நிலாக்காரன்-ஆணும் நிலவும் கவிதைப் போட்டி
..............நிலாக்காரன்
கையில் கோலோடும்
துப்பட்டி போர்த்திய மார்போடும்
வான்வழி போவான் நிலாக்காரன்..
ஜன்னலோரம் நின்று தட்டுவான்..
“பத்திரமா??”
பத்திரம் என்பேன்..
அங்கேதான் நிற்பான் அரை நாழிகை..!
இன்னும் வரவில்லை இன்று
பழகிய மேகமென்றாலும் பயமாய் இருக்கிறது..
இப்படித்தான்..
எங்காவது போய்விடுவான் எப்போதேனும்..!
சீக்கிரம் வாயேன் நிலாக்காரனே..
இன்று குடித்த தண்ணீர்
இனிப்பா யிருந்ததைச் சொல்ல வேண்டும்..!
ஏற்றிக் கட்டிய கூந்தல்
எடுப்பா இல்லையா காட்ட வேண்டும்..
தொலைக்காட்சித் தொடர் வசனங்களை
தூரத்திலிருந்து நீ கேட்க வேண்டும்..
பரிவட்டம் கட்டி நீ
பௌர்ணமியாய் வந்தாலும் சரி..
வெட்டரிவாளோடு
மூன்றாம் பிறையாய் நின்றாலும் சரி..
விஞ்ஞானியின் சாயலில்
முக்கால் முகத்தோடு மிளிர்ந்தாலும் சரி..
சீக்கிரம் வந்து விடு
நிலாக்காரனே..