புத்தகம் மூடிய மயிலிறகு
புத்தகம் மூடிய மயிலிறகு....
களைப்பாக வீடு வந்து சேர்ந்த எனக்கு சுடச்சுடத் தேநீர் கொடுத்த என் தாய், "ஏண்டா, வேற வேலை தேடக்கூடாதா... இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் சிறமப்படுவே...", என்று விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரியும் என்னிடம் பாசத்தோடும், மகன் உடல் நோக அலைகிறானே என்ற கவலையோடும் கேட்டாள். "நானும் தேடாமல் இல்லையே, நல்ல வேலை கிடைக்கிற வரை சிறமப்பட வேண்டியதுதான்". நான் பருகி முடித்த தேநீர்க் குவளையை எடுத்துக்கொண்டு அடுக்களை நோக்கிச் செல்லுகையில் "சிவா, உன் பேருக்கு திருமணப் பத்திரிகை ஒண்ணு வந்திருக்கு... தொலைக்காட்சிப் பெட்டி மேலே வச்சிருக்கேன் பாரு ..." என்றாள்.
ஒரு சின்னக் குளியல் முடித்துவிட்டு தொலைக்காட்சியின் அருகே வந்தேன்… அழைப்பிதழை எடுத்துக்கொண்டு மின்விசிறியை முழுமூச்சாகச் சுழலவிட்டு வெற்றுத்தரையில் ஓய்வாக அமர்ந்தேன்.
மணமகன் "சிரஞ்சீவி. இரா.பத்மநாபன்" மணமகள் "சௌபாக்யவதி. வி. ரேவதி".
எனக்கு இந்தப் பெயரில் யார் நண்பன்... யோசித்தேன். விலாசம் பார்த்தேன் மிகச் சரியாக என் பெயரும், நான் குடியிருக்கும் வீட்டு விலாசமும். வெளிப் பழக்கம் நிறைய உள்ள எனக்கு இந்தப் பெயரில்... ஆங்... V.S. Electronics உரிமையாளர்... ஆனால் அவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறானே... ஆக அவரில்லை என்ற முடிவில்... திருமணம் எந்த ஊரில் என்று மறுபடியும் அழைப்பிதழைப் புரட்டினேன்... திருச்சியில் திருமணம், நாள் 02-02-1998. என் கல்லூரிக் காலங்கள் கரைந்துபோனதெல்லாம் திருச்சியில்தான். ஒருவேளை கல்லூரி நண்பனாக இருக்குமோ. பட்டப் படிப்பு முடிந்து ஐந்து ஆண்டுகள்தான் கடந்திருக்கிறது. மிகவும் நெருக்கமான ஓரிருவரைத்தவிர மற்றோர்களை எனக்கு மறந்துவிட்டது. அன்றாட வாழ்வின் அவசரங்களிலும், குடும்பப் பொறுப்புகளிலும், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளிலும், முன்னேற்றத்திற்கான புதுப்புது முயற்சிகளிலும் என்னை ஆட்படுத்திக்கொண்டதில் கல்லூரி நண்பர்கள் பலர் என் நினைவிலிருந்து மறைந்துவிட்டார்கள். இன்றளவில் இதுவொன்றும் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால் அந்தக் கல்லூரி நாட்களின் விளிம்பில் நின்றுகொண்டு நட்புக்கள் ஒவ்வொருவரிடமும் Autograph வாங்கிக்கொண்டு பிரியா மனத்துடன் பிரிந்ததை என்னும்பொழுது… இதயக் கனம் சற்று கூடியது... தொண்டைக்குழியை அடைக்க எங்கிருந்தோ ஒரு பந்து உருண்டு வந்து விழுந்தது... பழைய நினைவுகள் சுகமானது... "கண்ணா, சாப்பிட வா..." அம்மா அழைத்தது என் நினைவைக் கலைத்தது. காலையில் அவசரமாகக் கிளம்பி... பகல் முழுதும் அலைந்து... இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வீட்டிற்கு வந்து... இந்த இரவு உணவைத் தாயுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வதுதான் என் அன்றாட வாழ்வின் அலாதி இன்பம்.
படுக்கைக்குச் சென்ற எனக்கு மீண்டும் அந்த அழைப்பிதழின் நினைப்பு யார் அந்த பத்மநாபன்? ஒரு வேளை என் Autograph புத்தகத்தைப் பார்த்தால் நினைவிற்கு வரலாம்... படுக்கையை விட்டு எழுந்தேன்... மேசை அறையைத் திறந்தேன்... பல புத்தகங்கள், குறிப்புகளுக்கு அடியில் இருந்த அதை மிக ஆவலோடு எடுத்தேன். கையில் எடுக்கும்பொழுதே கல்லூரி கொஞ்சம் நினைவிற்கு வந்தது... முதல்பக்கத்தைப் புரட்டியதும்... அப்பப்பா.... புல்லரித்துவிட்டது.
