அன்புள்ள அவளுக்கு

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என !


[வாழ்க்கையின் மையப்பகுதியில் இருக்கும் வாலிபன் ஒருவன் தன எதிர்கால வாழ்க்கைத்துணைக்கு எழுதும் ஓர் கற்பனை கடிதம்]

வருத்தங்களையும்,மகிழ்ச்சிகளையும் சமஅளவில் சுமந்து கொண்டு இந்த கடிதம் உன்னை வந்தடையலாம்.எல்லோரும் நிகழ்கால புள்ளியில் இருந்து இறந்தகாலத்தை திரும்பி பார்ப்பார்கள்.நான் இருக்கும் காலத்தை எட்டி பார்க்கிறேன்!

என்னவளே!எங்கிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?மரத்தில் இருந்து தினம் உதிரும் பூக்கள் மாதிரி அன்பே உன்னை பற்றி நான் கொண்ட நம்பிக்கையும் தினம் தினம் உதிர்கிறது..!

வறுமை,வெறுமை,தனிமை இவற்றால் நான் சூழப்பட்டிருந்தாலும் என் லட்சிய அலைகள் ஒருபோதும் ஓய்வதில்லை.காரணம்,கலங்கிய கண்களுக்கும்,உடைந்து போன இதயத்திற்கும் மருந்தாக நீ வருவாய் என்ற ஆறுதலை நான் ஒருபோதும் மறந்ததில்லை!

அடியே!22 வருடங்கள் ஆகிறது என் வாழ்க்கை சக்கரம் இன்னும் நிற்கவில்லை.ஆற்றமுடியாத மிகப்பெரிய பணியை ஆற்றிய பிறகே என் வாழ்க்கை நின்றுபோகும்.என் கனவிற்கு வெற்றிக்கும் இடையில் உள்ள வலிகளை பூமிப்பந்தின் எங்கோ இருக்கும் நீ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை!

மனதை பிளக்கும் வழிகள்,இதயத்தை கிழிக்கும் பிரிவுகள்,அவமானங்கள்,என் நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டு தோல்விகள் என்று என் சோகப்பட்டியல் நீண்டு போகும்.உன்னை விட நான் அதிகமா நேசிக்கும் என் தலையணைக்கு கூட பல ரகசியங்களை நான் சொன்னதில்லை!

என்னவளே!என்னை மன்னித்துவிடு.நீ எனக்கு இரண்டாம் மனைவியாகத்தான் இருக்க முடியும்.நான் எப்போது என் இலட்சியத்தை மணம் முடித்துவிட்டேன்!

சொல்லமுடியாத துக்கங்கள் பீறிட்டு எழும்போதெல்லாம் மனம் உன்னை நாடும்.அன்பிற்காக எங்கும்!அனால் அன்பே நான் உன்னை அதிகம் நினைக்க கூடாது என சபதம் செய்து கொண்டேன்,நீ விக்கி விக்கி செத்துவிட கூடாதென்பதற்காக!

பேருந்து சீட்டுகளிலும்,கல்லூரி வாசல்களிலும் இளசுகள் காதலின் இலக்கணம் மாற்றிய போது காதலர்கள் மீது நம்பிக்கை இழந்தேன்.காதல் மீது அல்ல!

சில சமயம் லட்சிய தீயில் நான் முங்கி எழுகின்ற வேளையிலே உன்னை பார்க்காமலே விவாகரத்து செய்துவிடலாம் என்று தோன்றும்.அனால் அந்த எண்ணம் அடுத்த நாள் ஆதவன் உதிர்ப்பதற்குள் அஸ்தமித்து விடும்.

ப்ரியமானவளே!நீ என்னை வந்தடையும் காலமோ நான் உன்னை சேரும் காலமோ விதியின் கைக்குள் இருக்கிறது.இதுவரை நான் கடந்த அல்லது என்னை கடத்திய பெண்கள் யாரும் நீ இல்லை.காலியாக உள்ள என் இதயத்தின் அந்த தொகுதிக்கு இது இடைத்தேர்தல் அல்ல என்பதை உனக்கு நான் சொல்லிக்கொள்ள வேண்டும்.

உனக்கு எப்போதாவது அந்த இடத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் நான் சிகரம் தொடுவதற்குள் சிகரம் வந்துவிடு,அதற்கு பின் இந்த உலகில் என் இதயம் இயங்கும் காலம் மிக மிக குறைவு!

ப்ரியமுடன்.
நான்.


Close (X)

0 (0)
  

மேலே