கை கோர்ப்போம்

கைகோர்ப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
வீட்டிற்கு விளக்கேற்றும் தெய்வ மென்று
வியந்தபெண்ணைப் பாலியிலின் கொடுமை செய்து
ஏட்டினிலே எழுதவொண்ணா அலங்கோ லத்தில்
எடுத்துவந்து சாலையோரம் எறிந்து சென்றார் !
பூட்டனையும் பாட்டனையும் சாதி சொல்லிப்
புதைத்திட்ட தாழ்ந்தகுல வீட்டி ருந்து
போட்டியிலே வென்றுகல்வி கற்க வந்தால்
பொழுதலரும் முன்னவரைக் கொன்று போட்டார் !
இருமனங்கள் கலந்ததாலே திரும ணந்தான்
இனிமையாக செய்துகொண்ட இளமை யோரைக்
கருமனத்துள் உயர்சாதி ஆண வத்தால்
கழுத்தறுத்துப் பிணமாக்கி வாழ்வ ழித்தார் !
அருமையாக வளர்த்தபெண்ணை மணமு டித்தே
அகம்குளிர வாழ்வாளென் றனுப்பி வைக்க
திருவின்னும் வேண்டுமென்று கொடுமை செய்து
திரிதன்னை அடுப்பினிலே போட்டெ ரித்தார் !
பெண்குழந்தை என்றவுடன் கள்ளிப் பாலால்
பெருமூச்சை நிற்கவைத்துக் குழியுள் போட்டார்
கண்முன்னே நம்பணத்தை ஆட்சி யாளர்
களவாடக் கேட்டோரின் உயிர்ப றித்தார் !
மண்மீது நடக்குமிந்த கொடுமை தன்னை
மனம்கொண்டு பார்ப்பதுவோ ; கைகள் கோர்ப்போம்
புண்செய்யும் கயவர்தம் தோலு ரித்தே
புதுக்குமுகம் நாம்படைப்போம் எழுந்து வாரீர் !