பொத்தாமர தண்ணீ

பொத்தாமர தண்ணீ....

“என்ன! கருப்பையா... இம்பூட்டு வெரசா எங்க போறாப்பிலையாம்...?”

“ஒமக்கு வெவரம் தெரியாதா...? நாம மேக்கு தெரு இராமசாமி உசுரு இழுதிட்டு இருக்குல... கண்ண மூடுதுக்குல்ல ஒரெட்டு பாத்துட்டு போலாம்னுதான்...”

“என்ன...? முருகேச அய்யா இராமசாமியா...?”

“ஆமாப்பா... அவரேதான்...”

“என்னையா சொல்ற...? நல்லதானே இருந்தாரு...? ரெண்டு நாளைக்கு முன்னகூட பேரனோடு ஊரையே சுத்திக்கிட்டு திருஞ்சாரே... பொறவு எப்படி...?”

“அதாய்யா... மனுச வாழ்வுன்றது...” என்று சொல்லிவிட்டு மேற்கு தெரு இராமசாமி வீட்டை நோக்கி நடந்தார் கருப்பையா.

உசிலம்பட்டியிலிருந்து சின்னமனூர் செல்லும் வழியில் ஒரு சிறிய ஊர்தான் சி.புதுப்பட்டி. மொத்தமே இருநூறு குடும்பங்கள் உள்ள ஊர்தான் என்றாலும் இந்த உசிலம்பட்டி தாலுக்காவில் பெரிய வியாபாரிகளில் இராமசாமியும் ஒருவர்.

இராமசாமி வீட்டில் அவருடைய சொந்தங்களும் பந்தங்களும் சோகவசனங்களை பேசிக்கொண்திருந்தாலும், அவர்களுடைய முகத்தில் எந்தவொரு சோகமும் வருத்தமும் வெளிப்படவில்லை. இராமசாமியின் இரண்டு மகன்களில் மூத்தவன் முருகேசன் சென்னையிலும், இரண்டாவது மகன் மதுரையிலும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளையவனுக்கு திருமணமாகி இன்னும் குழந்தையில்லை. முருகேசனுக்கு சுகேஸ்,சுவாதி என்று இரண்டு குழந்தைகள். சுகேஸ்க்கு 9 வயதும், சுவாதிக்கு 5 வயதும் ஆகிறது.

கோடை விடுமுறைகளில் முருகேசன் தன் குடும்பத்தோடு இந்த கிராமத்திற்கு வந்து தங்கிச்செல்வது வழக்கம். அந்த நாட்களில் தனது பேரன் சுகேஸ் தன்னைப்போல இருப்பதாக நினைத்துக்கொள்ளும் இராமாசாமி எப்பொழுதும் அவனை விட்டு பிரிவதேயில்லை.

மூன்று நாட்களுக்கு முன்னர் கூட, தன் பேரனை அழைத்துக்கொண்டு வைகை அணையை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பியவர், அந்த கிராமத்தை பத்தியும், தன் இளமைகால நினைவுகளை ஒன்றுவிடாமல் பேரனோடு பேசிக்கொண்டே இருந்தார்.

“ஏம்பா..!. சுதேசு...இந்த ஊரு ஒனக்கு பிடிசிருக்கா....?”

“ம்ம்...பிடிசிருக்கு தாத்தா...”

“ஒரு காலத்துல இந்த ஊரு முழுசும் பச்சபசெல்னு இருக்கும். அம்புட்டு செழிப்பா இருந்துச்சு. அதோ அந்த மல அடிவாரவரைக்கும் ஒரே காடுதான். இப்ப பாரு வெறும் பொட்டல் நிலமா போச்சு. வாய்கால்ல எப்பவும் தண்ணி போயிகிட்டே இருக்கும். எப்ப வந்தாலும் குளிக்கலாம். ம்...ம்... ஆனா... இப்ப...?” என்று சலிப்புடன் பேசுக்கொண்டிருந்தார்.

“சுதேசு...இந்த சிவன் கோயிலுதான் இந்த ஊரிலே ரொம்ப பெருசு. இந்த கோயிலுக்கு பக்கத்துல்ல பொத்தாமர கொளம் இருக்கு. ஒரு காலத்துல்ல எப்பவும் தண்ணி நெறஞ்சு இருக்கும். எப்பவும் இந்த கொளத்துலதான் நா.. வந்து குளிச்சிட்டு போவேன். இப்ப பாரு ஒரு பொட்டு தண்ணிய காணோம்.... ம்..ம்.. சாகுறதுக்குள்ள இந்த கொளத்துதண்ணியில முங்கி எந்திருச்சிரனும்டா...அதாயா ஏங் கடசி ஆச...ம்...எப்ப... மழ பெஞ்சு... இது நெரம்ப போகுதோ...?”

