அரச மரம்
ஓர் அரசமரத்தினடியில்
அமர்ந்திருக்கிறேன்..
என் சிறுவயதில் படிப்பதற்கும்,மதிய
உணவு உண்பதற்கும் ,விளையாடவும் நிழல் கொடுத்த அதே அரசமரம்..
அன்று இதில் வீசிய குளிர்ந்த காற்று சிறிதளவும் இன்றில்லை
சிறிது அனல் காற்று மட்டும் வருகிறது
அதன் இலை அசையாமல்...
பள்ளி நினைவுகளை நோக்கி பறக்க விட்டேன் என் எண்ணச் சிறகினை...
என் மனதால் உணர முடிந்தது என் சிறுவயது பள்ளிநாட்களை ....
அன்றைக்கு பள்ளியில் மதிய உணவிற்காக தயாரிக்கபடும் பருப்பு சாம்பரின் வாசனையை உணர முடிந்தது என் நாசியால்...
அன்று அம்மன் கோவில் அருகிலிருந்த அடிபம்பை யாரோ அடிக்கும் ஓசை இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது என் காதில்....
அந்த அடிபம்பை பார்த்தேன்
இன்று சிமெண்ட் ரோட்டில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி சிறிது புன்னகையுடன் பார்த்தது....
நீங்கள் சிறுவர்களாக இருந்த போது சிலேடு கழுவவும்,சாப்பிட்ட தட்டினை சுத்தபடுத்தவும் என்னிடம் தான் ஓடிவருவீர்கள் என்று அழுகையோடு அறிமுகப்படுத்தியது தன் அடையாளத்தை...
வகுப்பறையின் நினைவுகளை நோக்கி சிந்திக்க ஆரம்பித்தேன்
அன்று மதிய வேளை அரசமரத்து நிழலில் வகுப்பு போய் கொண்டிருந்தது ....
பரமேஸ்வரி டீச்சர் ஆங்கிலம் பாடத்தை கற்பித்து கொண்டிருந்தார்....
எட்டுக்கால் பூச்சியின் ஒவ்வொரு காலும் என்னென்ன வேலையே செய்கிறது என்பதை இங்கிலிஷ் poem-ஆக படித்துக்கொண்டிருந்தது வகுப்பு....
நான் வேடிக்கை பார்ப்பதில் சி்தரவிட்டேன் சிந்தனையை....
அருகில்
சத்தமின்றி தன் வண்ணச்சிறகை அசைத்து பறந்த பட்டாம்பூச்சியையும் சிறகையை அசைக்காமல் வினோதமாக பறந்த தட்டனையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்....
வானத்தில் ஏதோ பயங்கர சத்தம் கேட்டது...
அனைவரும் மேலே நோக்கி அதிசயமாக பார்த்தோம் பறக்கும் அந்த விமானத்தை.....
விமானதில் சென்றால் எப்படி இருக்கும் என்று ஆசைபட்டது மனம் பட்டாம்பூச்சியை பிடித்து விளையாடும் அவ்வயதில்......
இன்று அங்கு அமர்ந்தபடி வானத்தை பார்க்கிறேன் ஒரு மணி நேரத்தில் நான்கு ஐந்து விமானங்கள் சத்தமின்றி வானத்தில் கோடுகளை போட்டபடியே சென்றன.....
காணமுடியவில்லை அன்று பார்த்த பட்டாம்பூச்சியையும் தட்டானையும்..
சுற்றி தேடினேன்
எங்கள் ஊர் இன்ன்னும்
கிராமமாக இருப்பதாலோ என்னவோ ஒரு பட்டாம்பூச்சி கண்ணில் தென்பட்டது....
தன் மெல்லிய சிறக்கினை மெல்ல அசைத்தபடி சொல்லி சென்றது
தன் கூட்டத்தினை இழந்த துக்கத்தினையும்
நாளை மனிதர்களாகிய உன் கூட்டத்திருக்கும் இந்நிலை வர வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையையும்....
அழிந்து கொண்டிருப்பது தேன் சிட்டு மட்டும் அல்ல அனைத்து இயற்கையும் தான்...
சில ஊர்கள் நகரமாகி வருகிறது என்று பெருமை கொள்கிறார்கள் அது
மற்ற உயிர்களுக்கு நரகமாகி வருவதை அறியாமல்......
ஆறாம் அறிவின் கண்டுபிடிப்புக்களால்
அழித்து கொண்டிருக்கிறோம் மற்ற ஐந்து அறிவுகளையும்....
(என் சிறு வயது நியாபகத்தில் கடுகளவு கற்பனையையும் ,உப்பளவு வேதனையையும் கலந்து உங்களுடன் பகிர்கிறேன் இப்பதிவினை)