மல்லிகை’ ஜீவாவுக்கு 90 --ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா
முருகபூபதி
யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகானந்தனுக்கும் ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும்.
நான் முதல் தடவையாக பனைமரங்களைப் பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந்தக்கற்பகதருவை பாடசாலை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன்.
ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு நூல்களில் பனைமரங்கள் அட்டைப்படமாகின.
ரஜனி திராணகம சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான முறிந்த பனை, மூத்த பத்திரிகையாளர் கார்மேகத்தின் ஈழத்தமிழர் எழுச்சி, செ. யோகநாதன் தொகுத்த ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம், ஜெயமோகனின் ஈழத்து இலக்கியம்,பேராசிரியர் கா. சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்சமூகம் – பண்பாடு – கருத்துநிலை உட்பட பல நூல்கள் பனைமரத்தை ஒரு குறியீடாகவே அட்டைகளில் சித்திரித்துள்ளன.
வவுனியாவைக் கடந்தவுடன் ஏ9 பாதையின் இருமருங்கும் தென்பட்ட பனைமரங்களை கல்விக்காக பயணித்த அக்காலத்தில் பரவசத்துடன் பார்ப்பேன்.
அவ்வாறு அந்த மண்ணில் நான் பரவசத்துடன் பார்த்த ஒரு மனிதரின் பெயர் டொமினிக்ஜீவா.
எங்கள் மாணவர் விடுதியின் சார்பாக மாதாந்தம் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்கு அவர் பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் நான் அவரைப்பார்த்தது இல்லை. அவர் அருந்துவதற்கு ஒரேஞ்பார்லி போத்தல் ஒன்றை மேசையில் வைத்திருந்தார்கள்.
வெள்ளை வேட்டி வெள்ளை நஷனல் அணிந்து வந்திருந்தார். மேடையில் உரத்த குரலில் பேசினார். அவ்வப்போது கைகளை உயர்த்தினார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கைச்சம்பவங்களை விபரித்தார். சங்கானையில் நடந்த ஒரு சாதிக்கலவரம் பற்றிச்சொன்னார்.
எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. அவரது முகத்தையும் மேசையிலிருந்த குளிர்பானப்போத்தலையும் பார்க்கிறேன். அவரது நெற்றி இடைக்கிடை புடைத்து நரம்புகளும் தெரிந்தன.
எனக்கு அந்த வயதில், அவர் ஏதோ கோபத்தில் பேசுவதாகவே புரிந்தது.
தனது உரை முடியும் வரையில் அவர் அந்த குளிர்பான போத்தலை தொடவே இல்லை. நீண்டநேரம் பேசியும் அவரது நா வரண்டுவிடவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியமானது.
காலப்போக்கில் சுமார் பத்தாண்டுகள் கழித்து அதாவது 1972 காலப்பகுதியிலும் அதே உணர்சிப்பிழம்பாக அவர் பேசியதை கண்ணுற்றபொழுது அதற்குப்பொருள் தர்மாவேசம் என்று புரிந்துகொண்டேன். அத்தருணத்தில் மகாகவி பாரதியின் ரௌத்திரம் பழகு என்ற சொற்பதத்தையும் தெரிந்துகொண்டிருந்தேன்.
இலங்கையில் முதல் முதலாக தமிழில் சிறுகதை இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதைப்பெற்றவர். விருது பெற்ற அந்தக்கதைத்தொகுதியின் பெயர்: தண்ணீரும் கண்ணீரும்.
விருதை வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் திரும்பி வருகிறார். ஊர்மக்கள் அச்சமயம் யாழ்ப்பாண மேயராக பதவியிலிருந்த துரைராஜாவின் தலைமையில் மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர்.
யாழ். ரயில் நிலையத்துக்கு சமீபமாகவே அவரது வீடு அமைந்திருக்கிறது. அவருக்கு நேரம் சொல்வதற்கு அங்கு வரும் ரயில்கள் போதும்.
கஸ்தூரியார் வீதியில் தந்தையாரின் ஜோசப்சலூனை கவனித்துக்கொண்டார்.
