ரௌத்திரம் பழகிடு
நடித்திடும் உலகிது
ரௌத்திரம் பழகிடு
காரணம் நூறு
கண்முன் பாரு
அவசர அறிவியல்
ஒருபுறம் நிற்க
அருவரு அரசியல்
மக்களை மறுபுறம் விற்க
தினசரி நடந்திடும்
தீமைகள் கண்டு
ரௌத்திரம் பழகிடு!!
நீயும் ரௌத்திரம் பழகிடு!!
சதியும் சாதியும்
மதியினை மிதித்து
உயிரினை எடுத்து
உயரமாய் நிற்கும்
உலகினில் நீயும்
ரௌத்திரம் பழகிடு !!
மனமே ரௌத்திரம் பழகிடு !!
பெண்மையின் மென்மை
பேராபத்து கண்டிடும்
நொடியில் நிச்சயம்
ரௌத்திரம் பழகிடு!!
கொஞ்சம் ரௌத்திரம் பழகிடு!!
உன் எதிரியின் துரோகி
எதிரே தோன்றிடும் கணத்தில்
பகைமையை மறந்து
ரௌத்திரம் பழகிடு !!
கொஞ்சம் ரௌத்திரம் பழகிடு!!
களவாடிடும் கள்வன்
உயிரெடுக்க உறவாடிடும்
கயவன்
பொய் உரைத்திடும் உறவுகள்
மெய் மறைத்திடும் நட்புகள்
மீதும் ரௌத்திரம் பழகிடு!!
கொஞ்சம் ரௌத்திரம் பழகிடு!!
உழைப்பின்றி வாழும்
வலியவன் மீதும்
பிழைப்பின்றி வாழும்
வறியவன் மீதும்
கொஞ்சம் ரௌத்திரம் பழகிடு!!
நீ ரௌத்திரம் பழகிடு!!
சொல்லிய எண்ணம் இத்தனை
இருந்தும்
மௌனங்கள் மொழியாய்க் கொண்ட
நம்மைப்போல் நடமாடிடும்
உயிர்கள் மீதும்
பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிடு
நீ கொஞ்சம் ரௌத்திரம் பழகிடு !!