ஏங்குகிறாள் சென்று வா

அழுதவன்தான்
நீயும் நானும்
ஒருநாள்
அழுதவன்தான்...
அங்கன்வாடி
செல்லையிலே
அவள் விரலின் பிடி
தளரும்போது
நீயும் நானும்
ஒருநாள் அழுதவன்தான்...
அடுப்பிற்கு விறகு
பொறுக்க அவள்
அக்கம்பக்கத்தினருடன்
விட்டுச்சென்றபோது
நீயும் நானும்
அழுதவன்தான்...
திருவிழா கூட்டத்தில்
சில நிமிடங்கள்
தொலைந்து மீண்டும்
அவள்முகம் காணையில்
நீயும் நானும்
அழுதவன்தான்..
முதல்நாள் பள்ளிக்குச் செல்லும்போது
அவளுக்குப் பதிலாய் அங்கு
ஆசிரியையை காணும்போது
நீயும் நானும்
அழுதவன்தான்..
கல்லூரி விடுதியின்
தனிமையில்
நண்பர்களையும்
தாண்டி
அவள் அன்புக்கும்
பரிவுக்கும் ஏங்கி
நீயும் நானும்
அழுதவன்தான்...
அயல்நாடுகளில்
ஆயிரம்பேரை
தெரிந்தும்
அவள் முகம் காணாமல்
அனாதையாய்
நீயும் நானும்
அழுதவன்தான்...
என்றோ ஒருநாள்
அவள் அன்புக்காய்
நீயும் நானும்
அழுதவன்தான்..
உன் முகம்காண ஏங்கும்
அவளைப் பார்த்துவர
நேரமில்லையென
இயந்திர வாழ்க்கையை
காரணம் சொல்வது
நியாயமல்ல..
மணந்தவளை
மகிழ்விக்கும்
அதே வேளையில்
சுமந்தவளை
சுமையென நினைத்தால்
நீ மனிதனே அல்ல...
அவள் அழுதால்
உன் பிறப்பிற்கே
அர்த்தமில்லை..
அவள் மகிழ்ந்தால்
நீ சாதிக்க வேண்டியது என
இவ்வுலகில்
வேறொன்று இல்லை..
ஈன்றவள் இழிவல்ல...
"இறைவி"...