சன்னல்

சன்னல்
கண்விழித்ததும்
என் முதல் பார்வை
நீதானே!......
வெளிச்ச ரேகை தனை
வீடெங்கும் பரவ விட்டு
புலரும் பொழுதுகளுக்கு
வண்ணம் சேர்க்க வந்தவள் நீ!...
உலகையே குறும்படமாக்கி
என் கண்களுக்குக் காட்டுவிக்கும்
தொலைக்காட்சி பெட்டியாய் நீ!
மீளாக் கனவு கண்டு
மிரளும் மனம் அசைபோட
கால் ஊன்றி பற்றி நிற்க
கை கொடுப்பதும் நீ அல்லவா!...
சோகப் பொழுதுதனில்
சொட்டும் கண்ணீருக்கு
சொல்தந்து கவிதையாக்கி
தேற்றி தோள் தந்த
தோழியாய் நீ எனக்கு!...
உனை திறக்கத் தீண்டும் முன்னே
மனப்பறவை வான் அளக்க
சிறகடித்து சிலாய்ப்பதேனோ!...
காதலரைச் சேர்த்து வைக்கும்
கடமை கொண்ட ஊடகம்போல்
பதிவு அலுவலக ஊழியனாய்
பாத்திரம் தான் இங்குனக்கு!...
சு.உமாதேவி