தென்றலாய் வருவாயா மழையாய் பொழிவாயா

அருகே வந்தேன்
பூமுகம் புன்னகை அரும்பியது
செம்மலர் சிற்பம் பொறித்த
உன்னிதழ் கதவை மூடினாய்
சிந்தவந்த முத்துக்கள் நிலம்
சிதறாமல் அடைபட்டன
நான் அண்ணலாய் நோக்கினேன்
நீ அவளாய் என்னை நோக்கினாய்
கயல்மீன் முட்கள் என்னைத் தைத்தன
கம்பி இல்லா மின்சாரம் என்னுடலில் பாய்ந்தது
தீக்காய்ச்சல் என்னிதயமெங்கும் பரவியது
நீ பார்த்தாய்
நானும் பார்த்தேன்
உனக்கென்ன வேதனைமுழுக்க எனக்குத் தான்
என்னை முள் தைத்தது
தீச் சுட்டது
இதற்கு யார் காரணம்
நானல்ல நீ
ஆதலால்
தென்றலாய் தழுவி
எனக்கு ஒத்தடம் கொடு
முட்காயம் மறையட்டும்
மழைத் தூறலாய்
வந்து மருந்து தடவு
தீக் காயம் செல்லட்டும்
மீண்டும் போகாதே
என்னிடமே இருந்து விடு
இளம் தென்றல் காற்றாக
பனி தூவும் மழையாக
மீண்டும் ஒரு நோவை
சந்திக்கும் சக்தி
என்னுடலுக்கு இல்லை
ஆக்கம்
அஷ்ரப் அலி