அத்துடன் எழுதத்தொடங்கினார். புத்தகக்கடை பூபாலசிங்கமும் ராஜகோபல் என்ற அன்பரும் அவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியதுடன் சிறந்த நூல்களையும் படிக்கக்கொடுத்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார். ஐக்கியதேசியக்கட்சி பதவியிலிருந்த காலப்பகுதியில் ஒரு மேதின ஊர்வலத்தில் அவர் கலந்துகொண்டு தொழிலாள விவசாய பாட்டாளி மக்களுக்காக கோஷம் எழுப்பியவாறு சென்றபொழுது யாரோ எறிந்த கல் அவரது நெற்றியை பதம்பார்த்தது.
யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கே கடமையிலிருந்த அவரது இலக்கிய நண்பரும் மருத்துவருமான டொக்டர் நந்தி அவரது காயத்துக்கு இழையும்போட்டு, மருந்திட்டு கட்டுப்போட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னார்.
ஆனால் இந்த தர்மாவேச சிங்கம் சும்மா இருக்குமா?
அந்த இரத்தம் கசிந்த நெற்றிக்கட்டுடன் மேதின மேடைக்குத்திரும்பி,“ இதோ பாருங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் பரிசு…“ என்று இரத்தம் கசிந்த நெற்றியை காண்பித்து,“ சோஷலிஸம் மலரும் காலம் தூரத்தில் இல்லை” என்று ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார்.
இந்த வரலாற்றையெல்லாம் அவரது மல்லிகையில் 1972 இல் நான் எனது முதலாவது சிறுகதை எழுதியபின்புதான் தெரிந்துகொண்டேன்.
கனவுகளுடன் 1960 களில் யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்று, கனவுகளுடனேயே திரும்பியிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில் கடல். அந்தக்கடலின் மாந்தர்களும் கனவுகளுடன்தான் வாழ்ந்தனர். எனது கனவுகளிலும் வந்தனர்.
“ என்னத்தைச் செல்லிய சோமலமாதாவே….” என்ற அவர்களது மொழி எனக்கோ கொஞ்சும்மொழி. நான் ரசிக்கும் பிரதேச மொழிவழக்கு.
அவர்களது பேச்சுமொழியில் கனவு என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி மல்லிகைக்கு அனுப்பியிருந்தேன். ஆசிரியர் டொமினிக்ஜீவா அதற்கு கனவுகள்ஆயிரம் என்ற பெயரைச்சூட்டி 1972 ஜூலை மாத மல்லிகையில் அச்சிட்டு எனக்கு ஒரு பிரதியை தபாலில் அனுப்பியிருந்தார்.
எனது பிறந்த நாளன்று குறிப்பிட்ட இதழ் என் வசம் கிடைத்தது தற்செயலானது. எதிர்பாராதது.
அன்று முதல் அவரை பயிலத்தொடங்கினேன். உறவாடினேன்.
அவருடன் பயணித்த அனுபவத்தின் அறுவடையாக 2001 இல் மல்லிகை ஜீவாநினைவுகள் என்ற நூலை எழுதி அவருக்கும் வாசகர்களுக்கும் வழங்கினேன்.
தண்ணீரும் கண்ணீரும் கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர் பாதுகை, சாலையின் திருப்பம் முதலான தொகுதிகளையும் மேலும் சில நூல்களையும் இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.
சாலையின் திருப்பம் தொகுதிக்கு அவரது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சரஸ்வதி (1958),தாமரை (1968) முதலான இதழ்களும் ஜீவாவின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்து அவரைப்பற்றி எழுதி கௌரவித்திருக்கின்றன. குமுதம் இலவச இணைப்பாக ஜீவாவின் அனுபவமுத்திரைகள் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து விநியோகித்திருக்கிறது.
இந்தத்தகவல்கள் யாவும் கடந்தகால செய்திகளே.
ஒரு சிறுகதை எழுத்தாளன், பெரிய பொருளாதார வசதிகளோ, உயர்ந்த கல்விப்பின்புலமோ இல்லாமல் தொடர்ச்சியாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை இலக்கிய இதழை நடத்தியிருக்கிறார் என்ற சாதனையும் இன்று காலம் கடந்த செய்திதான்.
