இமைகள் தொலைத்த விழியானேன் -குயிலி
இமைகள் தொலைத்த விழியானேன் -குயிலி
இந்தக் காதல்
ஏனோ ஈரமாகவே
உலர்கிறது
என்னில்
உள்ளங்கையில்
அடைத்து வைத்த
மின்மினி போல
என் ஆற்றாமை
சிதறுகிறது
இளைப்பாறலின்
நிமித்தங்களில்
என் மடியில்
நானே வீழ்கிறேன்
முத்தங்களால்
கந்திய கன்னங்களில்
கண்ணீர்
கவியெழுதுகிறது
நீ உச்சி முகரும்
சுகம் தேடியே
மூன்றாம் சாமம்
விடிகிறது
வெற்றிடத்தில்
உனை நிரப்பி
குளிர்காய்கிறேன்
வெறும் தரையில்
உனை பரப்பி
எனை சாய்க்கிறேன்
உனைக் காணாத
நொடிகளிலெல்லாம்
இமைகள் தொலைத்த
விழியானேன் ...!