கட்டிக் கரும்பே காமன் கையிருப்பே

கட்டிக் கரும்பே காமன் கைத்துருப்பே...!

ஒட்டாது உருண்டோடும் பாதரசம்
சிட்டாக துள்ளியோடும் உன் பாதச்சரம்
பட்டான பவளயிதழ் உண்மதுரசம்
மொட்டாக அதில் மலரும் முத்துச்சரம்

கட்டான அலைகுழல் கார்மேகம்
ஒட்டாடிட கழலுறும் என் தேகம்
தட்டிப் பறித்துண்ணவோ மாங்கனிக் கன்னம்
தட்டாது வெறித்தாடுது என் எண்ணம்

நட்டநடு புருவயிடை செந்தூரம்
சுட்டெழுத்தாய் குறிவைக்கும் விழியோரம்
கட்டழகி நயனநடை கவி சொல்லும்
வெட்டியாடும் சின்னயிடை உயிர் கொல்லும்

கொட்டும் குளவியாய் கடுத்தாலும் உன்குணம்
கொட்டும் மழையாய் பொழிந்திடும் என்மனம்
கட்டிக் கரும்பே காமன் கைத்துருப்பே
முட்டும் மோகம் தணிக்கும் முளைக்குருத்தே

வட்டணையே வாலிபத்தின் விரகம் தீர்க்க வந்திடு
தொட்டணைத்தால் கள்ளூரும் கேணியாய் மாறிடு
கெட்டி மேளம்வைத்து ஊர்கூட்டி மணம்முடிப்போம்
கட்டில் மெத்தையிட்டு தொட்டிலாட வரம் படைப்போம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (14-Jun-17, 7:34 pm)
பார்வை : 47

மேலே