இலங்கை பாராளுமன்றத்தில் விதந்து பேசப்பட்ட இலக்கியவாதியான டொமினிக் ஜீவாவுக்கு அந்தப்பெருமையை பெற்றுக்கொடுத்ததும் அவரது அயராத முயற்சியினால் வெளியாகிக்கொண்டிருந்த மல்லிகைதான்.
மாதாந்தம் மல்லிகையை வெளியிட்டவாறே ‘மல்லிகைப்பந்தல்’ பதிப்பகத்தின் மூலம் பல படைப்பாளிகளின் படைப்புகளையும் நூலுருவாக்கி விநியோகித்தார்.
எனது பாட்டி சொன்ன கதைகள்,கங்கை மகள் என்பன மல்லிகைப்பந்தல் வெளியீடுகளே.
1975 இல் மல்லிகைப்பந்தல் என்ற பெயரை இலக்கிய சந்திப்புக்காகவே அவர் தெரிவு செய்திருந்தார். அந்தப்பந்தலில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எனது முதலாவது ( சுமையின் பங்காளிகள்) சிறுகதைத்தொகுதிக்கு வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தவிட்டு, அஞ்சலட்டையில் அச்சிடப்பட்ட அழைப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.
ஆசிரியரும் எழுத்தாளருமான சு. இராஜநாயகன் நிகழ்ச்சிக்குத்தலைமை. இவர்தான் தற்பொழுது கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியர் பாரதியின் அப்பா.
அந்தப்பயணத்தில் யாழ்ப்பாணத்தில் டானியல், குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் உட்பட பல படைப்பாளிகளை எனக்கு அறிமுகப்படுத்தியதும் ஜீவாதான்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை வெளியான காலங்களில் மாதாந்தம் ரயிலேறி கொழும்பு வந்து சில நாட்கள் தங்கியிருந்து, அலைந்து திரிந்து மல்லிகை பிரதிகளையும் விநியோகித்து இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொள்வார்.
கொழும்பு மலிபன் வீதியில் மல்லிகைக்கு தேவையான வெள்ளீய அச்சு எழுத்துக்கள் மற்றும் அச்சிடும் காகிதாதிகளை வாங்கி ஏதும் யாழ்ப்பாணம் செல்லும் லொறிகளில் ஏற்றிவிட்டு மீண்டும் ரயிலில் யாழ்ப்பாணம் திரும்புவார்.
கொழும்பு வருமுன்னர் எனக்கு ஒரு அஞ்சலட்டையில் தனது வருகை பற்றி எழுதிவிடுவார். எங்கள் நீர்கொழும்புக்கும் வருவார். எங்கள் ஊர் கடற்கரையில்தான் இலக்கிய சந்திப்புகள் நடைபெறும்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சந்திரமோகன். பவாணி ராஜா, சிவம், ரட்ணராஜா, மு.பஷீர், நிலாம் , தருமலிங்கம், செல்வரத்தினம் ஆகியோருடன் நானும் அந்தச்சந்திப்புகளில் கலந்துகொள்வேன்.
அத்தகைய ஒரு கடற்கரைச்சந்திப்பில்தான் மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் யோசனை மலர்ந்தது.
1972 பெப்ரவரி மாத மல்லிகை, நீர்கொழும்பு சிறப்பிதழாக வந்தது. அதனை வெளியிட்டுவைப்பதற்கு மண்டபம் கிடைக்காத சூழ்நிலையில் எங்களது சூரியவீதி இல்லத்திலேயே அதனை 19-02-1972 ஆம் திகதி நடத்தினோம்.
எனது மைத்துனி தேவா நிகழ்ச்சியில் வரவேற்பரை நிகழ்த்தினார்.
தேவா தற்போது ஜேர்மனியில் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர். செல்வரத்தினம் பிரான்ஸில் ஒரு ஊடகவியலாளர். கவிஞர் தருமலிங்கம் கனடாவில், பஷீர் மினுவாங்கொடையில், நிலாம் பத்திரிகையாளராக தினக்குரலில் நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சந்திரமோகன், பவாணிராஜா,ரட்ணராஜா, சிவம் ஆகியோர் மறைந்துவிட்டனர்.
ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து கொழும்பு வாசியாகிவிட்டார். அவர் கொழும்பு வாசியாவதற்கு முன்பே நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின்பு, 1990 இல் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியான சந்தர்ப்பத்தில் ஜீவாவை சென்னைக்கு அழைத்து அங்கே அவருடன் ஊர் சுற்றினேன். இந்தப்பயணத்தில் கண்ணதாசனின் மனைவியின் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டோம். இங்குதான் சிவாஜிகணேசனையும் சந்தித்தோம்.
ஜெயகாந்தன், சிட்டி, சிவபாதசுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், மேத்தா, இன்குலாப், திலகவதி, சிவகாமி, ராஜம்கிருஷ்ணன், ரகுநாதன், பாலகுமாரன், சு. சமுத்திரம், அக்கினி புத்திரன், செ. யோகநாதன், பொன்னீலன், கண.முத்தையா, அகிலன் கண்ணன், ரங்கநாதன், நர்மதா ராமலிங்கம்,குணசேகரன், அறந்தை நாராயணன், தி.க. சிவசங்கரன், வைரமுத்து, மேத்தாதாஸன், இளம்பிறை ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்ணு, சி.ஏ. பாலன், உட்பட பலரை சந்திப்பதற்கு இந்தப்பயணம் பயன்பட்டது.
இலங்கையிலும் ஜீவாவுடன் பல பயணங்களை, குறிப்பாக கொழும்பில் மேற்கொண்டிருக்கின்றேன்.
1972 இல் ஒரு நாள் நீர்கொழும்பு கடற்கரை மணலில் அமர்ந்திருந்தபொழுது மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் சிந்தனை தோன்றியதுபோன்றே, பல வருடங்களுக்குப்பின்னர் 1999 இல் நீர்கொழும்பில் அதே சூரியவீதி இல்லத்தில் நண்பர் திக்குவல்லை கமாலுடனும் ஜீவாவுடனும் அமர்ந்து மதியவிருந்துண்டபோது உருவான சிந்தனைதான் மல்லிகையின் அவுஸ்திரேலியா சிறப்புமலர்.
2001 ஆம் ஆண்டு நாம் நடத்திய முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் குறிப்பிட்ட மலர் வெளியிடப்பட்டது.
இம்மலரில், புவனா இராஜரட்ணம், நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ் சுந்தரதாஸ், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், பாலம்லக்ஷ்மணன், களுவாஞ்சிக்குடி யோகன், உரும்பைமகள், பிரவீணன் மகேந்திரராஜா, நடேசன், ஜெயசக்தி பத்மநாதன், தி.ஞானசேகரன், கலாநிதி வே. இ. பாக்கியநாதன், கவிஞர் அம்பி, மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி, மாத்தளை சோமு, கனபரா யோகன், அ. சந்திரகாசன், பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, ரேணுகா தனஸ்கந்தா, த.கலாமணி, முருகபூபதி ஆகியோர் எழுதியிருந்தனர்.
மலரின் முகப்போவியத்தை அக்காலப்பகுதியில் சிட்னியிலிருந்த, தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் கலாமணி பரணீதரன் வரைந்திருந்தார். குறிப்பிட்ட அவுஸ்திரேலியா மலர் இலக்கியத்தரமாகவும் கனதியாகவும் வெளியாகியது.
நீர்கொழும்பு சிறப்பிதழையடுத்து திக்குவல்லை, அநுராதபுரம், முல்லைத்தீவு உட்பட பல பிரதேச சிறப்பிதழ்கள் வெளியாகின.
ஆனால் அவுஸ்திரேலியா மல்லிகை சிறப்பு மலருக்குப்பின்னர் எந்த ஒரு புகலிட நாட்டினதும் மல்லிகை சிறப்பு மலர் வெளிவரவேயில்லை என்பதுடன் மல்லிகையின் வரவும் கடந்த ஆண்டு (2012) இறுதிக்குப்பின்னர் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம்.
