இமயமளவு யோசிக்காதீர்
நினைவுகளின் பிம்பங்களை
உள்ளமது உணர்ந்தவுடன்
விழுகின்ற நீர்த்துளியாய்
எழுகின்ற எண்ணங்கள்
இதயத்தின் இடுக்குகளில்
பாய்ந்தோடும் குருதியுடன்
கலந்தோடும் அணுக்களோடு ...
நெஞ்சத்தை நனைத்திடும்
நினைவலையும் தொட்டிடும்
விழிகளின் கரைதனை
நிலைக்குத்தாய் நின்றிடும்
இமைகளை சாய்த்திடும் ...
மகிழ்ந்திட்டத் தருணங்கள்
மறவாமல் இருப்பதுவும்
மனதிற்கு மகிழ்வெனினும்
துயர்மிகு நிகழ்வுகள்
நினைவுக்கு வாராவிடின்
சுகமென்றோ நமக்கென்றும் ...
சுடுசொல் தாக்கினால்
சூடாகும் நெஞ்சமும்
வடுவாகும் இதயத்தில்
இடுகாடு செல்லும்வரை
நெருடிடும் வலியுடன் ...
பழிகூறும் பாழுலகம்
வழியனுப்பும் பொழுதில்
கட்டியழும் நாடகத்தை
ஐயமின்றி அரங்கேற்றும்
மொழிந்ததை மறக்கடிக்க ...
இயற்கையாய் நடப்பதை
இயல்பாய் வடித்தேன்
இலைமறை காயில்லை
இமயமளவு யோசிக்காதீர்
இதற்காக கசக்காதீர்
இம்மியளவும் மூளையை ....
பழனி குமார்