“ஏந் தாத்தா..! இங்கேயும் மழயே பெய்யாதா...?”

“ஆமாம்பா... மழ பொயிச்சு போயிரெண்டு வருசமாச்சு...மெட்ராசுக்காரனுங்க மாதிரி நாங்களும் தண்ணிய தேடி அலைய ஆரமிச்சிடோம்... எல்லாம் கலிகாலம்...கலிமுத்தி போச்சு...”

“அப்டின்னா...?”

“அப்டின்னா...கெட்டதெல்லா நடக்கும்னு அர்த்தம். பொய், சூது, பொறாம, களவு, சண்டசச்சரவு பெருகி போச்சுல...ஒழுக்கமெல்லாம் கெட்டுப்போச்சுல்லா... அதா..ன் கலிகாலம். அதல... மழ தண்ணி இல்லாமா போச்சு...”

“அதில்ல...தாத்தா...! மரதெல்லாம் வெட்டுனா மழ இல்லாமா போகும்னு எங்க மிஸ் சொன்னாங்க....”

“ அட... கேனபைய மவனே...மரத்துக்கும் மழைக்கும் என்னய்யா சம்பந்தம்...”

“ இல்ல...தாத்தா...! எங்க மிஸ் தான் சொன்னாங்க...” என்று சொல்லி மழை எப்படி உருவாகிறது என்பதை விளக்க ஆரம்பித்தான்.

“சரி...விடு...” என்று உதட்டளவில் அவர் சொன்னாலும், பேரனுடையா தெளிவான பேச்சும் அவரை சில நிமிடங்கள்களில் திக்குமுக்காடச் செய்தது.

இராமசாமி பேரனுடன் வீட்டுக்கு திரும்பியதும், தனது மகன் முருகேசனின் சென்னை வாழக்கையைப் பற்றி விவாதிக்கலானார். முருகேசனும் தனது அலுவலக, குடும்ப நிலைகளை பற்றிய போதிலும், தண்ணீர் பிரச்சனைதான் மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறினான். இதற்காகவே காத்திருப்பது போல இருந்த இராமசாமி...

“ஏம்பா...முருகேசா!..., ஏ!...முன்ன மாதிரி மழதண்ணி பெய்யிரதில்ல...”

“எல்லாத்துக்கும் காரணம்.... காடுகளவெல்லாம் அழிச்சதுதான்....தன்னோட சுயநலத்துக்காக மரத்தையெல்லாம் வெட்டி தனக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கு இப்படி ஆயிரம் பிரச்சனைகளை....” என்று விளக்க ஆரம்பிக்கத் துவங்கியதும், இராமசாமியின் முகம் இறுகத் தொடங்கியது. ஏதோ ஒரு குற்றவுணர்வு அவருக்குள்ள உலவ ஆரம்பித்தது. ‘தன்னைப்போல தன் பேரக்குழந்தைகள் அந்த பொற்றாமரை குளத்தில் நீந்தி விளையாடாமல் போனதற்கு தானும் ஒரு காரணமோ?’ என்ற உணர்வு அவரை மிகவும் வாட்டத் துவங்கியது. அன்று இரவு முழவதும் அவரால் சரியாக தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் சிந்திக்கலானார்.

மறுநாள் காலை விடிந்ததும், தன் பேரனை அழைத்துக்கொண்டு கையில் கடப்பாரையோடு ஊர் எல்லைநோக்கிச் சென்றார். ஐந்தாறு குழிகளை வெட்டினார். அய்யாவு தோட்டத்திருந்து ஐந்தாறு மரக்கன்னுகளை கொண்டுவந்து நட்டார். அவருக்குள் ஒரு வேகம் இருந்தது. அப்பொழுது அவ்வழியே சென்ற சிலர் இராமசாமியின் நடவெடிக்கையை பார்த்தும், சிரித்தும், கேலியும் செய்தனர். ஆனால் இராமசாமி அவர்ககளை பொருட்படுத்தாது, மரக்கன்றுகளை பேரனை பார்த்துக்கொள்ள செய்துவிட்டு இரண்டு குடங்களில் தண்ணீர் எடுத்துவர ஊருக்குள்ளே சென்றார். ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், மிகவும் கஷ்டப்பட்டு அடித்து குடங்களை நிரப்பி தூக்கமுடியாதது தூக்கிக்கொண்டு வரும்போது, கால் இடறி நிலைத்தடுமாறிகீழே விழுந்தார். நெற்றியில் அடிபட்டாலும் கஷ்டப்பட்டு கொண்டுவரபட்ட தண்ணீரை செடிகளுக்கு ஊற்றமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் அவருக்கு பெரிதாக இருந்தது. அதிர்ச்சியும், படபடப்பும் சேர்ந்துகொள்ள அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

இராமசாமி கிழவர் பேசியே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. படுத்தபடுக்கையாக இருந்த அவர் பிழைப்பது கடினமென நினைத்து சொந்தங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் உயிர் பிரியாமல் ஊஞ்சாலாடிக் கொண்டுதான் இருந்தது. இயலாமை, ஏக்கம்,குற்றவுணர்வு என எல்லாம் சேர்ந்த உணர்வு அவர் கண்களில் தெரிந்து கொண்டுதான் இருந்தாலும் அவருடைய உணர்வுகளை புரிந்துகொள்ள அங்கே யாருமில்லை.

திடீரென மழைத் துறால் ஆரம்பமானது. தூறாலாக பெய்ய ஆரமித்த மழை கொட்டும்மழையாக தொடர்ந்தது. இராமசாமியின் கண்களில் ஏதோவொரு பிரகாசம் தெரிந்தது. ‘தனக்கு பின்னால் வரும் தலைமுறைகளும் தன்னைப்போல பொற்றாமரை குளத்தில் நீச்சலடித்து விளையாடுவார்கள்’ என்ற கனவாக கூட இருக்கலாம்.

அவருடைய உதடுகள் நடனமாட முயற்சித்தாலும் வார்தைகள் வெளிவரவில்லை. அவரை சுற்றி அவருடைய மகன்களும் மற்ற சொந்தங்களும் அவருடைய வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட முயற்சிக்கு பின்,

“சு...தே...சு.....” என்றார் இராமசாமி.

தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தனது மகனை இராமசாமியின் கண் முன்னே நிறுத்தினான் முருகேசன்.

“ பொ...த்...தாம...ர... தண்ணீ....” என்று வார்த்தையை கூட முடிக்க முடியாது திணறினார். அங்கே கூடியிருந்த சிலர், இராமசாமி கிழவர் இளவயதிலிருந்தே பொற்றாமரை குளத்தோடு நெருங்கிய பிணைப்பு இருப்பதால், அக்குளத் தண்ணீரைதான் கடைசியாக கேட்டதாக நினைத்துக் கொண்டார்கள். பொற்றாமரை குளத்து தண்ணீரை அவருக்கு கொடுத்தால்தான் அவருடைய உயிர் சாந்தியடையுமென அங்கே பேசிக்கொண்டார்கள்.

மழை நின்ற உடனே கையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு குளத்தை நோக்கி ஓடிய முருகேசன் குளத்தைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றான். ஏனெனில், இருபது நிமிடம் தொடர்ச்சியாக பெய்த மழையில் அக்குளத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தேங்கி நிற்கவில்லை. அத்துனை தண்ணீரும் மண்ணால் ஊறிஞ்சப்பட்டிருந்தது. என்ன செய்வதென்றே விழிபிதுங்கி நின்றிருந்த முருகேசன், குளத்துக்கெதிரே இருந்த குடிசை வீட்டினர் மழைத்தண்ணீரை பிடித்துவைத்திருப்பதை பார்த்ததும், கொஞ்சம் மழைநீரை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

இராமசாமியின் உயிர் கடைசி நிமிட பயணத்தில் இழுத்துக் கொண்டுயிருந்தது. தான் பிடித்து வந்த மழைநீரை சங்கில் எடுத்து கிழவரின் உதடுகளுக்கிடையே வைத்து கொடுக்கத் துவங்கியதும், மழைநீர் உதடுகளை கடக்கும் முன்னே அந்த மாவட்டத்திலேயே மிகப்பெரிய விறகுக்கடை வியாபாரியாகவும், மரங்களை வெட்டும் ஒப்பந்தங்களை அதிக முறை எடுத்தவராகவும் திகழ்ந்த இராமசாமி என்ற உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றது.

அவருடைய கடைசி ஆசை நிறைவேறிவிட்டதால் அவருடைய ஆத்மா நிம்மதியாக சாந்தியடையும் என்று அங்கே சிலர் பேசிக் கொண்டார்கள். ஆனால்....

வித்திட்டவனின்
விந்தை ஆத்மா
விரும்பிடாது சாந்தியை...
விதைத்த விதை
விருட்சமாக
விசுபரூபம் எடுக்கும் வரை...!


*************************
சிகுவாரா
மே 2004 ல் எழுதப்பட்டது.


Close (X)

5 (5)
  

மேலே