1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டு காலப்பகுதியில் ஜீவாவின் கனவுகள் சிலவற்றையாவது நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவு எனக்குண்டு.
எனது கனவுகள் ஆயிரத்தை தமது மல்லிகையில் பதிந்து படரவிட்டவருக்கு நன்றிக்கடனாக அவரது சில கனவுகளையாவது நனவாக்க துணை நின்றேன் என்ற உள்ளப்பூரிப்பு எனக்கு என்றும் உள்ளது.
அதில் முக்கியமானது இலங்கையில் நாம் பலர் இணைந்து 2011 இல் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.
குறிப்பிட்ட மாநாட்டு யோசனையும் அவருடைய கொழும்பு மல்லிகை காரியாலயத்தில் எனக்கு அவரால் அளிக்கப்பட்ட ஒரு தேநீர் விருந்துபசார சந்திப்பில்தான் உருவானது.
டொமினிக்ஜீவாவுக்கு வயது எண்பதும் கடந்துவிட்டது.
இயங்கிக்கொண்டிருப்பவர்களை முதுமையும் நோயும் அண்டாது என்பார்கள். அதற்கு ஒரு உதாரணமாக இவர் இயங்கினார்.
“எல்லாம் போதும். போதுமப்பா…” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவர் ஓய்வை விரும்பிய கணங்கள் அவை. ஆனால் அவர் உறங்கும்பொழுது மட்டுமே ஓய்வெடுப்பவர்.
மல்லிகை வேலைகளை முடித்து, அலைந்து களைத்து வீடு திரும்பியதும் வாசலில் கால் செருப்புகளை கழற்றிவிட்டதுடன் அனைத்துக்கவலைகளையும் கழற்றிவிட்டுவிடும் இயல்புள்ளவர். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கையில் சாய்ந்தால் அவர் எந்தக்கவலையும் அற்று நித்திராதேவியுடன் சங்கமித்துவிடுவார்.
அதன் பின்னர் மறுநாள் காலைதான் கண்விழிப்பார்.
குண்டூசி விழுந்தாலும் அந்த ஓசையில் விழித்தெழும் எனக்கு, அவரது ஆழ்ந்த (இந்த விடயத்தில் அவர் கொடுத்துவைத்தவர்) உறக்கம் வியப்பானது.
இனி மல்லிகை பற்றியும் சில குறிப்புகள்:
மல்லிகை இலங்கை தமிழக எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில் பதிவுசெய்து அவர்களைப்பற்றிய ஆக்கங்களையும் பிரசுரித்து வருவதையும் பெறுமதிமிக்க இலக்கியப்பணியாக்கியிருக்கியிருப்பதும் சாதனைதான்.
தமிழக படைப்பாளிகள் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், தி;.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், நீலபத்மநாபன், பேராசிரியர் நா.வானமாமலை, பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, சுதந்திர போராட்ட தியாகி சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே. கோரி மற்றும் வெளிநாடுகளில் வாழும் அ.முத்துலிங்கம் (கனடா) கவிஞர் அம்பி (அவுஸ்திரேலியா) வவுனியூர் இரா உதயணன் (இங்கிலாந்து) பத்மநாப ஐயர் ( இங்கிலாந்து) சேரன் (கனடா) நிலக்கிளி பாலமனோகரன் (டென்மார்க்) க.பாலேந்திரா (இங்கிலாந்து) எஸ்.பொ. (அவுஸ்திரேலியா) வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே) சுதாராஜ் (மத்தியகிழக்கு) இளைய அப்துல்லாஹ் (இங்கிலாந்து) முருகபூபதி (அவுஸ்திரேலியா) கோகிலா மகேந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் உருவப்படங்களையும் அவர்களைப்பற்றிய ஏனைய எழுத்தாளர்கள் எழுதிய ஆக்கங்களையும் மல்லிகை கடந்த காலங்களில் பிரசுரித்து அவர்களின் கலை, இலக்கிய, சமூகப் பணிகளை கௌரவித்திருக்கிறது.
இந்த ஈழத்து இலக்கியக்குரல் தமிழகத்துக்கு இலக்கியப்பாலம் அமைத்தது.
