எழுதுகிறேன் ஒரு நேசமடல்

எழுதுகிறேன் ஒரு இதயமடல் தவறவிட்ட முகவரிக்காய்....!

பிரியா விடைபகர்ந்த என் பிரியசகனுக்கு,

ஒற்றுளவாய் நிலவின் ஓரவிழிப் பார்வை மங்கலாய்...
ஆற்றுதலாய் அருங்கி வருடிடும் தென்றல் தொங்கலாய்....
ஊற்றலாய் ஒற்றை மலருடன் நீ காதல் மொழிந்தது ஒரங்கநாடகமாய்...
கற்றை கற்றையாய் நீ வரைந்த காதல் கவிதை வற்றாது வளமையாய்...
வெற்று வெள்ளந்தி வெண்பஞ்சு நெஞ்சில் ஒற்றின அவை அழியா ஓவியமாய்....
பற்றற்ற ஞானியாய் மறுதலித்தேன் மொட்டலர்ந்த பாவையான் பாசாங்காய்....
கொற்றவையாய் கொதித்து கனன்று இன்றுபோய் நாளைவாயென பதிலுரைத்தேன் சூசகமாய்.....
தொற்றிக் கொண்ட உந்தவுரசலால்
பற்றிக் எரிந்தது காதல்கனல் விரசாய்....

நற்றமிழான என்பெயரோடு சீதக்கவி உன்பெயரை கோர்த்து ரசித்தாய்....
கற்றது தமிழ் கையிருப்பும் தமிழென பெருமிதமாய் பாவில் உரைத்தாய்....
சுற்றம் கலந்து என் உற்றத் துணையாகி
உறைந்திட துடித்தாய்....
கற்பனையில் மாலைசூடி பொற்புடை மலர்தூவி என்பாதை அமைத்தாய்...
பேரண்ட வாசலில் எனக்காய் சின்னஞ்சிறு சிங்காரக்குடில் சமைத்தாய்...
நட்சத்திர தோரணங்களை அங்கும் இங்கும் ஒளிவிளக்காய் மிளிரவிட்டாய்...
முற்றத்தில் முழுமதியை காவல் வைத்து முத்தமிழ் இதழால் முத்தமிட்டாய்....
இடையணைத்து விரலிடைப் பிணைத்து சொர்கவாசலாய் என்னுள் பிரவேசித்தாய்...

பழகு நடையால் பவித்திரக் காதலுக்கு பாலாடையாலே வேலியிட்டோம்....
இறுதிவிடை மொழிந்தே இணைந்தே சிதைபுகுவோம் என அறுதியாய் உறுதியெடுத்தோம்...
ஊர் பட்டக் கண்ணோ யார் வைத்த வேட்டோ...
நூற்றது விதிவலி வென்றது சமூகசதி
வற்றி உலர்ந்தது காதல் நதி......
தேற்ற மொழியின்றி மாற்று வழியின்றி
தூற்றும் ஊருக்கஞ்சி தோற்று விலகினேன்..
மாற்றங்கள் ஒன்றே நிலையான வாழ்வில்
வேற்றுப் படகேறி விடியலை தேடுகிறேன்...
காற்றுப் புயலாகி கடிதான தருணங்களில் உன் காற்றலை ஒலிபருகி ஜீவிக்கிறேன்....
சாற்றுவாய் பதிலெனெ எதிர்நோக்கி எழுதவில்லை
சான்றாண்மை இன்றுவரை என்காதலுக்கு உண்டென உணர்த்துகிறேன்.....

இவண்,
ஆற்றாமையில் உன் நேற்றைய
பிரியசகி.

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (14-Jun-17, 7:37 pm)
பார்வை : 102

மேலே