’என்ன கொடும சார் இது’

’நல்லவேள சரியான நேரத்துக்குத் தான் பஸ் ஸ்டாப்புக்கு வந்துருக்கேன். இன்னிக்கு கரெக்ட் டைமுக்கு ஆபீஸ்க்குள்ள போய்ட்டு அந்த மேனேஜர் முகத்துல கரியப் பூசணும். ராஸ்கல் இந்த ஒரு வாரமா எல்லார் முன்னாடியும் வச்சு எப்டி திட்டிட்டான்’. இப்படி யோசித்துக்கொண்டே நான் பேருந்திற்காக காத்திருந்தேன். கைப்பேசி அழைத்தது. என் மனைவிதான். நான் யோசிக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் அழைப்பு. நான் மீண்டும் துண்டித்தேன். மீண்டும் அழைத்தாள்.
“உனக்கு என்னதாம்மா ப்ரச்சன? இவ்ளோ நேரமா வீட்ல வச்சு அர்ச்சன பண்ணது பத்தலயா?” நான் பொறுமையை பிடித்துக் கொண்டு கேட்டேன்.
“”ஏங்க இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக லீவு போடமாட்டிங்களா?” கெஞ்சும் குரலில் கேட்டாள்.
“இதுக்குதான் கால் பண்ணயா, அதான் வீட்லயே சொல்லிட்டேனேமா? இந்த மாசம் அதிகமா லீவ் போட்டுட்டேன். இப்போ போட முடியாது. கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க. நீ முதல்ல போன வை”.
”அப்போ உனக்கு எங்களவிட உன் வேல தான் முக்கியம். இல்ல?”
“ஆமாண்டி. அப்டிதான். எனக்கு என் வேலதான் முக்கியம். பேசாம என்ன டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க. போ.”
“சொல்லிட்டல்ல. என்ன இப்டி சொல்ல. நான் இன்னிக்கே என் அம்மா வீட்டுக்கு என் பிள்ளகளக் கூட்டிட்டுப் போறேன். அங்க போய் முதல் வேல உன்ன டைவொர்ஸ் பண்ணறதுதான்…”
அவள் அழுதுகொண்டே இன்னும் ஏதோ பேசினாள். நான் அதற்குள் தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.இப்படிப் பேசினால்தான் அவள் கோபத்தில் என்னிடம் பேசாமல் இருப்பாள். நானா இப்படி பேசினேன் என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான் பேருந்து வரும் திசையையும் என் கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வயது மதிக்கத்தக்க ஒருவன் கையில் ஒரு சிறுவனுடன் நின்றிருந்தான். நான் ’என்ன’ என்பதுபோல் பார்த்தேன்.
“சார் நா பக்கத்துல ரெஸ்ட் ரூம் வர போய்ட்டு வரேன். அதுவரைக்கும் என் பையனக் கொஞ்சம் பாத்துக்கோங்க ப்ளீஸ்” என்றான்.
நான் சரி என்பதா இல்லை முடியாது என்பதா என்று முடிவெடுக்கும் முன் என் பதிலுக்குக் காத்திராமல் அவன் தன் பையனிடம் “அங்கிள் கூடவே இருக்கணும் செல்லம். எங்கயும் போய்டக்கூடாது என்ன?” என்றுவிட்டு என்னிடம் திரும்பி தலையசைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.
’டேய் நான் உன்னும் சரின்னே சொல்லலடா’ மனக்குரல்(mind voice) என்னில் தோன்றி அடங்கியது.
‘இப்ப நா என்ன பண்றது. பஸ் வர டைம் ஆச்சே’ கையைப் பிசைந்து கொண்டு பேருந்து வரும் திசையைத் நோக்கினேன். எரிச்சலுடன் திரும்பினால் அந்த சிறுவன் என் கையைவிட்டு கொஞ்ச தூரம் சென்றிருந்தான்.
“டேய் டேய் தம்பி” கத்திக்கொண்டே அவனை ஓடிப் போய் பிடித்து வந்து நின்றேன். இடையில் அந்த பொது கழிவறையை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.
அப்போது என்னிடம் தன் பையனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றவன் என்னைக் கைகாட்டி ஏதோ பேசிக்கொண்டே வேறொரு திசையிலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்தான். அவனோடு இரு போலீஸ்காரர்களும் வந்து கொண்டிருந்தனர்.
என்னருகில் வந்தவன் “சார் சார் இவந்தான் சார்” என்று கூறிவிட்டு அப்போதுதான் தன் பிள்ளையைப் பார்ப்பவன் போல அந்த பையனின் முகம் முழுவதும் முத்தம் கொடுத்துக் கொண்டே என்னை ஏதோ கடத்தல்காரன்போலப் பார்த்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. இந்த சூழ்நிலையிலும் நான் பேருந்து வருகிறதா என ஒரு முறைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
அந்த போலீசாரில் ஒருவர் “நடய்யா ஸ்டேஷனுக்கு” என்றார்.
“என்னத்துக்கு சார்”
“யோவ் என்ன தைரியமிருந்தா குழந்தையையும் கடத்திட்டு இங்க வந்து தெனாவெட்டா நின்னுக்கிட்டு எகத்தாளமா கேள்வி கேப்ப? என்று கூறிக்கொண்டே என்னைப் பிடித்து நகர்த்தினார்.
“அய்யோ. சார் நான் எந்தக் கொழந்தைய எப்ப கடத்தினேன். எனக்கொன்னும் புரியலயே சார். என்று பதறினேன்.
”நீ இந்தக் கொழந்தய கடத்திட்டன்னுதான் இவர் எங்ககிட்ட புகார் கொடுத்துருக்காரு. நட” என்றார்.
”சார் இந்ததான் ஆள் கொஞ்ச நேரம் முன்னாடி என்ட்ட வந்து இந்த கொழந்தயப் பாத்துக்க சொல்லிட்டுப் போனான் சார். இப்ப வந்து இந்த மாதிரி பேசுறான். இவன் ஏதோ ஃப்ராட் பண்றான் சார்”
”யார் ஃப்ராட்ன்னு நாங்க சொல்றோம். நீ கெளம்பு மொதல்ல.
”சார் நாந்தான் தப்பே பண்ணலன்னு சொல்றேன்….”
அந்த சமயம் பார்த்து நான் செல்ல இருந்த பேருந்து வந்து சேர்ந்தது.
”சார் சார் ப்ளீஸ் சார் என் பஸ் வந்துருச்சு சார். என்ன போகவிடுங்க சார். நான் போய் அட்டண்டன்ஸ் போட்டு வந்துடுறேன் சார். உங்களுக்கு நம்பிக்கை இல்லனா இவரையும் கூட அனுப்புங்க” என்று அருகில் நின்றிருந்த இன்னொரு போலீஸ்காரரை கைகாட்டிக் கெஞ்சினேன்.
“நீ கேக்க மாட்ட?” என்று கூறிக்கொண்டே என் கையைப் பிடித்து இழுத்து நகர்த்தினர். நான் குழந்தைபோல ’வரமாட்டேன்’ என்று கீழே உட்கார்ந்து அடம் பண்ணிக் கொண்டே பேருந்தைப் பார்த்தேன். அது கிளம்பி என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தது. நான் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.
“டேய். என்ன விடுங்கடா” என்று கத்திக்கொண்டே கையை உதறிவிட்டு ஓடினேன்.
“சார் சார் ஓடாதீங்க சார்” என்று அவர்களும் என்னை பின்தொடர்ந்தனர்.
நான் ஒரு பைத்திக்காரனைப் போல ஓடி சுற்றி எங்காவது கல் கிடைக்கிறதா என்று தேடினேன். ஒரு பெரிய கல்லை என் இரு கையாலும் தூக்கிகொண்டு அவர்கள் பக்கம் திரும்பினால் அவர்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே என்னருகில் வந்து
“சார் போட்டுடாதீங்க சார். அங்க பாருங்க. அங்க பாருங்க” என்றனர்.
நான் அவர்கள் கைகாட்டிய திசையில் பார்த்தேன். அங்கே ஒருவன் ஒரு கட்டிட மறைவில் இருந்து கையில் காமிராவுடன் வெளியே வந்து என்னைப் பார்த்து கையசைத்தான்.