குறிப்பிட்ட அட்டைப்படக்கட்டுரைகளும் பின்னர் தனித்தனி தொகுப்புகளாக மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக நூலுருப்பெற்றன.
அவை:-
அட்டைப்பட ஓவியங்கள் (1986)
மல்லிகை முகங்கள் (1996)
அட்டைப்படங்கள் (2002)
முன்முகங்கள் (2007)
பல்கலைக்கழகப்படங்களுக்காகவும் தேசியப்பட்டங்களுக்காகவும் பலரும் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டம்வழங்கி கௌரவிக்க முனைந்து ஜீவாவுக்கு அழைப்பும் விடுத்தது.
ஜீவா என்னசெய்தார் தெரியுமா?
கல்வித்துறை சார்ந்த பட்டம் என்பதனால் அது தன்னை அவமானப்படுத்துவதற்காகவே வழங்கப்படுவதாகக் கருதி அதனை நிராகரித்தார். இவரது நிராகரிப்புத்தொடர்பாக பத்திரிகைகளில் காரசாரமான விவாதங்களும் எழுந்தன. பின்னர் குறிப்பிட்ட விவகாரமே ஒரு நூலையே வெளிவரச்செய்தது. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் என்ற தலைப்பில் கவிஞர் மேமன்கவி அந்தநூலை தொகுத்திருந்தார்.
பல்கலைக்கழக பட்டத்தை நிராகரித்த ஜீவா பிறிதொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் அதியுர் விருதான சாகித்திய ரத்னா,தேசத்தின் கண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். இவை இலக்கியம் சார்ந்திருந்தமையே அதற்குக்காரணம். அச்சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியிடம் தேசத்தின் கண் விருதினைப்பெற்றுக்கொண்ட மற்றுமொருவர் சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் ஆவார்.
ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு பத்ரே பிரசூத்திய. (மொழிபெயர்த்தவர் இப்னுஅஸ_மத்)
ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம். இதனை Undrawn Portrait for Unwritten Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் க.குமாரசாமி.
மல்லிகை இதழின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஜீவா ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதன் பெயர்:- அச்சுத்தாளின் ஊடாக ஓர் அனுபவப்பயணம்.
இலக்கிய சிற்றேடுகள் வெளியிட துணிபவர்களுக்கு இந்நூல் சிறந்த பாடநூல்.
இலங்கையிலும் தமிழகத்திலும் இலக்கியச்சிற்றேடுகள் வெளியிட்டு சிரமப்பட்டு பின்வாங்கிக்கொண்டவர்களைப்பற்றியும் ஜீவா, மல்லிகையின் 44 ஆவது ஆண்டுமலரில் நினைவூட்டியிருக்கிறார்.
ரகுநாதன் (சாந்தி) சி.சு.செல்லப்பா (எழுத்து) நா. பார்த்தசாரதி (தீபம்) ஜெயகாந்தன் (ஞானரதம்) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) வல்லிக்கண்ணன், விந்தன் ஆகியோரே ஜீவா நினைவூட்டுபவர்கள்.
இவர்களுடன் கவிஞர் கண்ணதாஸனையும் வேறும் சிலரையும் ஜீவா தற்செயலாக மறந்துவிட்டார்.
இலங்கையில் கே.கணேஷ் (பாரதி) செ.கணேசலிங்கன் (குமரன்) ரஹ்மான் (இளம்பிறை)
வரதர் (வெள்ளி- புதினம் )
இவர்களில் கணேசலிங்கன், ரஹ்மான், வரதர் ஆகியோர் சொந்தமாக அச்சுக்கூடமே வைத்திருந்தவர்கள். இலங்கையில் மெய்கண்டான் கலண்டர்களை வருடந்தோறும் வெளியிடும் பிரபல அச்சகத்தினரும ; நீர்கொழும்பில் சாந்தி அச்சகத்தினரும் இலக்கியச்சஞ்சிகைகளை நடத்தி கைவிட்டவர்களே.
இவற்றிலிருந்து புலனாவது….. அச்சகம் இருந்தால் மாத்திரம் ஒரு சிற்றிதழை நடத்திவிடலாம் என்பது அல்ல
இங்குதான் மல்லிகை ஜீவாவின் அசுர பலம் புலனாகியது.
