இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்---வழிகாட்டியாக டொமினிக் ஜீவா

நடேசன் – அவுஸ்திரேலியா

2016 ஜூலையில் இலங்கை சென்றபோது மல்லிகை ஆசிரியரும் எழுத்தாளருமான டொமினிக்ஜீவாவை சந்திக்கத் தயாரானபோது ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் என்னுடன் சேர்ந்து கொண்டார். கொழும்பில் மாலை மூன்று மணியளவில் எமது பயணம் ஓட்டோவில் தொடங்கியது. கோடை வெய்யில் அனலாக முகத்தில் அடித்தது. போக்குவரத்து ஓசை காதைப்பிளந்தது. தெருப்புழுதி, வாகனப்புகையுடன் கலந்து நுரையீரலை நிரப்பியது. ஒரு மணி நேரப்பிரயாணத்தில் உடல்வியர்த்து, உடைகள் தேகத்தில் ஒட்டியது. முகத்துவாரம் பகுதியில் உள்ள அவரது வீட்டை அடைந்தபோது, இந்துசமுத்திரத்திலிருந்து வந்த கடற்கரைக்காற்று இதமாக இருந்தது. பிரயாணக்களைப்பு டொமினிக்ஜீவாவின் முகத்தைப்பார்த்தபோது காற்றோடு கரைந்தது.

டொமினிக்ஜீவா என்ற முதிய பதிப்பாளர், எழுத்தாளர் தற்பொழுது தனது மகன் திலீபனது வீட்டில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் சந்திக்கவேண்டும் என்பதே எமது பிரயாணத்தின் நோக்கம். அவரையும் எங்களையும் இணைப்பது எது…? என ஞானசேகரனிடம் நான் கேட்டபோது, “இலக்கியம்” என்றார். “உண்மைதான்” என நான் கூறியபோது, ” வெளிநாடுகளில் பலரை சந்தித்தது அங்கு நான் உபசரிக்கப்பட்டது எல்லாமே இலக்கியத்தால் ஏற்பட்டது ” என்றும் சொன்னார்.

அதற்கப்பாலும் எனக்கொரு காரணமிருந்தது. ஆனால், காதலால் திருமணத்தின்முன் கருக்கொண்டபெண் வாய் திறக்கத் தயங்குவதுபோல் மௌனமாக இருந்தேன்.

நான் யாழ்ப்பாணத்தில் 8 ஆம் தரத்தில் படிக்கும் காலத்தில் கஸ்தூரியார் வீதியால் இந்துக்கல்லுரிக்கு நடந்து செல்லும்போது என்னுடன் வந்த தந்தையார், ” இவர் நமது ஊரைச்சேர்ந்தவர் (நயினாதீவு) என்றார். அதைப்பிற்காலத்தில் ஜீவா, தனது பெற்றோரில் ஒருவர் நயினாதீவென உறுதி செய்தார். மாணவப்பருவத்தில் யாழ்ப்பாண வாசிகசாலைகளில் மல்லிகையை வாசிப்பேன். உள்ளடக்கத்தின் முகப்பிலிருந்த பாரதிபாடல் எனக்குள் ஒவ்வொருமுறையும் ஒரு புன்முறுவலை உருவாக்கும்.பிற்காலத்தில் பல்கலைக்கழகம், தென்னிலங்கை மற்றும் இந்தியா என எனது வாழ்க்கை திசைமாறியதனால், மல்லிகையுடனான தொடர்பற்றுப் போய்விட்டது. அவுஸ்திரேலியாவில் நண்பர் முருகபூபதியின் தொடர்புகளினால் டொமினிஜீவாவின் பிரத்தியேக வாழ்க்கை பற்றியும் அறிய முடிந்தது. நானும் சில ஆக்கங்களை மல்லிகையில் எழுதினேன்

எஸ்.பொ, டொமினி ஜீவாவை சென்னையில் கவுரவித்தபோது அங்கும் சந்தித்தேன். அப்பொழுது, இருவருக்கும் இலங்கையில் ஒருகாலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளின் சமாதான ஒப்பந்தமாக அந்த விழா எனக்குத் தெரிந்தது. நண்பர் முருகபூபதி 2011 இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கொழும்பில் உருவாக்கியபோது அந்தச் சமாதானம், திருகோணமலையில் கடற்படைக் கப்பலுக்கு கண்ணிவெடிவைத்தபோல் உடைந்தது. அந்த மகாநாடே டொமினிக்ஜீவாவின் வேண்டுகோளின் பேரில்தான் தொடங்கப்பட்டதாக முருகபூபதி கூறியதும் இங்கு நினைவுபடுத்தல் வேண்டும். அந்த மகாநாட்டின் பின்னர் ஜீவாவை பலதடவை சந்தித்திருக்கின்றேன். கனடா இலக்கியத்தோட்டத்தினரின் இயல்விருது அவருக்கு கொழும்பில் வழங்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் நின்ற நான் அங்கு வந்து கலந்து கொண்டேன்.

