சாபம் பெண்ணின் பிம்பமா

நான் விழித்துக் கொண்டேன்,
முழித்துக்கொண்டேன்
இந்த உலகத்தைப் பார்த்து ...

இது ஒரு ஏழைப்பெண்ணின் புதைக்கப்பட்ட உயிரின் எழுத்துகள்,
என் வலிகளை வரிகளாக தொடுக்கின்றேன்...

எழுத கற்றுக்கொள்கின்றேன்
எனக்கான முதல் கவிதையை,
எனக்கே எனக்கென்று துணை எழுத்து மட்டுமே!
எனக்கான சரியான இணை எழுதுக்கோள் என்று உலகமும் சொல்லட்டுமே!!!

அந்த வானவீட்டு நட்சத்திர ஓட்டைகளுக்கு சவால் விட்டு வென்றுவிட்டது
என் ஓட்டு குடுசையின் துளைகள்...

ஓய்வெடுக்கும் வயதில் ஓயாமல் ஓட்டம்பிடிக்கும் அப்பா!!!
வலிகளையும், வேதனைகளையும் முந்தானைக்குள் முடிந்து வைக்கும் அம்மா!!!
பயமுறுத்தும் பருவத்தின் பிடியில் படிக்கும் தங்கைகள்!!!
தொலைத்தது எதுவென்று தெரியாமல் வாழ்க்கை தேடலில் நான்!!!
அநாதையான எங்களின் நெருங்கிய சொந்தைக்காரன் வறுமை!
அதை கண்டும் காணாமல் கடந்து போவது ஆண்டவனின் திறமை!

ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள்...
அதுயெல்லாம் சட்ட புத்தகத்தில் வாசிக்கும் வரிகளாக மட்டுமே...
ஆண் வீரத்திற்கும்,
பெண் சாபத்திற்கும் என்ற பாகுபாட்டோடே படைத்துவிட்டாரோ? அந்த பிரம்மன்?

என்னுரிமையை வாய்விட்டு கேட்டால் "வாயாடி" என்கிறார்கள்,
என் சம உரிமையை கேட்டால்
"படித்த திமிரு" என்கிறார்கள் பற்றாக்குறைக்கு வளர்ப்பு சரியில்லை என்று பெற்றோர்களையும் சந்திக்கு இழுக்கிறார்கள்!

ஆயிரம் கைகள் என் கழுத்தை நெறித்தாலும் என் குரலை உலகுக்கு அறிமுகபடுத்துவேன் இல்லையென்றால் ஊமை என்ற பட்டமளிப்புடனே புதைக்கப்படுவேன்...என்ற பயத்தில்

அறைகுறை ஆடைதான் தவறின் அறங்கேற்றமெனில்,
அடக்கவுடக்கமாய் கண்டாங்கி
சேலையில் நான் நடக்கையிலே
என் உச்சி முதல் பாதம்வரை ஆராய்ச்சி நடத்தும் கண்களை கோடாரியால் வெட்டி சாய்க்கட்டுமா?

பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டி தந்த உயிரை வெறும் பெண்களின் கடைக்கண் பார்க்கைக்காக சாகசம் நிகழ்த்தும் வீரர்களே! உயிர் போனால் போனது தான் என்று நீங்கள் அறியாததா?

என் பெண்மையை விலைப்பேசும் உங்கள் கண்கள் அறியுமா?
நான் உங்கள் உடன் பிறவாத சகோதரிதான் என்று!!!

பெண்ணை வர்ணித்து எழுதிய வரிகள் எல்லாம் தொலைந்து போக,
இந்த நவீன உலக வரிகள் பெண்ணினத்தையே மானபங்கபடுத்துகிறது!!!
என் இனத்தை இகழும்
ஆண் வர்கமே!
உங்களுக்கு போட்டியாய் நாங்களும் பேனா பிடித்தால் அடுத்த உங்களின் நிலைமை???

என் குடும்ப சுமைகளை முதுகில் சுமந்து நான் வேலைக்கு செல்கையில்,
என்னை உரசிப்பார்க்கும் நாகரிக உத்தமர்கள் பல,
என் பெண்மையை அலசிப்பார்க்கும் முகமூடி அணிந்த நல்லவர்கள் பல...

திருமண வியாபாரத்தில் பணப்பெட்டியுடன் படியிறங்கி புகுந்தவீட்டுக்கு பயனப்பட வேண்டுமாம் நான்?
இல்லையேல் சந்தையில் நான் விலைப்போகமாட்டேனாம்...

சரி! குடுப்பத்திருக்கே தன் உயிரை கரைக்கலாம் என்றால்,
'தியாகி' பட்டம் ஆண்களுக்கும்,
'முதிர்கன்னி' என்ற முத்திரைப்பெற்று சாபத்தோடே சாவு என்கிறார்கள்!!!

பணத்திரையில் என் கற்பை ஏலம் விடுகிறார்கள்,
பொய்யான காதலைக்காட்டி
என் அன்பை வீழ்த்தப்பார்க்கிறார்கள்,
கல்யாண பேரத்தில்
என் உரிமையை
அடித்து விரட்டுகிறார்கள்!

இதிகாசத்தில் படித்திருந்தேன்,
ராமர் நாடு திரும்பி ஆட்சியை தொடர்ந்தார் என்று!
நான் படித்த மட்டில்,
ராமர் இன்னும் காட்டில் தான் வாசம் செய்கிறார்போல,
பெண்களின் சேலையை இழுக்கும் துரியோதன்களும்,
அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ராவணன்களின் ஆட்சிதான் நடைமுறையில் இருக்கிறது!

நான் வறுமையால் விழுந்து விழுந்து வாடியவள்தான்,
ஆனால்
ஒருபோதும் எழுந்து நிற்க மறந்ததில்லை,
தட்டிக்கொடுத்து உதவுங்கள் என்று கேட்கவில்லை...
தடவிப் பார்த்து சோதிக்காதீர்கள் என்று தான் வேண்டுகிறேன்...

குற்றம் குறைக்கூற அத்தனை ஆண்களும் குற்றவாளி இல்லைதான்,
அப்படிதான் நானும் நம்புகிறேன்!!!

எழுதி எழுதி என் பேனாவின் உயிர் கரைக்கிறதே தவிர,
கோணல் புத்திக்கொண்ட ஆண்களை என் பேனா முனை
குத்தி கிழிக்கவில்லையே என்ற வருத்தத்துடனே முடிக்கின்றேன்!!!
எனக்கான கவிதையை...

எழுதியவர் : ஸ்ரீதேவி (27-Apr-17, 8:59 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 1047

மேலே