மாலையிட வருவாயே

பாராமல் போனாயேல் பளிங்குமுகம் வாடாதோ?
தீராத சோகத்தில் தேம்பிடுவேன் அறியாயோ?
வீராதி வீரனே விரும்புமெனை ஏற்பாயோ ?
ஊரார்கண் பட்டதுவோ உள்ளத்தில் வலிக்கிறதே!

மடியினிலே தாங்கிட்டாய் மயக்கத்திலே மிதந்திருந்தேன்
துடியிடையில் விரல்படவே துவண்டுவிட்டேன் கண்ணாளா!
வடிவழகில் கவர்ந்தேனோ வாய்மொழியில் வீழ்ந்தாயோ?
விடிவெள்ளி நீதானே வியப்பிலெனை ஆழ்த்தியவா!

சுற்றிவரு மிடமெல்லாம் சொர்க்கமென நான்நினைப்பேன்!
பொற்கரத்தைப் பிடித்தபடி புன்னகைத்து வலம்வருவேன்
வற்றாத பேரன்பை வழங்கிடவே அகம்மலர்வேன்!
நற்றமிழில் சொல்லெடுத்து நாயகனே கவிவனைவேன்!

கனவுலகில் சஞ்சரித்துக் காதலிலே திளைத்திடுவோம்
மனமிரண்டும் ஒன்றிவிட மையலுடன் கலந்திருப்போம்
புனலிலெமு சிற்றலையாய் புத்துணர்வில் மெய்நனைவோம்!
தினந்தோறும் அன்பள்ளித் திகட்டாமல் பருகிடுவோம்!

தேவதைநீ என்றுசொன்னாய் தேவசுகம் கிடைத்ததடா
ஆதவனாய் என்வானில் ஆசையுடன் உதித்தாயே
நாதனுனைச் சேர்வதற்கு நாள்பார்த்துத் தவிக்கின்றேன்
மாதவம்யான் செய்தேனே மாலையிட வருவாயே!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jun-17, 5:46 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 84

மேலே