல்லிவிட்டு அந்தப் பையன் ஓடி விட்டான்..
சட்டென்று அந்த இடம் அமானுஷ்யமாய்ப் பட்டது..
சற்று நேரம் கழித்து, காவல் நிலையத்திற்குப் போகாமல் ஊருக்குள் புகுந்தார்..
கரையில் கால் பதிக்க நடந்தார்.. பொடிப்பொடியான மணல் வெல்வெட்டில் நடக்கிற உணர்வைத் தந்தது..
அமானுஷ்யமோ, மாயமோ? இந்த இயற்கை அனுபவம் ஆனந்தமாகத்தான் இருக்கிறது..! !
இதுதான் வழக்கமாக செம்புலிங்கம் இருக்குமிடம்..!
யாருமில்லை..
தூரத்தே மரப்பாலம் தெரிந்தது.. ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு இந்த ஆறு காட்டாறாய் இருந்ததாகவும் எப்போது வெள்ளம் வருமென்று சொல்ல முடியாததால் மரப்பாலம் கட்டி மக்கள் பயன்படுத்தினதாகவும் செவி வழிச் செய்தி உண்டு... ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு சாதுவாய் மாறி விட்டது.. இப்போது இரண்டு பக்கம் எழும்பி நிற்கிற சிதிலமடைந்த தூண்களும் அதனோடு ஒட்டிய சில மரப்பலகைகளும் பழைய பாலத்தின் மிச்ச சொச்சங்களாக இருக்கின்றன...! !
ஆளுயர மணற்குன்று எதிர்பட்டது.
தென்மேற்கு திசைவாக்கில் இப்படி வகை வகையான மணற்குன்றுகள் இருந்தன--- ஒரு கைப்பிடி முதல் ஒரு ஆள் அளவு வரை; பூங்காற்று, மணற் படுகையிலிருந்து அள்ளி வந்து ஊரில் சேகரித்து வைத்த மணற்குன்றுகள்..! ! !
மணற்குன்றுகள் அதே இடத்தில் அப்படியே இருக்குமென்று சொல்ல முடியாது.. ! காற்றின் வேகத்தைப் பொறுத்து ஆளுயர மணற்குன்று தரைமட்டமாகலாம்.. வேறிடத்தில் எழும்பி நிற்கலாம்.. இருப்பினும் காற்றுக்கும் வேலியுண்டு.. தென்மேற்கு திசையில் ஒரு மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அது விளையாடும்..! ! !
ஒரு பெரிய கல்லின் மீது ஏறிப் பார்த்தார்..
தென்மேற்குத் திசையில் காற்று கோலம் போடுவது நன்றாகத் தெரிந்தது.. ஒரு மாயமோகினி மேலாடையைச் சுழற்றி வீசுவது போல, வளைவு வளைவாய் மேலெழும்பிய மணற் துகள்கள் காற்றோடு வேகமாய் நகர்ந்தன. காற்றின் வேகம் அடங்கியபோது ஒரு பெரிய மணற்குன்று பாதியாகக் குறைந்திருந்தது.. ! !
ஆடி மாதம் வந்தால் காற்றுக்கு கால் வால் எல்லாம் முளைத்து விடும்.. இது ஆடி மாதம் போலும்..! ஐப்பசி மழையில் அடித்துச் செல்லப்பட்ட மணற்குன்றுகள் ஆற்றுப் படுகையில் சங்கமித்து விடும். வசந்த காலம் வந்தால் மணற்குன்றுகளே இல்லாதபடிக்கு பச்சை பசேலென்று வித விதமான செடி கொடிகள் தழைக்கும்..! மனிதர்களுக்கும் கால்நடைக்கும் உணவானது போக மீதமுள்ளவை கோடையில் மடிந்து விடும்.. ஆடியில் திரும்ப மணற்குன்றுகளின் சாம்ராஜ்யம்.. மணற்குன்றுகளின் அமைப்பை வைத்து சிலர் ஆருடம் கூட சொல்வதுண்டு..!
திடீரென்று மின்னல் வெட்டி மழை பெய்தது. கண் முன்னே மழை நீரால் அடித்துச் செல்லப்பட்ட மணற்குன்றுகள் ஆற்றுப் படுகையில் சங்கமித்தன.. படுகையிலிருந்து பார்வையை எடுத்தார்..
இது எ..என்ன ??
மணற்குன்றுகளே இல்லாதபடிக்கு பச்சை பசேலென்று வித விதமான செடி கொடிகள் தழைத்திருந்தன..! ! கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுவர்கள் கிழங்கெடுத்துக் கொண்டிருந்தனர்..
“ காசு கொடுத்து மீனை வாங்குவானா யாராவது? மீனு, கெழங்கு, கிடுகு, உரத்துக்கெல்லாம் காசு கொடுப்பாகளா? ” சிலர் பேசிக் கொண்டே போயினர்..
என்ன சொல்கிறார்கள் இவர்கள்? காசு கொடுத்து தண்ணீரை வாங்குகிற காலம் இது ! !
