ராந்தல் பிறை ---முஹம்மத் ஸர்பான்
25/06/2017 அன்று இலங்கையிலுள்ள பிராதன பத்திரிகைகளில் ஒன்றான தினகரனின் வெளிவந்த என்னுடைய இரண்டாவது கதை
வானுக்கும் மண்ணுக்கும் நடுவே வாண வேடிக்கைகள் பூக்கள் போல் பூத்துக் குலுங்கி இரவினை அலங்கரித்துக் கொண்டிருந்தன. வடக்குப்புற வாடைக் காற்றிலும் கிழக்கு கச்சான் காற்றிலும் நாசிக்குள் நுழைந்து நாவினில் எச்சூற வைத்துக் கொண்டேயிருந்தது பலகார வாசனை.
ஒற்றையடிப் பாதையிலும் சனநெரிசல் குவிந்து ஊரே குதுகலமாக நாளைய பொழுதை வரவேற்க ஒத்திகை பார்த்துக் கொண்டது. பொய்கையிலுள்ள மீன்களைப் போலே சிறார்களின் ஆனந்த எதிர் நீச்சலை யாராலும் தடை போட முடியாத காலத்தின் நிர்ப்பந்தம். இளையோர்களின் மனதில் நாளைய களியாட்ட விருந்தின் கனவுகளும், முதியோர்களின் மனத்தில் நோன்பு எம்மை விட்டு விடைபெற்ற சோகமும் அடை மழை வெள்ளம் போல் தேங்கி நின்றது.
பிறையின் வெளிச்சத்தில் ஊரே ஆனந்தமாய் துள்ளிக் குதித்தாலும் ராந்தல் விளக்கின் வெளிச்சத்தில் சபீனா மனத்துக்குள் அழுது கொண்டிருந்தாள்.
தாமரைப் பூவின் கவர்ச்சியைப் போல் பேரழகி மகுடம் சூட்ட உலகில் தகுதியானவள் சபீனா. காலத்தின் மாய விளையாட்டில் கனவுகள் நிறைந்த இளமையிலேயே விதவையென வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.
அவளது கணவன் பாரீஸ், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது அலைகளினால் அடித்துச் சாப்பிடப்பட்டான். காதல் திருமணம் என்பதால் இரு வீட்டாரும் இரு மனத்தினை தள்ளி வைத்தனர். இப்போது புதிதாக அவளது இரண்டு வயதுக் குழந்தையையும் மூன்றாவது மனதாக தள்ளி வைத்துப் பார்க்கிறது. உறவினர்களும் கைகொடுக்கவில்லை, ஊராரும் தோள் கொடுக்கவில்லை. இவளது வாழ்க்கை போராட்டத்தில் இறைவனின் அருளால் வறுமை மட்டும் தான் அன்பான துணையானது.
பாரீஸ் உயிரோடு இருக்கும் வரை ஒருவேளை பசியைக் கூட அவள் கனவிலும் உணர்ந்ததில்லை. ஆனால், இன்று பசிதான் இவளுக்கு விலாசம். விதி எப்படியெல்லாம் வாழ்க்கையில் விளையாடுகின்றது. புனிதமான ரமழான் மாதம் முழுவதும் சமூக நலச் சேவை என்று பல அமைப்புக்கள் ஊரையே அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆனால், உண்மையாக கஷ்டப்படுபவர்களை அவர்கள் கூடத் தள்ளி வைத்துப் பார்க்கிறார்கள். இத்தகைய ஏழைகள் அவர்களின் காலடியில் சென்றால் கூட அவர்களை கண்மூடிப் பார்க்கிறார்கள்.
எஜமானின் வீட்டில் உடைந்த கூரைக்காய் அடிமையின் வீட்டை அடகு வைப்பது போல இன்று பொதுச் சேவை மாறிப் போய்விட்டது. எல்லாம் விளம்பரம் என்ற போர்வைக்குள் மார்க்கத்தை குறிகாட்டியாக்கி புகழெனும் பாவத்தை சம்பாதிக்கும் சதித் திட்டங்கள்தான். சென்ற வருடம் அவளுடைய கணவன் அவளருகில் இருக்கும்போது பெருநாளே இவர்களுக்காகத்தான் வருகிறது என நினைத்து மனதுக்குள் சிரித்து கண்களில் கண்ணீர் சிந்திக் கொண்டாள். ஆனால் இன்று இறைவனின் நாட்டம் மனதுக்குள் கண்ணீர் சிந்தி கண்களில் சிரிக்க வைத்து அழகு பார்க்கும் பரிதாபம். அவளுக்கும் அவள் கைக்குழந்தைக்கும் நாளைய பொழுது ஒரு முழு புதுத்துணியையாவது வாங்கிக் கொடுக்காதா என்ற மனப்போராட்டத்தில் கண்ணீரை வினாவாகவும் விடையாகவும் சிந்திக் கொண்டிருந்தாள் சபீனா.
