போதும் மனிதா கொஞ்சம் இறக்கி வை
போதும் மனிதா...
கொஞ்சம் இறக்கி வை...
மனிதனாக வாழ
துளியளவும்
மனமில்லையா!?
உன் மனதிற்குள்
எள்ளளவும்
மானுட மணமில்லையா!?
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை...
சும்மாடு இல்லாமலேயே
சுமக்கிறாயே
பாரத்தை...
சுயநலவாளால்
கிழிக்கிறாயே..
பாரதத்தை...
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை...
பலிகளின் எண்ணிக்கை
போதவில்லையா..?!
இல்லை
உன் கோப்பையற்ற
பானத்திற்குத்தான்
போதையில்லையா.?!
போதும் மனிதா...
கொஞ்சம் இறக்கி வை...
நீயும் நானும்
அண்டணு விந்தணு
உதயம்தானடா...
பின் நமக்குள்
இத்துணை தாழ்வு
உயரம் ஏனடா..?!
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கிவை...
வெள்ளையன்
சென்றும் அடிமையென
நினைக்கிறாய்...
அர்த்தமற்றக்
கொள்கையை
குருதியில் நனைக்கிறாய்..
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை..
தீண்டாமை ஒழிக்க
அண்ணல்கள்
துடித்தார்கள் அன்று...
அதை பின்பற்றி நீயோ
சமரசம் காண்பது
என்று..?!!
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை..
நம் நாட்டுப்பண்
என்று நல்லவனாய்
நாவை அசைக்கிறாய்..
உன் வீட்டுப்பெண்
காதலொன்று கொண்டால்
கழுத்தை அறுக்கிறாய்..
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை...
ஆண்டு பல கடந்தால்
உன் தலைமுறையே
உன்னை நினைவு
கூறுவதில்லை..
வெகுண்டு
நீ வேற்றுமை
ஒழித்தால் உன்
நினைவுகளோ
மண்ணில்
அழிவதில்லை...
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை..
சாதியில் சமூகம்..
மதத்தில் மானுடம்..
பிழைப்புக்கு அரசியல்..
பிழைநிறைந்த
தேசம்..
கொலைநிறைந்த
கோட்பாடு...
இதுதான் இன்றைய
நிலைப்பாடு...
நீ நாள்தோறும்
சுமக்கும் இழிபாடு..
போதும் மனிதா..
கொஞ்சம் இறக்கி வை..