திரும்பவும் மணற்குன்றுகளின் சாம்ராஜ்யம்..! ! காற்றுக்குப் பாதை அமைத்தாற் போல் இரு புறமும் நெருக்கமான தென்னை மரங்கள்.. சற்று உற்றுக் கவனித்தார்- கால்நடைகள் ஓய்வெடுப்பது கண்ணுக்குத் தெரிந்தது..!
அவர் ஆற்றின் பக்கம் பார்வையைத் திருப்பினார்..
ஆற்றின் கரைகளில் முண்டியடிக்கும் தாவரக்கூட்டம்.. இலைகள் மேல் துயில் கொள்ளும் சிறு பறவைகள்..! ! “ கொர்ரக்.. கொர்ரக்..” என்ற தவளைகளின் இசைக் கச்சேரி.. திடீரென்று விண்மீன் உதித்த மாதிரி இருந்தது. விண்மீன் கூட்டங்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தன..! மின்மினிகள்..! !
ஆற்றுக்கு அந்தப் பக்கமாக வீடுகள்.. மற்ற பக்கமெல்லாம் பரந்த நீல வானம்.. பச்சைப் பசேலென்று தோப்புகள் போர்த்திய விரிந்த மணற் பரப்பு..!
கீழே இறங்கினார்..
“நா தங்கதுரையோட அம்மாதான் ” என்றாள் எதிர்பட்ட பெண்மணி.. “அவன் நேத்து எங்கயும் வெளில போகலையே? ஜொரம் வந்து படுத்திருந்தான்.. முந்தாநாளுதான் கோழிங்கள பத்திட்டு வந்தான்.. நேத்து ராத்திரி கொஞ்ச தூரம் நடந்திட்டு வந்தான்.. கிறுக்குப் பய..! முந்தாநாளு நடந்ததெல்லாம் ஜொரம் வந்த பயலுக்கு நேத்து நடந்தா மாதிரி இருந்திருக்கும்.. வேற ஒண்ணுமில்ல..! ”
சே.! அமானுஷ்யம் என்று ஒன்றுமில்லை..
தெருவுக்குள் திரும்பி நடந்த சமயம் ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது.. நினைவஞ்சலிக்கான சுவரொட்டி.. தோற்றம்.. மறைவு.. அந்தப் பெண்ணின் படம்..! இப்போதுதானே பேசி விட்டுப் போனாள்..! ! ! ! !
அவருக்கு வேகவேகமாக மூச்சு வாங்கியது.. ! ! திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.. ஓடினார்..
வேகமான ஓடியவரை ஒரு கிழவி நிறுத்தினாள்.
“ இந்த போஸ்டர்.. அந்தப் பொண்ணு..” கிரிதர் படபடத்தார்..
“ அட அப்பா.. இது தங்கச்சிக்காரி.. செத்தது அக்காகாரி..! ரெண்டுமே பாக்க ஒண்ணு மாதிரி தெரியும்.. ரெண்டுமே தங்கதொரையோட அப்பாவுக்கு பொண்டாட்டிக.. ! தங்கதொரை ரெண்டையுமே அம்மான்னுதான் கூப்பிடும்..! ! “
கிரிதர் அந்தப் பாட்டியை உற்றுப் பார்த்தார்.. பாட்டி சாவகாசமாகவே நடந்து போனாள்..
ஆற்றில் இறங்கிய பிறகும் அவர் பார்வை பாட்டியையே தொடந்தது. பாட்டி காற்றோடு காற்றாக கரைந்து விடுவாளோ என்கிற பயம் தோன்றியது.. அவருக்கு மூச்சு வாங்கியது.. சற்றுக் குனிந்து பார்த்தார்..! ! ஆற்றுச் சுழலில் அவர் கால்களும் சுழன்று நீராக ஓடியது.. இப்படியாக மெள்ள மெள்ள அவர் உருவமும்..!
அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே ஒரு கூட்டம் நின்றிருந்தது.. “ நாலு நாளா கோமாவுல இருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்.. ! நெஞ்சுக் கூட்டுல மின்சார அதிர்ச்சியெல்லாம் கொடுத்தோம்.. சுயநினைவும் வந்தது.. பழசாகாத பழைய மாடல்ன்னு ஏதோ பேசினார்.. திரும்ப நினைவு தப்பிடுச்சி.. நௌ ஹீ ஈஸ் நோ மோர்..” என்றார் டாக்டர்..
வானாபுரம் போலிஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வந்த காவல் அதிகாரி ஊரின் எல்லையை அடைகிறபோது மாரடைப்பால் மயக்கமடைந்து விட்டார்.. அவரைப் பார்க்க வந்த உதவியாள் ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.. இரண்டு வயதில் பார்த்துப் பழகி, நெஞ்சின் அடித்தளத்தில் புதைந்து போய், பாட்டியின் கதைகளால் சாகா வரம் பெற்ற நினைவுகள் கிரிதரை அப்படியே விட்டு விடுமா..! அவரை அப்படியே அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டன..! ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வானாபுரமும், பத்து வருடங்களுக்கு முந்தைய காவல் நிலையமும் ஆழ் மன ஆசையுடன் காட்சிகளாக விரிந்திருக்கிறது...! !
அது சரி, அவர் மயக்கமடைந்தது எதைப் பார்த்து ???
கிரிதர் காரில் வந்த தார்ச்சாலைதான் தொண்டியாறு..! ! !