2010 இல் முருகபூபதியுடன் இலங்கை சென்றபோது எனது வண்ணாத்திக்குளம் நாவலின் இரண்டாவது பதிப்பை அச்சிட அவரிடம் கொடுத்தேன்.

எனக்கு அவரை நன்கு பிடித்தமைக்கு முக்கிய காரணம்: யாழ்ப்பாணச் சாதியமைப்பிற்கு தொடர்ந்து தலை வணங்காது அதற்கு எதிராகப் பேனையால் போராடியவர். அதேநேரத்தில் பல்வேறு சாதியினரை தனது நண்பர்களாக வைத்திருந்தவர் என்பது முருகபூபதியால் எனக்குத் தெரிந்த கேள்வி ஞானம் மட்டுமே.
ஆனால், பிற்காலத்தில் அங்கு நான் பார்த்த அரசியல் சூழலில் அவரை நினைவில் வைத்திருப்பதற்கு மற்றும் ஒரு காரணமும் இருந்தது. அதையே ஞானசேகரனிடம் சொல்லத்தயங்கினேன்

டொமினிக்ஜீவாவை பலமுறை நான் சந்தித்திருந்தாலும் பசுமரத்தாணியாக மனதில் பதிந்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் முக்கியமானது. போர் முடிந்தபின்னர் 2009 ஜுலையில் இலங்கை சென்றபோது உடன் வந்திருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிமணியத்துடன் மல்லிகை ஜீவாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

” எதற்காக யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பு வந்தீர்கள்..?” என்ற கதையைக் கேட்டபோது, ” தனக்கு விடுதலைப்புலிகளின் உளவுத்துறையில் இருந்து அவசரமாக வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. அதனாலேயே கொழும்பு வந்தேன்.” என்றார்

அப்பொழுதான் டொமினிக் ஜீவாவின் அரசியல் விவேகம் எனக்குப் புரிந்தது. இவ்வளவிற்கும் அவர் அரசியல் விஞ்ஞானத்தில் வெளிநாட்டில் கலாநிதி பட்டம் பெற்றவரில்லை. குறைந்த பட்சமான கல்லுரிப்படிப்பும் அவருக்கில்லை. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அடையாளம் கண்டு, அதனிடமிருந்து விலகி இடதுசாரியாகவே இருந்திருக்கிறார். பின்பு ஆயுத அரசியலை அடையாளம் கண்டு அவர் ஒதுங்கியதும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
இப்படி அவர் நடக்க என்னதான் காரணம்…? அவரது இடதுசாரி அறிவா அல்லது எழுத்தாளராக இருந்ததால் படித்த நூல்களில் பெற்ற அறிவா…?

இவைகள் இரண்டும் இருந்தவர்கள் பலர் அரசவைப் புலவர்களாகவும், தணிக்கை அதிகாரிகளாகவும் கைகட்டி சேவகம் செய்தார்களே…?

டொமினிக் ஜீவாவிடம் இவை எ ல்வாவற்றிற்கும் மேலாகச் சுயநலமற்ற நேர்மை இருந்துள்ளதே காரணம் என நினைக்கிறேன்.

டொமினிக் ஜீவாவை சந்தித்தபோது அவருக்கு நினைவு மறதி வருவதைப் புரிந்துகொண்டேன். ஆனாலும் ஜெயகாந்தன் கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக எழுதாதபோதிலும் சமூகத்தில் உதாரணமாக வாழ்ந்தார்.

முக்கியமாக சமூகப்பரிணாமத்தில் நத்தையாக ஊரும் தமிழ்ச்சமூகத்திற்கு , காய்க்காத பூக்காதபோதிலும் வழிகாட்டி மரங்களாக டொமினிஜீவா போன்றவர்கள் பல்லாண்டு வாழவேண்டும். அவரைப்பற்றி அப்பொழுது நாங்கள் எழுதும்போதும், பேசும்போதும் இளையசமூகத்தில் சில அசைவுகளையும் திருப்பங்களையும் உருவாக்கமுடியும் என்பதால் அவர் நீடுழி வாழவேண்டும்.
—0—

எழுதியவர் : (29-Jun-17, 4:14 am)
பார்வை : 38

மேலே