விடுமுறை கால பள்ளிக்கூடம்

================================
திருவிழா முடிந்த ஆலயத்துள்
அடைபட்ட சிலைபோல
பயபக்தியுள் உறைந்து கிடக்கிறது
ஆசிரியரின் ஆசனம்.

குழந்தையில்லா பெண்போல
மாணாக்கரின்றி ஏங்குகின்றன
நாற்காலி மேசைகள்.

வரதட்சணைக்கு வகையற்ற
ஏழைக் குமரியைபோல்
கவனிப்பாரற்றுக் கிடக்கிறது
கரும்பலகை.

எப்போதும்போல் இல்லாவிட்டாலும்
மாதக் கடைசி நாட்களில்
வாகனங்களை வழிமறித்து
கிடைத்ததை வாங்கிக்கொள்ளும்
கைக்கூலி பேர்வழிகள்போல்
துடைப்பான்கள் மட்டும்
சேர்த்துக் கொள்கின்றன தூசிகள்.

நேர்த்திவைத்து நீண்ட
மௌனவிரதம் பூணும்
பக்தர்களாகவே மாறிவிடுகின்றது
மணி.

ஆராய்ச்சிக்கு வந்து
தப்பிப்போய் குடும்பமான
குதுகலிப்பில் பிள்ளைக்குட்டிகளோடு
ஆராய்ச்சி கூடத்தையே
ஆராய்கின்றன எலிகள்.

மழைக்காலமான போதும்
வறட்சியை அனுபவிக்கும்
விடுமுறை காலத்தில்
வெறிச்சோடி விடுகின்ற
பள்ளிக்கூட வானம்
மேகங்களைபோல மறுபடியும்
தவழத்தொடங்கும் மாணாக்கர்
வருகையில் ஆரம்பித்துக் கொள்கின்றது
தன் வசந்த காலத்தை.
.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Jul-17, 2:50 am)
பார்வை : 134

மேலே