மரகத வீணை

பாடகர் அண்ணன் ஸ்ரீராம் பார்த்தசாரதி அவர்கள் அனுப்பி வைத்த இந்தப் படத்தைக் கண்ட கணத்தில் கொட்டிய பாடல் :

மரகத வீணையைக் கண்டிடும் போதே
மனதினில் இங்கோர் ஆசையெழும் ! - எனைக்
கரத்தினி லிதுபோல் கலைமகள் ஏந்திடக்
காதலில் நெஞ்சம் ஓசைதரும் !

பார்த்தவுடன் கவி ஊர்த்துவ மாகிடப்
பாடலும் நெஞ்சில் பொங்கிவரும் - அதில்
வார்த்தெழும் சொற்கள் வரிசையில் வந்தே
வாணி பதத்தினில் ஆசிபெறும் !

பச்சை நிறப்புயல் இச்சை தரும்விழி
படரும் கூந்தலும் முகிலாகும் - அதில்
உச்சி குளிர்ந்திடும் உள்மனக் கடலில்
உற்சா கத்தின் அலையாடும் !

பாதமெ னப்படும் சொர்க்கக் கதவுகள்
பாலனின் கையில் எட்டிவிடும் - விழும்
போதிலெ னைச்சுடும் பொய்மைகள் நீங்கும்
பொலிவும் அருளும் கொட்டிவரும் !

ஞானவொ ளிச்சுடர் வந்து நிறைந்திடும்
நானெனும் ஆணவம் நீங்கிவிடும் - ஒரு
கான மயில்போல் ஆடுமென் நெஞ்சம்
கண்களில் கண்ணீர் தோன்றிவிழும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-May-17, 7:45 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 117

மேலே