திடீர் அன்னை பாசம்
அன்று அவன் எப்பவும் போல வந்து அம்மாவிடம் நலம் விசாரித்தான். அம்மாவும் எப்பவும் போல் உண்மையான அன்புடன் பொய் சொன்னாள் "நல்ல இருக்கேன் டா!, கார்முகில் என்ன பன்றான்" என்று தன் பேரனை விசாரித்தாள். வார்த்தை வராத சிறுபிள்ளையை போல் ஹ்ம்ம் கொட்டினான் முகிலன். கிட்ட தட்ட அவன் வீட்டை விட்டு தனி குடித்தனம் சென்று 6 வருடம் ஓடி விட்டது. அந்த ஆறு வருடங்களில் முகிலன் அன்னையை காண வந்த எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அதெல்லாம் மனதில் கொள்ளாத மீனாட்சி மகனுக்கு சுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். நாவில் சுவை படும் முன்பே நாசியில் அதன் வாசனை முகர்ந்து அமிர்தம் உண்ட மகிழ்ச்சி அடைந்தான். அன்னைக்கு தெரியாதா மகனுக்கு என்ன பிடிக்கும் என்று. திருமணம் ஆன பின்பு தேன்மொழி வார்த்தை மட்டுமே அவன் காதில் விழுகிறது என்று அறிந்த அன்னை மகனை அவனது சந்தோஷத்திற்காக அனைத்தையும் விட்டு கொடுத்தாள் இந்த தாய். அப்படி இருந்தும் தேன் மொழி சிறுது காலம் சென்றதும் அவனை தனி குடித்தனம் அழைத்து சென்று விட்டாள். அன்னை மீது அன்பு, மனைவி மீது பாசம் இரண்டுக்கும் நடுவில் சிக்கி தவித்தான் முகிலன். குழந்தை பிறந்த பொழுது அருகே இருந்து அனைத்து வேலைகளையும் செய்தவள் மீனாட்சி. கார்முகில் தன்னை பாட்டி என்று அழைக்கும் காலம் வரும் வேலை பார்த்து பிரிந்து சென்று விட்டார்கள். இதை எண்ணி எண்ணியே மீனாட்சி மனம் வெதும்பினாள். அவன் காபி குடிக்கும் மணித்துளிகளில் இந்த கடந்த காலம் எல்லாம் ஓடியது மீனாட்சி மனதில். "அம்மா தேன்மொழிக்கு உடம்பு சரி இல்லை ஒரு வாரமா அதோட கார்முகிலை பாக்க வர்ற செல்லம்மாவும் வரல. நீ வந்து ஒரு மாசம் தங்கிட்டு போயேன் என்றான். மறுப்பெதுவும் இன்றி மீனாட்சி புறப்பட தயாரானாள்.