"நீல வானை நிலம் மறந்தாலும்
நிசமான நண்பா நின்னை நான் மறவேன்"
- அன்பன் வசந்தன்
ஆம்... வசந்தன்... விளையாட்டாகப் பேசுவதில் வல்லவன். எப்படி இவனை மறந்தேன்? என் வாழ்க்கைச்சூழ்நிலை அப்படி. திருப்பத் திருப்ப என்னுள் எதோ ஒரு ஆதங்கம். பல நண்பர்கள், தோழிகள், ஆசிரியர்கள், பலவிதமான தமிழ் வரிகள், நெஞ்சை நெருடும் வாசகங்கள்.... யாவும் என்னை எதோ செய்தது... இவற்றைப் பார்க்கும்பொழுது கையெழுத்து வாங்காமல் விட்டுப்போன சிலர்கூட நினைவில் வந்தார்கள். இவர்களையெல்லாம் எப்படி என்னால் மறக்க முடிந்தது?! காலம் ரொம்பத்தான் வஞ்சகமானது, தேவைகள் பெருகப்பெருக அந்தத் தேய்ந்துபோன நாட்களில் நண்பர்களாய் வந்து போனவர்களை மறந்துபோவது நியாயம்தானா?
"புதியவர்களின் வரவால்
பழையவர்களை மறக்காதே"
- அன்புடன், R.பத்மநாபன், B.Sc.,
ஓ... பத்மநாபன், எனக்குப் போட்டியாக அந்நாளில் படிப்பில் முன்னேறுபவன், ஆனால் அளவு கடந்த பாசத்தோடு என்னுடன் பழகியவன், நினைவில் வந்துவிட்டான். சே... இவனைக்கூட மறந்துவிட்டேனே, விதியின் வலிமை இதுதானோ?
நியாயவிலைக்கடையில் சர்க்கரைக்கு வரிசையில் நிற்பதும், மின்கட்டணம் செலுத்துவதற்கு வெயிலில் நிற்பதும், வங்கி நேரம் நிறைவடையும் பொழுதுகளில் அவசரமாக உள்ளே சென்று பணியாளர்களிடம் திட்டு வாங்குவதும், அங்காடித் தெருக்களின் கூட்டத்தில் அன்றாடம் அலைமோதுவதும், பேருந்து நெரிசல்களில் சரியான சில்லறை இல்லாமல் நடத்துனரிடம் வசவு பெறுவதும், இப்படியாகப் பல பதற்றங்களில் என் தினசரி வாழ்க்கை இருக்கலாம், அதற்காக, அந்தக் கல்லூரி நண்பர்களை நான் மறந்துபோனது சரிதானா?... எப்படியும் திருமணத்திற்குச் செல்லவேண்டும் பல நண்பர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் இதைவிட்டால் வேறு ஏது. எனக்குள் மகிழ்ச்சி.
இன்றுதான் பத்மநாபனின் திருமணம். காலை மணி நான்கு. எழுந்துவிட்டேன். இன்றைய என் சுறுசுறுப்பு என்னைப் பெற்றவளுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். நட்பின் சின்னங்களைச் சந்திக்கப் போவதால் என் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லால் வெளிப்படுத்த இயலாது. காலை மணி ஐந்து முப்பது. என் தாயிடம் விடை பெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் சென்றேன்.
திருமண மண்டபம் அதோ வந்துவிட்டது… என் பார்வையை எல்லாத் திசைகளிலும் செலுத்தினேன். மனதிற்குள்... பக்...பக்... வேகமாக அடித்துக் கொண்டது இதயம்...மண்டபத்தினுள் நுழைகிறேன்... சிவா என்று யாரோ அழைப்பது போல் ... ம்கூம்... பிரமை.... அங்குமிங்குமாய் மணமக்களின் உறவுக் கூட்டங்கள்... சிறுவர்களின் ஓடிப்பிடித்து விளையாட்டு.... சாப்பாடு தயாரா என்று அங்கே யாரோ யாரிடமோ கேள்வி எழுப்புகிறார்கள்.... அங்குமிங்கும் பார்த்த நான் ... சற்றே தலை நிமிர்த்தி.... மணமக்களைப் பா.....ர்.....க்.....க இன்ப அதிர்ச்சி.... மாப்பிள்ளை பத்மநாபன்... அவர் யாரோ… ஆனால்..... ஆனால்..... ரே வ தி… அந்த மணப்பெண்.....! தலை சுற்றுகிறது எனக்கு... ஆம்... அதே ரேவதி... கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் இளையவள்... இருந்தாலும் நெருங்கிய பழக்கம்... பாடக் குறிப்புகள் கொடுப்பதிலிருந்து, மதிய உணவுப் பரிமாற்றம் வரை. தூய நட்பின் சின்னமான இவளைக்கூட மறந்துவிட்டேனே... அதோ என்னைப் பார்த்துப் புன்னைகைக்கிறாள், நானும்கூட... எனக்குள் நேர்ந்த பூகம்ப அதிர்ச்சி அவளுக்குத்தெரிய நியாயமில்லை...
இந்த வேகமான உலகம் வகுத்துக் கொடுத்த பாதையில் நிலைப்பதற்காக, பசுமையான பல பழைய நினைவுகளை மயிலிறகாய் திறக்காத புத்தகத்தினுள் வைத்து மூடுவதுதான் வாழ்க்கையா…?
படைத்தவர்:
பெயர்: மீ.மணிகண்டன்
புனைப் பெயர்: மணிமீ