ஆண் நிலவு

ஆண் நிலவு

நான் ஆண்நிலவு
சூரியன் என் சகோதரன்
எப்பொழுதும் என்னைக்
கண்காணித்துக் கொண்டிருப்பவன்
முழுநேரமும் வெளியில் செல்ல
என்னை அனுமதிப்பதில்லை
காரணம்
சுற்றிலும் நட்சத்திரக் குமரிகள்
என்னை நோக்கிக்
கண்சிமிட்டிக் கொண்டிருப்பதுதான்.

நான் ஆணாக இருந்தாலும்
அவ்வப்போது
மறைந்து மறைந்துதான்
வாழ்க்கை நடத்துகிறேன்.
நான் கோபக்காரனில்லை.
எல்லோரிடத்தும்
குளிர்ந்துதான் பேசுவேன் - என்
நெற்றியிலும் கன்னத்திலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கறுப்புப் பொட்டுக்கள் இருந்ததால்
என்னைப் பெண் என்றே எண்ணினர்.

வானில் வலம்வந்த நட்சத்திரப் பெண்டிர்
நான் ஆண் என்றறிந்ததும்
ஓடி ஒளிந்து விளையாடுகிறார்கள்
பூமியில் தோன்றும் கவிஞரெலாம்
என்னைக் கண்டு கொள்வதில்லை
'ஆம்ஸ்ட்ரோங்', 'ஆல்ட்ரின்,' 'காலின்ஸ்'
என்னைப் பார்ப்பதற்கு
வந்தார்கள்; சென்றார்கள்.
பூமிக்குத் திரும்பியபின்
நான் ஆண் என்ற அதிசயத்தை
யாருக்கும் சொல்ல வில்லை
என் சோதரன் சூரியனோ
என்னைப் பொத்திப் பொத்தியே வளர்க்கிறான்.

பிறகோள்கள் எனும் உறவுகள்கூட
நான் ஆண் என்பதறிந்து
என்னை கண்டுகொள்வதில்லை.
மாப்பிள்ளையாம் என்னை பார்ப்பதற்கு
என் சகோதரி பூமிதேவி
'ரோபோக்கள்' என்ற 'புரோக்கர்களை'
அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாள்.
.
மாதத்தில் இருமுறை மட்டுமே
வான்வீதியில் நான்
சுதந்திர நடை போடுவேன்.- நான்
ஆண்மகன் என்பதால்
அச்சம் என்பதில்லை
வெற்றிலை இடிக்கும் பாட்டிகூட
இப்போது இங்கில்லை

என் சூரியச் சகோதரன் என்னிடம்
'போதும் போதும் தம்பட்டம்
அடக்கி வாசி' என்கிறான்.
நான் தனிமையில் தவிக்க வில்லை
ரசிக்கிறேன்...ஆ...அதோ
'சேட்டன்' ஒருவர்
'கெட்டிலோடு' வருவது தெரிகிறது

வான் வீதியிலுள்ள - என்
ஆண் நண்பர்கள்; பெண் நண்பர்கள்
எல்லாருக்கும் வணக்கம்!
நன்றி!

எழுதியவர் : நெல்லை சுதன் (28-Jun-17, 1:20 pm)
Tanglish : an nilavu
பார்வை : 155

மேலே