எனக்கான வேடந்தாங்கல்

எனக்கான வேடந்தாங்கல்
ஏங்கி நாடும்
என் பயணம்
எங்கிருந்தோ
தொடங்கியது
ஏனென்றறியாமல்...!
தோல்விகளின்
தோள் கணப்பில்...
அவமான அணிவகுப்பில்...
பரிகாச புன்னகையில்...
உதாசீனப்
பெருவெளியில்...
ஏதலியாய் ஏக்கமுற்று
எங்கோ திரிந்தபடி
எனக்கான வேடந்தாங்கல்
ஏங்கி நாடும்
என் பயணம்
எங்கிருந்தோ
தொடங்கியது
ஏனென்றறியாமல்!
எனக்கான விடியலது
வெற்றியென
விகசித்தேன்
கரங்கோர்த்து
உடன் துயின்ற
கண்ணீரை உணராமல்!
அன்புறவின்
அரவணைப்பில்
அழுகை சாகும்
என்றிருந்தேன்
துன்பநதி பெருஞ்சுழலில்
துடுப்பசைத்தேன்
மடையன் போல்...!
கிட்டிய நெல்லி
காயென்றேன்!
எட்டிக் காயை
கனியென்றேன்!
குளவிக்கூட்டை
குழையென்றேன்!
நீரின் நிறமது
நீலமென
நிருபணம் செய்திட
மூடன் போல்!
காலமெனும் காகிதத்துள்
கவிப்புனைய
யத்தனித்தேன்
கரையெனவே
கிழித்த கோட்டின்
வரையறையில்
தத்தளித்தேன்
கற்பனையின் சிறகுபற்றி
விண்ணேற எக்களித்தேன்
யதார்த்த எரிக்குழம்பில்
எறும்பெனவே
முக்குளித்தேன்!
இருப்பதின் அருமை
விளங்கவில்லை
நான்
இழந்ததின் வறுமை
விலகவில்லை!
வார்த்தையில் திரித்தேன்
வானவில்லை
வாழ்வியல் நிதர்சனம்
பெருந்தொல்லை!
அகழியிடை
முதலையென
அழுகை நதி
ஆறவில்லை
கடுங்கோடை மேகமென
வசந்தமென்னை
வருடவில்லை
காலமெனும்
பொற்குவியல்
முனைந்தெடுக்க
வழியுமில்லை
புரியாமல்
கரைந்தோடும்
வாழ்க்கையென்றும்
இனிப்பதில்லை!
எனக்கான வேடந்தாங்கல்
ஏங்கி நாடும்
என் பயணம்
எங்கிருந்தோ
தொடங்கியது
ஏனென்றறியாமல்!
தோல்விகளின்
தோள்கணப்பில்...
அவமான
அணிவகுப்பில்...
பரிகாச புன்னகையில்...
உதாசீனப்
பெருவெளியில்...
எனக்கான வேடந்தாங்கல்
ஏங்கி நாடும்
என் பயணம்
எங்கிருந்தோ
தொடங்கியது
ஏனென்றறியாமல்!!
***********************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (6-May-17, 10:48 pm)
பார்வை : 73

மேலே