என் அருகில் நின்றிருந்தவன் “சார் நாங்க ஜூப்பிட்டர் சானல்லருந்து ‘ரோட் ரியாக்ஷன்’ நிகழ்ச்சிக்காக இந்தமாதிரி ரோட்ல போறவங்ககிட்ட வம்பிழுத்து அவங்க ரியாக்ஷன்ஸ காப்ச்சர் பண்ணி டிவில போடுவோம். அதுல இன்னிக்கு நீங்க. சாரி சார். ரொம்ப பயந்துட்டீங்களோ? என்றான் சாதாரணமாக.
நான் தூக்கியிருந்த கல் இன்னும் என் கையில் கனத்துக்கொண்டிருந்தது. நான் தமிழ் பட கதாநாயகர்கள் சண்டைக் காட்சியில் பேசுவார்களே அதுபோல சத்தமாக “டேய் நா என்ன மாதிரி நிலைமையில நின்னுட்டிருந்தேன் தெரியுமாடா. உங்கள விட மாட்டேண்டா டேய்” என்று கத்திக்கொண்டே அவர்களைத் துரத்தினேன்.

எழுதியவர் : மனோதினி (12-May-17, 1:30 pm)
சேர்த்தது : மனோதினி ஜெ
பார்வை : 1589

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே