இலக்கிய நயங்கள் TVU--படிப்போம் -பகிர்வோம்
குறிஞ்சித் திணைப் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயங்களாகிய கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.
2.5.1 கற்பனை
குறிஞ்சிப்பாட்டில் தலைவியும், தோழியும் அருவி நீராடியதைச் சொல்லும் போது கற்பனை நயத்தைச் சுவைக்க முடிகிறது.
கடல் குறைய நீரை மொண்டு கொண்டு வானில் கூடின மேகங்கள்; காற்று வீசியது; மேகங்கள் கலங்கின; முரசம் போன்று இடியை முழங்கின; பறவைகள் தம் கூடுகளில் போய் அடங்கின; முருகப் பெருமானின் வேல் போல் மின்னல் தோன்றியது; இத்தொகுதிகளுடன் தலைவனின் மலைமேல் மழை பொழிந்தது. நெடிய மலை உச்சியிலிருந்து வெண்மையான அருவி கொட்டியது. தெளிந்த நீரையுடைய அருவி தூய வெள்ளை ஆடை போல் இருந்தது. பளிங்கைக் கரைத்து வைத்தது போன்று சுனை பரவி இதமளித்தது. (குறிஞ்சிப்பாட்டு: 46-57)
குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று நினைக்கிறான் தலைவன். நாணம் உடைய அவளை நாணத்திலிருந்து நீக்க அவள் உடல்தொட்டுக் கூந்தலைத் தடவுகிறான். இதனை மெய் தொட்டுப் பயிறல் என்பர். கற்பனை சிறக்க வண்டை அழைத்துப் பேசுகிறான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ யறியும் பூவே
(குறுந்தொகை - 2, இறையனார்)
(கொங்கு = பூந்துகள், தேன்; அஞ்சிறை = அழகிய சிறகுகள்; தும்பி = வண்டு; காமம் = விருப்பம்; செப்பாது = சொல்லாமல்; கண்டது = ஆராய்ந்து கண்ட உண்மை; மொழிமோ = சொல்க; பயிலியது கெழீஇய = பல பிறவியிலும் என்னோடு இணைந்த; செறிஎயிற்று = நெருங்கிய பல்வரிசையினை உடைய; அரிவை = பெண்; கூந்தலின் = கூந்தல் போல; நறியவும் = நறுமணம் உள்ளதும்)
“அழகிய சிறகுகளை உடைய வண்டே! நீ மலர்களில் உள்ள பூந்துகளை ஆராய்ந்து உண்கின்றாய். என் வினாவிற்கு விடை தருவாயாக. எனக்காக நான் விரும்பியதை நீ சொல்ல வேண்டாம். பல பிறவியிலும் என்னோடு தொடர்ந்து வரும் அன்பினை உடையவள் என் காதலி. அவள் மயில் போன்ற சாயலினை உடையவள். நெருங்கிய பல்வரிசை உடையவள். அவளது கூந்தலைப் போல நறுமணம் உடைய பூவை நீ அறிந்ததுண்டோ ?”
வண்டை அழைத்து, அதன் வாழ்க்கை முறை காட்டித் தன் கருத்தை நிலை நிறுத்தும் பாங்கு சிறப்பிற்கு உரியது. இங்கு ஒரு நாடகமே நடக்கிறது. வண்டோடு பேசும் பேச்சு தலைவியின் அழகைப் பாராட்டும் பேச்சு; தலைவி அதைக் கேட்டுப் புன்முறுவல் பூப்பது தெரிகிறது; கூந்தலில் மொய்க்கும் வண்டை விலக்குவது போன்ற ஒரு பாவனையில் தலைவன் தலைவியின் கூந்தலைத் தீண்டுவது புலப்படுகிறது.
2.5.2 சொல்லாட்சி
காதலின் அகல, உயர, ஆழ அளவுகளைக் கூறிப் பாடப்பட்ட குறுந்தொகைப் பாடல் சொல்லாட்சிக்குச் சிறந்த சான்று ஆகும்.
தலைவனோடு தான் கொண்ட நட்பின் தன்மையைத் தலைவி தோழிக்கு எடுத்துரைக்கிறாள்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை - 3, தேவகுலத்தார்)
கரிய கொம்புகளில் பூத்துள்ளன குறிஞ்சி மலர்கள். அவற்றில் இருந்து வண்டுகள் தேனைச் சேர்த்துத் தேன்கூடுகளைக் கட்டுகின்றன. இத்தகு இனிமை நிறைந்த மலை நாட்டினன் என் தலைவன். அவனிடம் நான் கொண்ட நட்பானது நிலத்தைவிட அகலமானது; வானத்தைவிட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது. குறிஞ்சி மலரில் உள்ள தேனை மலை உச்சியில் தேன்கூட்டில் சேர்க்கின்றது தேனீ என்னும் வண்டு. அதுபோல் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த எங்கள் உள்ளங்கள் இனிமையாய் ஒன்றுபட்டன. பால்வரை தெய்வம் என்ற விதி எங்கள் இருவரையும் இணைத்துள்ளது,’ என்பன போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியது இப்பாடல். இது தோழியிடம் தலைவி கூறுவது. ‘கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன்’ என்பது சொல்லால் வரைந்த ஓவியம் ஆகிறது.
2.5.3 உவமை
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
(யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.
“என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன.”
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.
குறிஞ்சித்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் நிறைந்து காணப்படுகின்றன.
சான்றாக :
இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
(குறிஞ்சிப்பாட்டு: 27-28)
‘பகை கொண்ட இரு பேரரசர்களை ஒன்று சேர்த்துக் கூட்டும் அறிவுடையவரைப் போல’ என்பது இதன் பொருள். தோழி, தலைவிக்கும் செவிலிக்கும் இடையே நின்று தலைவியின் காதலைத் தெரிவித்து, மணம் கூட்டும் பெரும் முயற்சியில் ஈடுபடுவதற்குக் கவிஞர் இந்தப் பொருத்த மான உவமையைக் கையாள்கிறார்.
2.5.4 உள்ளுறை
குறிஞ்சிப் பாடல்களில் உள்ளுறை நிறைந்து காணப்படுகின்றது.
‘மலையில் ஓங்கி வளர்ந்துள்ளது மூங்கில். அந்த மூங்கில் ஈன்ற அரிசியைத் தின்ன விருப்பத்துடன் வருகின்றது ஆண்யானை. மேல் நோக்கித் துதிக்கையை உயர்த்தி முயற்சி செய்கின்றது அது. தன் கைக்கு அரிசி எட்டாததால் தன் கொம்பில் துதிக்கையை வளைத்துப் போட்டு வருத்தம் நீங்குகின்றது. அக்கையைப் போன்ற வளைந்த தினைக் கதிர்கள்..’ என்றொரு செய்தியைத் தோழி குறிஞ்சிப்பாட்டில் செவிலியிடம் சொல்கிறாள். (குறிஞ்சிப்பாட்டு : 35-37)
மலையில் ஓங்கி வளர்ந்த மூங்கில் தலைவியின் உயர்ந்த குடியாகிறது; மூங்கில் ஈன்ற நெல் தலைவி; பசியுடைய யானை காதல் வேட்கையுள்ள தலைவன்; யானை மேல்நோக்கி முயற்சி செய்தல் தலைவன் இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க முயற்சி செய்தல்; கைக்கு எட்டா உயரத்தில் மூங்கில் அரிசி இருப்பது தலைவி இற்செறிப்பில்இருப்பதைக் குறிக்கிறது. யானையின் தந்தங்கள் தலைவனின் நற்குணங்கள் நிறைந்த உறுதிப் பாடாகும். இவ்வாறு யானையின் வருணனை தலைவன் - தலைவி காதல் இயக்கத்துக்கு உள்ளுறையாகிறது.
முன்பு நாம் கண்ட குறுந்தொகைப் பாடலில் (பாடப்பகுதி 2.3.3) இரவில் யாரும் அறியாது பெய்த மழை, பகலில் அருவியாக வழிந்து அனைவர்க்கும் வெளிப்பட்டுவிடும் என்னும் வருணனை, தலைவன் - தலைவியின் களவுக் காதல் சந்திப்பு, தலைவியின் தோற்ற மாறுதலால் பிறர்க்கு வெளிப்பட்டு விடும் என்பதை உணர்த்தும் உள்ளுறை உவமையாகி விடுகிறது.
2.5.5 இறைச்சி
பாடுகம்வா வாழி தோழி ! வயக்களிற்றுக்
கோடுஉலக்கை யாகநல் சேம்பின் இலைசுளகா
ஆடுகழை நெல்லை அறைஉரலுள் பெய்துஇருவாம்
பாடுகம்வா வாழி
(கலித்தொகை- 41 : 1-4)
(பாடுகம் = பாடுவோம்; வயக்களிற்றுக்கோடு = வலிய யானைக்கொம்பு; சுளகு = முறம்; கழை = மூங்கில்; அறை = பாறை; இருவாம்= இருவரும்)
தலைவன் வேலியை அடுத்து நிற்கிறான். தோழியும் தலைவியும் உலக்கை கொண்டு நெல் குற்றும் பாட்டைப் பாடுகின்றனர். இப்பாட்டை வள்ளைப் பாட்டு எனச் சொல்வர். தலைவன் தலைவியை மணந்து கொள்ள விரும்பினான். உரியவரை அவளுடைய பெற்றோரிடம் அனுப்பினான். அவர்களும் மணத்துக்கு இசைவு (சம்மதம்) தெரிவித்தனர். அதைத் தோழி தலைவிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
“தோழி ! வாழ்க ! நாம் பாடுவோம் வா! எவ்வாறு பாடுவோம் என்று சொல்கிறேன் தோழி ! நாம் இருவரும் அசையும் மூங்கில் உதிர்த்த நெல்லைப் பாறையாகிய உரலில் இடுவோம்; வலிமை வாய்ந்த யானைக் கொம்பாகிய உலக்கை கொண்டு குற்றுவோம். நல்ல சேம்பினது இலையை முறமாகக் கொண்டு புடைத்துப் பாடுவோம்”. இது பாடல் அடிகள் தரும் வெளிப்படைப் பொருள்.
உயர்ந்த மூங்கிலின் நெல் தானே உதிர்ந்தது; அதனை நாம் எடுத்து உரலில் இடுவோம் என்னும் வருணனை, உயர்ந்த தலைவனை நமக்குத் தெய்வம் தானே கொண்டு வந்து கொடுத்தது. அவனை நம் வயமாக்கிக் கொண்டோம் என்னும் வேறொரு குறிப்புப் பொருள் தருகிறது.
யானைக் கொம்பு கொண்டு நெல்லைக் குற்றிப் பயன்படச் செய்வது, வரைவு கடாதல் செயலால் தலைவன் பெண்கேட்டு இல்லறப் பயனை அடையச் செய்கிறோம் எனப் பொருள் தருகிறது. சேம்பிலை அரிசி புடைக்க முழுமையாகப் பயன்படாது. அதுபோல, களவுக் காதலால், விரைவாக மணந்துகொள்ள முடியாது எனும் பொருள் கிடைக்கிறது.
இவ்வாறு பொருள்கொள்ள அமைகிறது இறைச்சி.