ஒரு காலத்தில் மல்லிகையை ‘சிறுசோறு படைக்கும் சஞ்சிகை’ என்று கிண்டலாக விமர்சித்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொ.வின் உருவப்படத்தையும் மல்லிகை பிரசுரித்து கௌரவித்திருக்கிறது. எஸ்.பொ.வுக்கு 75 வயது (பவளவிழா) எனத்தெரிந்ததும் வாழ்த்துத்தெரிவித்து கட்டுரையும் பிரசுரித்தது. காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும் முரண்பட்டவர்கள் கூட மல்லிகையின் அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப்பண்பு இலங்கை இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு தகவல்:-
கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் ஜெயகாந்தனின் நேர்காணல் வெளிவரவே இல்லை. அதற்கான முயற்சியை பரீக்ஷா ஞாநி மேற்கொண்டபோதும் கோமல் அதற்கு உடன்படவில்லை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இலக்கியவாதிகள் இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்தான் முன்னர் மல்லிகை அலுவலகம் இயங்கியது. ஒருசமயம் இலங்கை இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலுக்கும் இலக்கானது. மல்லிகை சாதனங்கள் சேதமுற்றன. ஜீவாவும் அவருடன் அங்கே அச்சுக்கோப்பாளராக பணியாற்றிய சந்திரசேகரமும் உயிர்தப்பியது ஈழத்து இலக்கியம் செய்த புண்ணியமோ தெரியவில்லை.
1995 இற்குப்பின்னர் மல்லிகை ஜீவா கொழும்பு வாசியாகியிருக்கிறார். ஆனால் இந்த இடப்பெயர்வு அவராக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. மல்லிகைக்காகவே இடம்பெயர்ந்தார். தொடர்ந்தும் இயங்கினார். மல்லிகையும் மலர்ந்தது.
ஆனால் தற்பொழுது மல்லிகையின் வரவு தடைப்பட்டுவிட்டது.
ஞானம் இதழில் துரைமனோகரனும் ஜீவநதி யில் ச. முருகானந்தனும் மல்லிகை மீண்டும் வரவேண்டும் என்று தமது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்.
தற்பொழுது தினக்குரல் ஞாயிறு இதழில் மல்லிகை ஜீவா பற்றிய தொடரை எழுதிவரும் ஜீவாவின் உற்ற நண்பர் தெணியானும் மல்லிகை 50 ஆவது ஆண்டு மலர் வரையிலாவது வரவேண்டும் என்று என்னுடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங்களில் சொல்வார்.
மல்லிகை ஜீவாவுடன் இணைந்து இயங்கிக்கொண்டிருந்த மேமன் கவி, திக்குவல்லை கமால், ஆப்தீன், ம. பாலசிங்கம், ஆகியோர் சீரான திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்தினால், மல்லிகை ஜீவாவை ஆலோசகராக்கி அவரை நிறுவனர் என்ற பெருமையுடன் கௌரவப்படுத்தி தொடர்ந்து மல்லிகையை வெளியிட ஆவன செய்யமுடியும்.
அல்லது இணைய இதழாக நடத்த முடியும்.
இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நாம் நடத்திய மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வுக்கு அவரை அழைத்துச்செல்ல ஒரு வாகனம் ஒழுங்குசெய்துவிட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
தனக்கு அன்று உடல்நலக்குறைவு என்று சொன்ன அவர், நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, 1970 களில் நடந்த நீர்கொழும்பு கடற்கரையோர இலக்கிய சந்திப்புகளை நினைவுகூர்ந்தார்.
அவரும் என்னைப்போன்று அந்த இனிமையான பசுமையான காலங்களை தொலைதூர இடைவெளியில் பிரிந்திருந்தவாறு நினைத்துக்கொண்டிருக்கிறார்.
இடைவெளிகளை இணைக்கும் இயல்பு இந்த நினைவுகளுக்கு இருப்பதனால்தான்போலும் நினைக்கத்தெரிந்த மனங்களுக்கு மறக்கவும் தெரியாதிருக்கிறது.
—0—