மெய்மறந்த நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த இவளது மனப்போராட்டத்தை உடைக்கும் வண்ணம் அவளது கைக்குழந்தை யாஷிரா அழுதாள். அவளது குழந்தையின் முகம் வறுமையில் இறைவன் பரிசாக இவளுக்கு கொடுத்த செல்வம்... குழந்தையின் அழுகையைப் பசிதான் என்று உணர்ந்தவள் தன் மார்பில் அணைத்து உதிரத்தைப் பாலாக ஊட்டினாள். தாயின் சோகத்தை உதிரத்தின் உரையாடலில் புரிந்து கொண்ட குழந்தையும் ஒரு துளி தாய்ப்பாலை உறிஞ்சிக் கொண்ட நிலவாக அவள் நெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்தது. உம்மா... உம்மா... என்று அவள் அழைக்கும் போதெல்லாம் இறைவன் ஒரு பக்கத்தை அடைத்தாலும் மறுபக்கத்தால் அணைக்கின்றான் என்று சபீனா மனதுக்குள் சாசனமாக எழுதிக் கொண்டாள்.
தாய் வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் போகமுடியாத நிலையில் இவளது உள்ளம் அனாதையாக அலைகின்றது. வறுமைவேறு மனத்தில் முள்ளாக தைக்கிறது. சேமிப்பும் முற்றாக முடிவடையும் நிலையும் வேகமாக நெருங்கிக் கொண்டு வருகின்றது.
முப்பது நோன்பையும் முழுமையாக இறைவனுக்காய் மட்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு பிடித்தவள் நாளைய பெருநாளை கொண்டாட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டதாய் பரிதாபம் மனதில் நெருப்பாக எரிகிறது... வீட்டின் நான்கு பக்கச் சுவருக்குள்ளும் இவளது சோகமே முடமாகி அடைபட்டுக் கொண்டிருக்கும் போது புன்னகை எங்ஙனம் இவளது வாழ்வினில் நுழையும், அவளும் கொஞ்ச நேர மனஅமைதியை யாசித்தவளாய் தன் சுவாசமா குழந்தையை மார்போடு அணைத்துச் சாலை நோக்கி ஒவ்வொரு எட்டையும் நீண்ட நாட்களின் பின் ரசித்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள். அப்போது அவள் தேகத்தை தொட்டுப் போன காற்றில் அவளுடைய கணவனின் மூச்சுக் காற்று நிழலாக மாறி வருவதைப் போன்ற ஓர் உள்ளுணர்வு அவளுடைய உள்ளத்தில் நிலையாக பதிந்தது. அப்போது பாதையும் பயணமும் நடைகளில் மெதுமெதுவாக நகரத் தொடங்கியது.
பனி சிந்துகின்ற பூபாளம்; சுதி தப்பாமல் காதில் இனிமையாக பாடுகின்ற பறவை இனங்கள்; ஒரு நொடியில பூத்து மறுநொடியில் சுருங்குகின்ற அதிசய பூக்கள். இந்த இனிமைகளின் புதுவுலகில் கைதியாகி மெய்மறந்து நடந்து கொண்டிருந்தாள். சிறு நேர நிமிடங்களின் கடத்தலில் அவளுடைய நடைபயணம் அவ்வூரிலுள்ள பள்ளிவாசலை அடைந்தது. அங்கும் அவள் கண்ட நிகழ்வுகள் அவளுடைய மனத்தை துண்டு துண்டாய் உடைத்துப் போட்டன. வரிசை வரிசையாய் யாசிக்கும் கூட்டம் இந்தப் புனிதமான நாளிலும் கையேந்திக் கொண்டிந்தார்கள். என்ன செய்வது இறைவன் படைப்புக்களில் இத்தனை வர்க்கம்.
இவளது நிலையும் பரிதாபமான போதும் கையேந்த மனமில்லை. ஏனென்றால் மண்ணறைக்குள் உறங்கும் தன் காதல் துணைவனை மனம் நோகடிக்க இவளுக்கு மனமில்லை. செல்வந்தர்கள் வீட்டில் பத்தாயிரம் ரூபாவுக்குப் பட்டாசுகள் வெடிக்கும் இந்த நாளில், ஏழைகளின் வீட்டில் வெறும் ஆயிரம் ரூபாக் கூட அடிப்படைத் தேவைகளுக்குக் கிடையாது. சமத்துவமில்லாத விதியின் பாடங்கள் இவைகள் தான். அழுதாலும் காலம் மாறாது; சிரித்தாலும் கண்ணீர் ஓயாது; முடமானாலும தன் முயற்சியே இறுதி வரை உண்டு என்ற வலுவான வாழ்வியல் தாக்குதல்கள் அவளுடைய மனதில் நிலையாக பதிந்து கொண்டன.
சுயநலம் பிடித்த உலகில் மரணம் என்றாலும் கௌரவமாக இருக்க வேண்டும் என்று அழுகின்ற மனதுக்கு தைரியமான மதியால் கட்டளைகள் வகுத்துக் கொண்டாள். வறுமை கூட வெறும் தூசுதான்; பல கோடி மேகங்களுக்கு வானம் ஒன்றுதான். ஆனால், பொழுதுகள் இரு துருவம். இத்தனை நுட்பங்கள் படைத்த இறைவனின் விதிகளும் நிச்சயம் பாவப்பட்ட இவ்வுலகில் உதவாவிட்டாலும் நிலையான மறுவுலகில் உதவும் என்று மனதுக்குள் உறுதியாக நினைத்துக் கொண்டாள்.
