ஆசைகள் பாதி பேராசைகள் மீதி

........ஆசைகள் பாதி பேராசைகள் மீதி......

உன் கண்களோடு கலந்திடும்
மறு நொடியே மனதினில் புகுந்து
மழலையாகிட ஆசைதான்..
மடியினில் நானும் மற்றவை
மறந்து உன் மறுபாதியாகிடவும்
பேராசைதான்..

நடையோடு இணைந்து
உன் தோள் மீது சாய்ந்து
கரம் கோர்த்து கடல் கடந்திடவும்
ஆசைதான்..
விரல்களைப் பிணைத்து
விண்வெளியினில் நாமும்
வீதி உலாச் சென்றிடவும்
பேராசைதான்...

என் மௌனத்தின் மொழிகளை
காதல் அகராதியில் சேர்த்து
உன் இதயத்தில் செலுத்திடவும்
ஆசைதான்...
மழையாக வந்து உன்னை
முழுதாக நனைத்து
என் காதல் முத்தங்கள் தந்திடவும்
பேராசைதான்..

என் வெட்கத்தை உடைத்து
தயக்கங்கள் விடுத்து
என் நெஞ்சத்து விருப்பங்களை
வார்த்தைகளாய் வடித்திடவும்
ஆசைதான்...
ஆயிரமாயிரம் ஆசைகள் அதையும்
முத்துக்களாய் கோர்த்து உன்
இருதயப் பக்கத்தினில் பொத்தி
வைத்திடவும் பேராசைதான்..

விருப்பம் பாதி மனதில் வைத்து
தயக்கம் மீதி இதயக்கருவில்
சுமந்து
நாணமென்னும் வில்லுடைத்து
காதல் பாமாலை நான் பாடி
உன் கழுத்தினில் பூமாலை
சூடிடவும் எனக்குள்
ஆசைகளை மிஞ்சிய
பேராசைகள்தான்...

-உதயசகி-
யாழ்ப்பாணம்

எழுதியவர் : அன்புடன் சகி (6-Jun-17, 6:08 am)
பார்வை : 655

மேலே