கவிப்பெண்
![](https://eluthu.com/images/loading.gif)
வெளியில் இறங்கி நீ வர ...
மேகமொன்று கவிமழையை
உன்மேல் வாசிக்க தொடங்கிற்று ...
கவியின்
எதுகை உன் கையையும்
மோனை உன் முந்தானையையும்
நனைத்திருந்தது...
உன் காதணியில் பட்டு
தெரித்துக்கொண்டிருந்தது
அணி ஒன்று ...
உன் நெற்றியில்
விழுந்த உருபுகள்
வெவ்வேறாக பிரிந்து
நீந்தி கொண்டிருக்கிறது
உன் மாரிலே...
ஈறில்லா சிகையிலே
ஈரமாய் சொட்டுகிறது
ஈரசைசீர் ஒன்று ...
உன் இதழிலே
இயல் இசையமைத்து
நடனம் ஆடிக்கொண்டிருக்கிறது ...
இறுதியாக நீ
உடை பிழிகையில்
கவிநடை வழிந்தோடியது ..
இதை பார்த்து நிற்கும் எனக்கு
ஒரு சந்தேகம்...
துளி துளியாய்
நனைந்திருப்பதால்-உனை
துளிப்பா என்பதா ?
நீ ஆறடி மழையாதலால்
உனை வெண்பா என்பதா...