பொய்

"உனக்கு தெரியுமா?! இந்த மஞ்சள் பூக்களை கையில் வைத்து கொண்டால் மாடுகள் நம்பளை அண்டாது" என்று என் முன்னால் குதித்தாள் என் பள்ளி தோழி, ஜான்சி . எனக்கு ஆறு வயது என்றால் அவளுக்கு ஏழு இருக்கும்.

"போடி, நீ சொல்வதை எல்லாம் நம்ப முடியாது" என்றேன் அந்த பூக்களை தூக்கி எரிந்து வீட்டை நோக்கி நடந்த படி. அவள் மறுபடியும் பூக்களை பறித்து புல் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாட்டின் முன்னால் ஆட்டினாள். அவைகளும் சிறிதே மிரண்டது போல் நகர்ந்து சென்றது.

"இல்லை இல்லை நீ என்ன ஏமாத்தற.. " என்றேன் மறுபடியும். விடாமல் அவள் "ஏய் .. பொய் சொன்னா சாமி கண்ணை குத்திடும் டீ. அதனால நான் பொய் சொல்ல மாட்டேன் தெரியுமா"

எப்போதும் அவள் இப்படி தான், ஏதாவது நம்ப முடியாத விஷயங்கள் சொல்லி என்னை குழப்புவாள்.

இம்முறை நன்றாக கோவம் வந்தது எனக்கு. எனக்கும் அவளுக்கும் பேச்சு முற்றியதில், நான் அவள் மேல் மண்ணை அள்ளி தூவினேன். நானும் அவளும் கட்டி புரண்டு சண்டையிட்டதில் மாடுகள் சற்றே பயந்து நகர்ந்து சென்றன. அதற்குள் எங்களை வீட்டுக்கு கூட்டி போகும் ஆயாம்மா வந்து எங்களை பிரித்து விட, அவள் பையிலிருந்து ஐந்து ரூபாய் விழுந்தது. நான் அதை எடுத்து கொண்டு "பாரு, இந்த ஐந்து ரூபாயை நான் வைத்து கொள்கிறேன். என் அம்மாவிடம் பொய் சொல்ல போகிறேன். நீயும் உன் அம்மாவிடம் பொய் சொல்லு அதை தொலைத்து விட்டாய் என்று. என்ன நடக்கிறது என்று பாப்போம் " என்று நான் என் வீடு நடந்தேன்.

ரூபாய் எப்படி வந்தது என்ற அம்மாவிடம் கீழே கிடந்தது என்று பொய் சொன்னேன். இருந்தும் என்னை விடாமல் திரும்ப திரும்ப கேட்டாள். நானும் விடாமல் அதே பதிலை சொல்ல, சந்தேக கண்ணோடு என்னை விட்டு விட்டாள். நானும் வீட்டுப் பாடங்களை முடித்து விட்டு உறங்க சென்றேன்.

சிறு வீடு என்பதால் அண்ணனும் அப்பாவும் ஹாலில் படுத்துக் கொள்ள , நானும் அக்காவும் கட்டிலில் படுத்துக் கொள்வோம். அம்மா கட்டில் கீழே பாய் விரித்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

நடு இரவு இருக்கும் , சன்னமான வெளிச்சம் முகத்தில் விழ லேசாக கண்விழித்து பார்த்தேன். ஏதோ ஒரு வித்யாசமான வண்ணமயமான ஒளி ஜன்னல் கம்பிகளில் தெரிந்தது. வண்டியின் வெளிச்சமாக இருக்கலாம் என போர்வையை முழுதாக மூடி உறங்க முயற்சித்தேன்.

சிறிது நேரத்தில் கீச்சு கீச்சு என்ற சத்தம் வர, போர்வையை விலக்கிப் பார்தேன்.

என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. ஏதோ ஒரு வித்யாசமான நகரும் வெளிச்சம் கண்களுக்கு புலப்பட்டது. அரைத்தூக்கத்தில் இருக்கும் எனக்கு அது என்னவென்று புரியவே தாமதமானது.
அங்கு ... அங்கு ... நான்கு உருவங்கள் கால்களை ஆட்டிக் கொண்டு ஜன்னல் கம்பிகளில் கதைத்துக் கொண்டிருந்தன!!!
விரல் அளவே அதன் அளவு . பார்ப்பதற்கு குட்டி ஜோக்கர் போல அதே சமயம் அஹோரமாகவும் தெரிந்தது.
சர்வ நிச்சயமாக நான் காண்பது கனவில்லை என உணர்ந்த நான், மெதுவாக என் அக்காவை எழுப்பினேன். தூக்கம் களைந்த கடுப்பில், ஜன்னல் சாத்திவிட்டு "திரும்பி படு டீ" என அவள் கண்களுக்கு ஒன்றும் தெரியாது போல் திரும்ப தூங்க தொடங்கினாள்.
சரி, கனவு தான் போல என நானும் திரும்பி படுத்து தூங்க முயற்சித்தேன். இம்முறை கீச்சு கீச்சு என்று சத்தம் , திரும்பி பார்த்த நான், அவைகள் சலசல என்று பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து உறைந்து போனேன் .
திரும்பவும் அக்காவை எழுப்பினால் அடி தான் கிடைக்கும் என்று என்னை நானே தைரிய படுத்திக் கொண்டு அவைகளை உற்று நோக்கினேன்.
எதற்கு இவை இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கின்றன, என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வெறித்து கொண்டிருந்தேன்.
அப்போது தான் உரைத்தது ஜான்சி சொன்னது. "பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும்". பயத்தில் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. கண்களை இறுக்க மூடி கொண்டேன். இது நிஜமில்லை இது நிஜமில்லை என கூறி கொண்டே கண் திறந்து பார்த்தேன்.
சட்டென அது நான்கும் என்னை நோக்கி நடக்க தொடங்கின. அருகில் வந்ததும் தான் கவனித்தேன் அதன் கைகளில் சூலம் போன்ற ஆயுதம்!!
அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சத்தம் கேட்டு எழுந்த அம்மா என்னை சமாதானப் படுத்தி தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டாள். அம்மாவின் அரவணைப்பில் ஆசுவாசமடைந்த நான் சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்து பார்த்தேன்.
அவைகளைக் காண வில்லை. நிம்மதியுடன் உறங்க சென்றேன். காலையில் எழுந்ததும், அம்மாவிடம் ஜான்சியிடம் இருந்து தான் பணம் எடுத்தேன் என்ற உண்மையை சொல்ல, அவளும் என்னுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
ஜான்சியின் அம்மாவை பார்த்து அவளிடம் மன்னிப்பு கேக்க சொன்னாள். அவள் அம்மாவும் "ஓ! இது தெரியாமல் என் குழந்தையை திட்டி விட்டேன்!" என்றாள். நானும் ஜான்சியும் அப்போதே பழம் விட்டு கொண்டோம்.

சாயங்காலம் நானும் ஏனோ அந்த மஞ்சப் பூவினை பறித்து கையில் வைத்துக் கொண்டேன்.

குறிப்பு: அவளிடம் அந்த சம்பவம் பற்றி சொல்லவில்லை. அதன் பின் நான் அந்த உருவங்களை பார்க்கவும் இல்லை, எது எப்படியோ, நான் பொய் மட்டும் சொல்வதில்லை அன்றிலிருந்து!!

எழுதியவர் : நிலா (25-Jun-17, 9:48 pm)
Tanglish : poy
பார்வை : 486

மேலே