இந்துக்கள், இலக்கணத்தை வழிபடுவது ஏன்
இந்துக்கள் கல்லை (சிலைகள்), மண்ணை (பூமாதேவி), உலோகத்தை (விக்ரஹம்), செடி,கொடி, மரம், இலைகளை (வில்வம், துளசி, அரச மரம், ஆல மரம்) பூக்களை, சின்னங்களை (ஓம், ஸ்வஸ்திகா) என்று ஏராளமான விஷயங்களை வழிபடுவது நாம் அறிவரும் அறிந்த விஷயம். காடு மலை, நதி, நகரங்கள், பத்தினிப் பெண்கள் என்று பெரிய பட்டியலே போட்டு “பிராத ஸ்மரணம்” (Morning Prayer) என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இது உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை. அதாவது எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான், உன்னிடத்திலும் என்னிடத்திலும் இறைவன் இருக்கிறான் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை இது.
ஆனால் உலகில் இலக்கணத்தை — அதுவும் செய்யுள் தொடர்பான யாப்பு இலக்கணத்தை (Prosody) அவன் தினமும் வழிபடுகிறான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? வேத காலத்திலிருந்து, அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இன்று வரை இது தொடர்ந்து நடக்கிறதென்றால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இதன் பயன் என்ன என்பதையும் அவர்களே சொல்லிவைத்துள்ளனர்.
அந்தக் காலத்தில் மூன்று வருணத்தார் செய்து வந்த சந்தியாவந்தனம் என்னும் சடங்கை இன்று பிராமணர்கள் மட்டும் தினமும் மூன்று முறை செய்து வருகிறார்கள். சூர்ய உதயத்துக்கு முன்பும், நண்பகலிலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னரும் இவ்வாறு செய்வர். இதில் காயத்ரீ மந்திரம் துவங்குவதற்கு முன் உடலில் மூன்று அங்கங்களைத் தொட்டு சில மந்திரங்களைச் சொல்லுவர். அதில் தலையின் மீது கையை வைத்து ஏழு ரிஷிகளின் பெயர்களையும் மூக்கின் மீது கையை வைத்து ஏழு யாப்பு இலக்கண வகைகளின் பெயர்களையும், வயிற்றின் மீது கையை வைத்து அக்னி, இந்திரன் முதலான ஏழு வேத கால தெய்வங்களின் பெயர்களையும் சொல்லி வழிபடுவர்.
ஏழு ரிஷிகளை வழிபடுவதிலோ
, ஏழு வேத கால தெய்வங்களை வழிபடுவதிலோ கூட ஆச்சர்யம் இல்லை. இடையே யாப்பிலக்கணத்தின் பெயர்களைச் சொல்லி (செய்யுளின் Metre சீர், அடி) வழிபடுகிறார்களே இதுதான் உலக அதிசயம். அதுவும் கூட ஒரு அழகான வரிசைக் கிரமத்தில் (Syllables) கூடிக்கொண்டே போவது இன்னும் அழகு! உலகிலேயே மிகவும் முன்னேறிய நாகரீகம் – இந்து நாகரீகம் — என்பதை இந்த இலக்கண வழிபாடும், கணித அமைப்பும் காட்டுகிறது!
மூக்கில் கைவிரல்களை வைத்து அவர்கள் காயத்ரீ, உஷ்னிணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி சந்தாம்சி என்று சொல்லுவர்.
இதனால் என்ன என்ன பலன் கிட்டும் என்பதை ஐதரேய பிராமணம் விளக்குகிறது
காயத்ரீ என்பது மூன்று வரிகளில் 8 (Syllables) அசை வீதம் 24 அசைகளைக் கொண்ட செய்யுள்
உஷ்ணிக் =28
அனுஷ்டுப் = 32
ப்ருஹதி = 36
பாங்க்தி=40
த்ருஷ்டுப் = 44
ஜகதி =48
அசைகளைக் கொண்டது. எண்கள் நாலு நாலாக எவ்வளவு அழகாக கூடிக்கொண்டே போகிறது என்று பாருங்கள். இதெல்லாம் 6000 ஆண்டுகளுக்கு முன் செய்யபட்ட செய்யுள் இலக்கணம்; மாக்ஸ்முல்லர் 3500 ஆண்டுகளுக்கு முந்தியது வேதம் என்று சொன்னார். பின்னர் காலத்தை நிர்ணயிக்க முடியாத காவியம் என்று சொல்லிவிட்டார். ஆயினும் ஹெர்மன் ஜாகோபி போன்றோர் கி.மு. 4500 என்று வேதத்துக்கு வானசாத்திரம் மூலம் கால நிர்ணயம் செய்துவிட்டனர்.
மந்திரங்களில் மிகச் சிறந்தது காயத்ரீ மந்திரம்; அதனால் அடைய முடியாதது எதுவுமே இல்லை.
உஷ்ணிக் யாப்பில் உள்ள இரண்டு மந்திரம் சொன்னால் நூறாண்டுக்காலம் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்று ஐதரேயம் செப்பும்
தேவலோக இன்பம் வேண்டுவோர் இரண்டு முறை அனுஷ்டுப் யாப்பில் மந்திரம் சொல்ல வேண்டும்
பலம் வேண்டுவோர், அரசாட்சி வேண்டுவோர் இரண்டு த்ருஷ்டுப் யாப்பு மந்திரங்களையும்,
பசு, ஆடு மாடு செல்வம் வேண்டுவோர் ஜகதி மந்திரங்களையும்,
பயன்படுத்த வேண்டும்.
ப்ருஹதி யாப்பு செய்யுள்கள் புகழையும் நற் பெயரையும் ஈட்டித்தரும்
காயத்ரீ என்பது அக்னிக்கும், த்ருஷ்டுப் என்பது இந்திரனுக்கும் உரியது.
ரிக் வேதத்தில்
த்ருஷ்டுப் வகை செய்யுள் 4253
காயத்ரீ = 2451
ஜகதி = 1348
அனுஷ்டுப் = 855
உஷ்ணிக் = 341
பங்க்தி = 312
ஏனைய அல்லது கலப்பு வகை= 849
ஆக மொத்தம் 10409 செய்யுள்கள் இருப்பதாக சௌனகர் சொல்கிறார்.
நடன இலக்கணம்
சந்தஸ் (யாப்பு) முதலிய சொற்கள் நாட்டியக் கலைச் சொற்கள் (அடி, பதம், அசை , சீர்) ஆதலால் ஒரு காலத்தில் வேத மந்திரங்கள் நடனத்துக்குப் பயன்பட்டவை என்பார் மாக்ஸ்முல்லர்.
எது எப்படியாகிலும் வேத கால இந்துக்கள் நாடோடிகளுமல்ல, அவர்களுடைய நாகரீகம் இந்தியாவுKக்குள் இறக்குமதியான சரக்குமல்ல என்பதை இந்துக்களின் யாப்பிலக்கண வழிபாடு காட்டும். ஏனெனில் இது வேறு எந்த நாகரீகத்திலும் இல்லாத புதுமை.
கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்