புதைந்த கண்ணீர்

ஒட்டி ஒட்டி வளந்தவ - இன்று
ஒத்துக்கிட்டு போறவ!
தாலி கட்டி !அண்ணன - ஐய்யோ!
அழவச்சு போறவ!

பச்ச வயல் நடுவுல - அவ
ஓடி ஓடி வருகையில்
கால் தடுக்கி விழுந்தவ - என்னுசுரு
தூக்கி வாரி போட்டுச்சு!

ஒத்தையடி பாதையில் - தூக்குவாளி
தூக்கிக் கிட்டு வருகையில்
உச்சு வெயில் இருந்துமே - மனசு
அவ சிரிப்பில் குளுந்துச்சு!

அந்த நாள் வந்ததே - அவ
தாவணிக்கு மாறுனா!
வெட்கப் பட்டு பாத்தவ! - உசுரு
நிம்மதியா இருந்துச்சே!

ஓடி ஆடி திரிஞ்சவ - இன்று
ஒட்டி ஒட்டி நடக்குறா!
பொண்ணு குணம் வருகையில் - அவ
வானவில்லா தெரியுறா!

ஒட்டி ஒட்டி வளந்தவ - இன்று
ஒத்துக் கிட்டு போறா!
தலையாட்டி போறவ - மனச
ஒத்தி வச்ச போறா!

மாட்டு வண்டி போகையில் - உசுரு
கொஞ்சு கொஞ்சு கரையிதே!
அவ ஒத்தி வச்ச மனசு - என்ன
பாத்து பாத்து அழுகுதே!

சீதனத்த சுமந்து மாட்டு வண்டி - ஊரு
தாண்டி போகையில்
மனசு ஒத்தையடி பாதையில் - அவள
ஒப்புச் சொல்லி அழுகுதே!

அவ விட்டு போன கொலுசு - என்ன
பாத்து பாத்து கதறுது!
அவ தூக்கி வந்த தூக்குவாளி - என்
கண்ணீரே சுமக்குது

ரெட்ட ஜட போட்ட - அவ
ஒத்த நிலா காரி!
ஒத்த சுழி கொண்ட - அவ
நெட்ட புறா காரி!

ஒட்டி ஒட்டி வளந்தவ - இன்று
ஊரு தாண்டி போயிட்டா!
ஒட்டி இருந்த கண்ணீர - அவ
புதைச்சுக் கி்ட்டே போயிட்டா!

எழுதியவர் : (6-Jul-17, 8:04 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : buthaintha kanneer
பார்வை : 97

மேலே