அப்துல்ரகுமான்
அப்துல்ரகுமான்
கவிக் கோமகனை காலம் வெல்லுமா
கவிக்கோ கவியால் காலத்தை வெல்வான் - அவன்
குவித்தக் கவிநயம் அள்ளிப் பருகிட
புவியில் போதுமா ஆயிரம் கரங்களே ?
தேவசபைதனை தேடி அலைதல் வேண்டாம்
தேவகானம் உன்னுள்ளும் என்னுள்ளும் ஒலித்திடும்போது
தேனாய் நீதந்த சொல்லமுதமே என்கவிதை
தேடித்தேடி ருசிக்கும் நேயர் விருப்பமன்றோ!
ஆலாபனை பாடிமயக்கிய மந்திரக் கவிநீ
ஆராதனை அகத்தினிலே அத்தனையும் வரங்கள்இனி
அழகு தமிழ்நடை பயின்றகவி ராத்திரிநீ
அள்ளும்கவி வெளிச்சத்தின் நிலவு முற்றம்நீ !
நூல்நீதி சொல்லும் கவிஞர் பலருண்டு
வால்மீகிக் காதைபோல் வளர்ந்தகதை உண்டு
நாள்மீதி உண்டென்ற நம்பிக்கை காற்றோடு
பால்வீதி நடந்தேநீ மேல்வீதி அடைந்தாயோ?
சுட்டும்விரல் காட்டும் எட்டுத் திசையெங்கும்
கொட்டும் முரசாலே திறந்திடும் கதவுகள்போல்
பட்டுத் தெறித்தப் பகுத்தறிவுப் பெட்டகமாய் - நீ
விட்டுச் சென்ற சுவாசம்தான்எம் வாசகமோ?
பசுமை மறந்ததால் உதிரும் சிறகுகள்
வெறுமைதான் ஊனுடல் வெந்திடும் விறகுகள் - வாழ்வில்
முறைமையும் பகைமையும் ஊழ்வினை அல்ல
மதியின் வெளிச்சம் பார்என உரைத்தவன்நீ !
'இறந்ததால் பிறந்தவன்' என்றுநீ பகர்ந்தவன்
சார்ந்த சன்மார்க்கத்தில் சாட்சியம் இல்லை
'அப்துல்ரகுமான்' ஆன்மா பிரிந்தது பறந்தது
பிறந்து வருவான் வளர்கவிதையாய் மலர்வான்.
*******