யாரிடமும் அடி பணிந்து அடிமையாக தன்மானம் இழந்து வாழ்வதைக் காட்டிலும், காலம் தந்த வறுமையிடம் ஒட்டி உறவாடி சாவது மேலானது. ஆனால் உலகில் பலர் அடுத்தவர்களிடம் கையேந்தி கேவலப்படுகின்றனர். என் மரணம் வரை என் அன்புக் கணவன் என்னோடு இருந்திருந்தால், இந்நிலைமை எனக்கு சத்தியமாக வந்திருக்க மாட்டாது. அவனும் நானும் சேர்ந்து வாழும் போது ஊரே எங்களை எதிர்த்து நின்றது. அந்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாமல் காலனும் காதலனை கொண்டு போய் விட்டான். என் சிரிப்பை நாள் முழுவதும் ரசித்துக் கொண்டிருக்கும் அந்தக் கவிஞனுக்கு என்னால் ஒரு கவிதையாகக் கூடவா வாழ முடியாது.
அவன் என்னை எப்படியெல்லாம் கையில் தாங்கி வாழ விரும்பினானோ அது போல் நானும் அவன் இறந்த பின் அவனது பெயருக்கு ஒரு துளி கலங்கமில்லாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மனதில் எண்ணத்தை ஆணி வேராக புதைத்துக் கொண்டாள். இத்தகைய காலத்தின் விவாதத்தோடு வாதித்தவளாக தன்னுடைய வீட்டு வாசலை அடைந்தாள் சபீனா.
அன்புக் குழந்தையின் கன்னத்தில் பல முறை முத்தமிட்டாள் அந்த அன்பின் ஆழத்தில் யாஷிராவின் கன்னம் ஆப்பிள் போல் சிவந்தது. குழந்தையை தொட்டிலுக்குள் பூக்களை போல் மெதுவாக உறங்க வைத்துவிட்டு, முன்றலில் பின் பக்கம் நுழைந்தாள். தொழுகை நேரம் என்பதால் சபீனா இறைவனைத் தொழ வுழுச் செய்துவிட்டு யதார்த்தமாக தெற்குப் பக்கம் திரும்பிய போது இரு மாதங்களுக்கு முன் கொடியில் போடப்பட்ட ஆடைகள் கண்களை தந்தெடுத்துக் கொண்டன. வெயிலில் சுருங்கி உலர்ந்து போன ஆடைகளை அவள் கைகள் தொட்ட போது தன் மனதை போல் இவைகளும் காயப்பட்டிருக்கிறது என்று ஒரு துளி கண்ணீர் சிந்த எண்ணிக் கொண்டாள்.
ஆடைகளை அள்ளி எடுத்த பின் அவளது கண்களில் இறைவன் அழகான திருப்பத்தை அதிர்ச்சியாகக் கொடுத்தான். இவளால் இதனை நம்ப முடியவில்லை எத்தனை இன்பம் மனதில்.. கண்ணீர் நதிகள் ஒன்றன் பின் ஒன்றாக மண் தரையில் ஓடிக் கொண்ட இருந்தது.
அந்தக் கிணற்றடியிலுள்ள வாழை மரங்கள் ஐந்தும் சுமார் 300 கிலோ எடையுள்ள வாழைக்குலைகளை போட்டிருந்தது. இறைவனின் அருளை மனதுக்குள் புகழ்ந்து ஸுஜூதில் வெளிப்படுத்திக் கொண்டாள்.
ஊரிலுள்ள பழக்கடை வியாபாரியை அழைத்து வந்து வாழைக்குலைகளை சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாவுக்கு பரிமாற்றிக் கொண்டாள் சபீனா... இதுவரை நாளை பெருநாள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்த இவளுக்கு பெருநாள் நாளை எனக்கும் என் குழந்தைக்கும் தான் என்று மனதுக்குள் குளிச்சல் போட்டாள். இறைவனை நாம் மனதளவில் எந்தளவு ஆழமாக நேசிக்கின்றோமோ அந்தளவு அவனும் அடியார்களை நேசிக்கின்றான். நாம் அவனை மனதால் வேய்கின்ற போதிலும் தாயைவிட பன்மடங்கு கருணையுள்ள இரட்சகன் தன்னுடைய படைப்புகளை ஒரு போதும் கைவிடுவதில்லை என்ற வசனமும் இவளது மதியைத் தொட்டது. இன்பத்தின் ஓட்டத்தில் குழந்தையை மாராப்பில் சுமந்தபடி தொங்கோட்டமாய் புதுத் துணி வாங்க போய்க் கொண்டிருந்தாள். அந்த ஓட்டத்தின் நடுவில் அவள் கண்கள் வானை பார்த்த போது ராந்தல் பிறையும் அழகாய் சிரித்தது.