தேயிலைத் தோட்டக்காரி

......தேயிலைத் தோட்டக்காரி....

தினமும் நான் காணுகின்ற காட்சிகளை ஓவியமாக வரைந்து அவற்றை சேகரித்து வைத்துக்கொள்வது என் வழக்கம்...

அன்றும் அதே போல் தான் நான் கண்ட ஒரு காட்சியை தத்ரூபமாக வரைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்...அந்த வெள்ளைத்தாள் எந்தன் கைவண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிறமாறிக் கொண்டிருந்தது...ஆனாலும் அந்த காட்சியில் வண்ணங்கள் ஓட்டிக் கொள்ளவில்லை...அவை தூரமாக இருந்து வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன...

என்னால் முடிந்தவரை பார்த்ததை அப்படியே அதில் கொண்டுவர முயன்று கொண்டிருந்தேன்...ஆனால் அதில் பாதியைக் கூட என்னால் கொண்டுவர முடியவில்லை....நான் கண்ட காட்சியில் இருந்த உணர்வுகளை நான் எவ்வளவு முயன்றும் ஓவியமாக என்னால் செதுக்கிக் கொள்ள முடியவில்லை...

பல மணிநேரப் போராட்டத்தின் பின் என் மனம் ஓரளவு அமைதி கொள்ளும் வகையில் அந்த ஓவியம் முழுமையடைந்திருந்தது...எல்லாம் அதில் சரியாக இருக்கிறதா என மீண்டும் ஒருதடவை நான் கண்ட காட்சியினை என் கண்முன்னே நிறுத்தி மீண்டும் அந்த காட்சிக்குள் செல்லத் தொடங்கினேன்..

"அவள் அந்த வரிசையிலேயே இறுதி ஆளாக நின்று கொண்டிருந்தாள்...அவளின் தோற்றமே அவள் ஒரு தேயிலைத்தோட்டக்காரி என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது...அவளின் பின்னால் கொழுந்து பறிக்கும் கூடையொன்றும் தொங்கிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது....அவளது முகம் காட்டிய உணர்வுகளை என் மனம் எவ்வளவோ படம்பிடிக்க முயன்றும்,அதை புரிந்து கொள்வதென்பது சற்றுக் கடினமானதாகவே இருந்தது..."

"இதையே யோசித்து என் மனம் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் அவள் முதல் இடத்தை நோக்கி நகர்ந்திருந்தாள்....அவள்
கைகளுக்குள் இரண்டு நூறு ரூபா தாள்கள் அள்ளி வீசப்பட்டன...அதை அவள் மிகவும் பத்திரமாக பொத்தி வைத்துக் கொண்டே எனைக் கடந்து சென்றாள்...அப்போது தான் என்னால் அவள் கைகளை மிக அருகில் பார்க்க முடிந்தது...அதில் கைரேகைகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் என் கண்களிற்கு புலப்படவில்லை...உதிரம் காய்ந்து கருமை படர்ந்திருந்தது அந்தக் கரங்களில்...அதைப்பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் அன்றைய நாளுக்குத் தேவையான பொருட்களை வாங்க மீண்டுமொரு வரிசையில் இணைந்து கொண்டாள் அவள்..."

அனைத்தையும் மீண்டுமொரு முறை மீட்டிப் பார்த்த நான் அருகில் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த தேநீரை எடுத்து சுவைக்க ஆரம்பித்தேன்...ஆனால் அன்று அந்த தேநீர் எனக்கு அவ்வளவு இனிப்பானதாய் இருக்கவில்லை...

எழுதியவர் : அன்புடன் சகி (23-Jun-17, 8:19 pm)
பார்வை : 468

மேலே