காதல் டைம் மிஷின்

கடந்து செல்லும் வழியில்
ஒரு துப்பட்டாவோ
ஒரு மலரோ
ஒரு ஸ்கூட்டியோ
ஒரு முகச்சாயலோ
வருகையில்

அப்படியே ஒருகணம் காலம்
ரிவேர்ஸ் கியர்ப்போடும்
வேகமான பின்னோக்களில்
உதிர்ந்த இலைகள் எல்லாம்
மரத்தில் வந்திணையும்
பசுமை நிறைந்த வனத்தில்
ஒரு அருவி கீழிருந்து மேலேறிக்கொண்டிருக்கும்
வழிந்த கண்ணீர் கண்களுக்குள் மீண்டும்
நுழைந்து இருக்கும்
அந்த நேரத்தில்
நின்று முன்னோக்கும் காலத்தில்
நீ உதறிய அந்த வரிகள் மட்டும்
என் செவிப்பறைக்குள் கணநேரம் வசித்து
ஒரு வறட்சி புன்னகையை
நிகழ்காலத்தில் தவழவிடும்

யாருக்கும் தெரியாது
எனது உடலுக்குள் இருக்கும்
இந்த டைம் மிஷின்
எந்நேரம் உன்னை வந்தடையும்
எந்நேரம் மீண்டும் திரும்புமென

அதன் சாவி என்னிடமும் இல்லாதது
விசித்திரம்
ஒருவேளை இருந்திருந்தால்
நான் நீங்காத அந்த கனவுலகில்
நீ அந்த வார்த்தைகளை உதிர்க்கும் முன்
இருந்த அந்த காலத்தில் இருந்து
திரும்பாமல் இருந்திருப்பேனடி

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (13-Apr-17, 12:47 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 84

மேலே