மாமன் மகளுக்கொரு மடல்
[] மாமன் மகளுக்கொரு மடல் ...
--------------------------------------------------------------
உலகமெல்லாம் தேடி திரிந்து
உள்ளுக்குள் கடவுளை கண்டவன் போல்
எங்கெங்கோ தேடி அலைந்து
கடைசியில் கண்டேனடி
சொந்தத்தில் என் சொர்கத்தை ..!
சொர்கமே -
ஒரு சொல்லில் தந்தாயடி
உலகின் மொத்த இன்பத்தை !
எத்தனையோ சொற்கள்
என் செவி் சேர்ந்ததுண்டு !
ஆனால் நீ சொன்ன சொல்லோ
என் இதயம் சேர்ந்ததின்று !
அச்சொல்லே என்னை ஆள்கிறது !
அச்சொல்லால் - வாழ்வில் நான்
இழந்ததெல்லாம் இன்று மீள்கிறது !
அச்சொல் - என்னுடனான
உன் உரையாடலுக்கு துவக்கம் !
அச்சொல்லே இனி எப்போதும்
எனக்கு உறுதுணையாக இருக்கும் !
இருண்டு கிடந்த வாழ்வுக்கு
ஒளி தந்த - அந்த
இரண்டு எழுத்து சொல் கேட்டு
புரண்டு படுத்தும் தூக்கமில்லை !
உன் இரண்டெழுத்து
சொல்லுக்கு முன் - அந்த
மூன்றெழுத்து சொல்லே பரவாயில்லை !
கேட்காமல் வாழ்வதை விட
கேட்டு விட்டு மரணிக்கலாம் !
உலக மொழியெல்லாம்
ஒன்றாக்கி - அந்த
ஒற்றை சொல்லை வர்ணிக்கலாம் !
நெடில் எழுத்து சொல் கேட்டால்
நெஞ்சம் எல்லாம் நெகிழ்கிறது !
நொடியில் ஒலித்து மறைந்தாலும்
மனம் மணிகணக்கில் மகிழ்கிறது !
அது அறிமுகமான
பழைய சொல் தான் என்றாலும்
புதுசுகம் தருகிறது
உன் இதழ் கடந்து வெளிபடுவதால் !
அச்சொல்லால் -
என்னை அழைக்க பார்க்கிறாயா ..!
இல்லை வளைக்க பார்க்கிறாயா ..!
அடிமை ஆகிறேன் உனக்கு
அந்த உன் சொல்லால் ..
அம்மா எனும் ஆதிச்சொல்லின்
கடை எழுத்தே - உன் சொல்லின்
முதல் எழுத்தும் கடை எழுத்தும் !
அன்பாய் அதை நீ உறைக்க
இனி மாறும் என் தலை எழுத்தும் !
மயக்கும் ; நன்மை பயக்கும்
மனதில் நிலைக்கும் சொல்லான -
மாமா என்று நீ அழைக்கும் போது
என் கோமா விழிகளும் விழிக்குமடி !
தன்னை அழுத்தும் சோகங்களை
மனம் அந்த நொடியே அழிக்குமடி !
சுமை இல்லா மனம் தந்த
சுகமானவளே -
பல சொல் கொண்டு
கவிதை செய்தாலும்
வெல்ல முடியவில்லையடி
உன் ஒரு சொல்லை ..!
இப்படிக்கு -
இவன் உன் மாமன் ..!
----------------------------------------------------------------------------
-யாழ் ..