மீள் பார்வைகள்

எழுதுவது
அற்புதமென
தவிர்த்து
தூக்கு வாளிகள்
கைகள் மாற்றி
சுமந்து
சுண்டல் விற்றிருக்கலாம்

நூலகத்தில்
கழித்த பொழுதுகளில்
சைக்கிள் கடையில்
பஞ்சர் ஒட்டியிருக்கலாம்

ஐநூறு கடனோடு
முன்றில் கருத்தரங்கம்
போனதற்குப் பதில்
டிரைவிங் லைசென்ஸ்
எடுத்திருக்கலாம்

வெட்டிப் பொழுதுகளாய்
கடற்கரையில்
இலக்கியம், சினிமா
எனப் பிதற்றியதற்கு
டைப்பிங் ஷார்ட் ஹேண்ட்
முடித்திருக்கலாம்

பைண்டு வால்யூம்களை
கண் விழித்து
படித்த நேரத்தில்
சர்வீஸ் கமிஷன்
தேர்வுக்கு படித்திருக்கலாம்

பிலிம் சொஸைட்டிற்கு
தவறாமல்
சென்றதற்கு
நைநாவுடன்
லாரியில் சென்றிருக்கலாம்

கடந்துப் போன
காலங்கள்
நிகழ்வின்
தாக்கங்கள்
விரக்தியும்
உக்கிரமும்
கலந்த
மீள் பார்வைகள்

எழுதியவர் : மு. கிருஷ்ணகுமார் (9-Jun-17, 6:01 pm)
சேர்த்தது : kanchi krishnakumar
பார்வை : 63

மேலே